நன்மை நல்கும் நாக பூஜை / நாகசதுர்த்தி சிறப்புக் கட்டுரை - 08.08.2024

கவான் தேவதைகளுக்கு பக்தர்களின் பூஜையை ஏற்றுக் கொள்வதற்காக ஒவ்வொரு நாளை ஒதுக்கி இருக்கிறான். கௌரிக்கு 'த்ருதீயை',  கணேசனுக்கு 'சதுர்த்தி',  முருகப் பெருமானுக்கு 'சஷ்டி', சூரியனுக்கு 'சப்தமி', பித்ருக்களுக்கு 'அமாவாசை' என்பதாக உள்ளது. அவ்வகையில் சேஷ மற்றும் நாகர்களுக்கு பஞ்சமி திதியை கொடுத்திருக்கிறான்.

புராணங்கள் ஸர்ப்ப வம்சம் மற்றும் நாக வம்சம் என்று தனித் தனியாக குறிப்பிடுகின்றன. அனைத்து நாகர்களுக்கும் தலைவரே ஸேஷ பகவான். எட்டு புகழ் பெற்ற நாகங்கள் முறையே ஸேஷன்,  வாஸுகி, தக்ஷகன், கார்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கபாலன், குலிகன் என்பதாக எட்டு திசைகளில் நிலைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணங்களை கொண்டு இருக்கின்றனர்.

வர்களில் ஸேஷ பகவான் மட்டும் வெள்ளை நிறத்தையும், மற்றவர்கள் சிவப்பு, மஞ்சள், கருப்பு வண்ணங்களை கொண்டிருக்கிறார்கள்.  கிருஷ்ண பரமாத்மா கீதையில் உரைத்துள்ளபடி வாஸுகியின் இடத்தில் பகவானின் விபூதி ரூபம் உள்ளது. அதேபோல் ஸேஷ பகவானிடத்தில் அனந்தன் என்ற பெயரிலே பகவானின் விபூதி உள்ளது. 

ஜாதகத்தில் யாருக்கு ராகு தோஷம் இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக இந்த நாகங்களை பூஜிக்க வேண்டும்.  தோஷங்கள் இல்லாதவர்கள்கூட நாக பஞ்சமி அன்று இந்த எட்டு நாகங்களை பூஜிப்பதினால்,  என்றென்றும் நாக தோஷங்களுக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ள இயலும்.

ந்த எட்டு நாகங்களை போல இன்னும் பல நாகங்களை பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. பாதாள லோகம் என்பது நாக லோகம் என்றே பிரசித்தியாக உள்ளது. மகாபாரதம் பீமஸேனன் நாகலோகம் சென்றதையும், பாகவதம் முதலான புராணங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா காளிங்கன் மீது நாட்டியமாடியது பற்றியும், அப்போது நாக லோக கன்னியர்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றன.  

சிவபெருமானும் பாம்பையே அணிகலனாக அணிந்துள்ளது பற்றி புராணங்கள் வர்ணிக்கின்றன.  அனைத்து நாகர்களுக்கும் ஸேஷ பகவானே தலைவனாக இருக்கிறார். நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று விசேஷமாக ஸேஷ பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும். 

ஸேஷ தேவரின் பூஜையை செய்வதனாலேயே அனைத்து நாகங்களும் திருப்தி அடைகின்றனர். மாத்வ சம்பிரதாயத்தில் ஸேஷ தேவரின் பூஜை  விசேஷமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிலும் நித்தியபடியாக செய்யக் கூடிய சாலிகிராம பூஜையின் அங்கமாக ஸேஷ பகவானுக்கும்கூட பூஜை செய்யப்படுகிறது.

ஸேஷ பகவான் பிரம்மாண்டத்தின் வெளியேயும்,  பிரம்மாண்டத்தின் உள்ளேயும் பகவானிடமிருந்தும் சதுர்முக பிரம்மனிடம் இருந்து பிறந்து இருந்தாலும், பின்னர் கத்ரு மற்றும் கஸ்யப தம்பதிகளுக்கு மகனாகவும் பிறந்தார். கத்ரு தேவி பிரசவித்த ஆயிரம் சர்ப்பங்களிலே இவரே முதலில் வெளிவந்தவர். 

வரே அனைவருக்கும்  மூத்தவர். இவரைத் தொடர்ந்து பிறந்த வாசுகி, ஐராவதம், தக்ஷகன், கர்கோடகன், தனஞ்சயன் முதலான சர்ப்பங்களையும் பூஜிக்க வேண்டும். பின்னர் ஸேஷ பகவான் அன்ன ஆகாரத்தை விளக்கி பதரிகாஸ்ரமத்திற்கு சென்று தவம் செய்யத் தொடங்கினார். 

ப்போது இவரின் தவத்திற்கு மெச்சி தரிசனம் அளித்த பிரம்மதேவர் இவரின் சாமர்த்தியம் மற்றும் பகவத் பக்தி இவற்றைக் கண்டு சமுத்திரம் மற்றும் நிலங்களால் கூடிய பூமியை தாங்கும் சேவையை செய்ய அருள் புரிந்தார். 

தே போல் பகவானும் ஸேஷ பகவானின் பக்தியை கண்டு தமது படுக்கையாகவும், ஆசனமாகவும், குடையாகவும் பாதுகையாகவும் செய்து கொண்டு சேவையை ஏற்றுக் கொண்டு உள்ளார். சேஷ பகவான் ஒரு ரூபத்தில் பகவானின் படுக்கையாகவும், மற்றொரு ரூபத்தினால் பூமியை தாங்கி பிடித்தும், வேறொரு ரூபத்தினால் பாதாள நோக்கத்தில் வாசமும் புரிகிறார். அந்த பாதாள லோகத்தில் தனது பத்தினியான வாருணி தேவியுடன் நிரந்தரமாக ஸங்கர்ஷண ரூபியான பகவானை அமர்த்தி ஆராதனை செய்து வருகிறார். 

ஸேஷ பகவானிடத்தில் ஸங்கர்ஷண ரூபி பரமாத்மாவின் ஆவேசம் உள்ளது. ஆதலால் ஸேஷ பகவானை வணங்குவதால் அனைத்து பாவங்களும் நாசமாகி மோக்ஷமும் கிடைக்கிறது என்று பாகவதத்தின் ஐந்தாம் ஸ்கந்தம் நமக்கு வழிகாட்டுகிறது. ஸேஷ பகவானை தினமும் முறையாக வணங்குவதாலேயே உண்மையான தத்வ ஞானம் மற்றும் வாக்கு வன்மை அடைவது சாத்தியம். 

தலால் பகவான் ஸ்ரீ வேத வியாசரேகூட மகாபாரதத்தின் துவக்கத்தில் ஸேஷ தேவரை வணங்கும்படியாக ஸ்தோத்திரங்களை அமைத்து நமக்கும் வழிகாட்டி உள்ளார். 

ஸ்ரீமன் மத்வாச்சாரியர் தமது தந்த்ரஸார ஸங்கிரஹத்தில் ஸேஷ பகவானை தியானம் செய்யும் போது "இடது வலது கைகளில் ஏர் மற்றும் உலக்கை ஆகியவற்றைத் தாங்கி, ஆயிரம் தலைகள் கொண்டு வெள்ளை நிறமாக கழுத்தில் வனமாலை தரித்து பத்னியான வாருணி தேவியுடன் ஸ்ரீஹரியின் பின்னால் கைகளை குவித்தவாறு நின்றிருக்கும் ரூபத்தை தியானிக்க வேண்டும்" என்பதாக விளக்கி உள்ளார். 

ட்சுமி நாராயணனின் விவாஹ காலத்தில் சேஷ தேவரே அமரும் மனையாக இருந்திருக்கிறார். அதேபோல் பகவானுக்கு படுக்கையான போது  ஸேஷ பகவானின் தெற்கு மற்றும் வடக்கு பக்கத்தில் இருக்கும் தலைகள் ஸ்ரீ ஹரியின் தலை மற்றும் கால்களுக்கு தலையணையாக இருக்கிறது. 

மேற்கில் இருக்கும் தலை விசிறியாக இருக்கிறது.  ஈசானிய மூலையில் இருக்கும் தலை பகவானின் சங்கு,  சக்கரம், கதை மற்றும் வாள் முதலான ஆயுதங்களை தரித்திருக்கிறது.

க்னி மூலையில் இருக்கும் தலை கதை, பத்மம், வில் ஆகிய ஆயுதங்களை தரித்திருக்கிறது. இப்படியாக பகவான் படுத்திருக்கும் ஸேஷ தேவரின் உருவத்தை மனதிலே தியானிக்க வேண்டும். ஹரிகதாம்ருதஸாரத்தில் 21ஆம் ஸந்தியில் ஸ்ரீ ஜகன்னாத தாஸர் தாரதம்ய க்ரமத்தில் ஸேஷ தேவரின் ஸ்தானத்தை குறிப்பிடும் போது "கருட பகவான், ஸேஷ பகவான் மற்றும் ருத்ர பகவான் மூவரும் ஐந்தாம் வகுப்பில் (கக்ஷத்தை) இருக்கின்றனர்;  இருப்பினும் ஸேஷ பகவான் ருத்ர பகவானைவிட சிறிது சிறந்தவர்.

ம்மூவரும் சரஸ்வதி மற்றும் பாரதி தேவியரைவிட 100 குணங்களால் குறைவாக இருக்கின்றனர்" என்பதாக வர்ணித்து உள்ளார். ஸேஷ பகவானின் வெவ்வேறு அவதாரங்களை நோக்குகையில்,  ஸ்ரீ ஹரி நாராயணனாக அவதரித்த போது,  ஸேஷ பகவான் நர ரூபத்தில் அவதரித்தார்.

ராமனாக அவதாரம் செய்த போது லட்சுமணனாக அவதரித்தார்; கிருஷ்ணாவதாரத்திலே பலராமனாக அவதரித்தார்.

ஸேஷ பகவான் முக்கியமாக ஜீவனின் ஸ்வரூபத்திற்கும், பிராணமய கோஷத்திற்கும், சரீரத்தில் இருக்கும் அகங்கார தத்வத்திற்கும் அபிமானி தேவதை. இவரே சந்தஸ்களுக்கும், பௌருஷேய கிரந்தங்களுக்கும் இவரே அபிமான தேவதையாகையால் மகாபாரதம், புராணங்கள் முதலான கிரந்தங்களை படிக்கும் போதும் ஸேஷ பகவானை வணங்க வேண்டும். பஞ்சராத்திரத்தில் புகழ்பெற்ற ஸேஷ ஸம்ஹிதை என்ற பாகமானது மிகவும் புகழ்பெற்றது. அனைத்து மந்திரங்கள் தந்திரங்கள் மற்றும் பூஜை விதிகள் அந்தந்த ஆசிரமத்திற்கு தக்க சம்பிரதாய பக்ததி முதலானவைகளை ஸேஷ பகவான் நாரதருக்கு இங்கு உபதேசம் செய்து உள்ளார். 

ஸ்ரீமன் மத்வாச்சாரியார் தமது சிஷ்யர்களுக்கு பிரம்ம சூத்திர பாஷ்யத்தை பாடம் சொல்லும் போது, ஸனகாதி முனிவர்களை அழைத்துக் கொண்டு ஆச்சாரியரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்தின் பாடத்தினை ஸேஷ பகவான் கேட்டதாக ஸ்ரீ நாராயண பண்டிதாசாரியர் ஸுமத்வ விஜயத்தின் பதினொன்றாம் ஸர்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீமன் மத்வாச்சாரியார் தம்முடைய தாத்பர்ய நிர்ணய கிரந்தங்களிலே குறிப்பிட்டுள்ளபடி ருத்ர பகவான் அடுத்த கல்பத்தில் ஸேஷ தேவரின் பதவியை பெற்று அதன் பிறகு முக்தியை அடைகிறார் என்பது அறியப்படுகிறது. 

ஸேஷ தேவரே முந்தைய கல்பத்தில் ருத்ர தேவராக இருந்துள்ளார். ஆகையால் ருத்ர அவதாரமான சுகாச்சாரியார், அஸ்வத்தாமாச்சாரியார் போன்றவர்களும்கூட ஸேஷ தேவரின் ஸ்வரூபமே ஆகின்றனர். நம்முடைய தேகத்தில் முக்கியமாக கர்ண குண்டலங்களில் ஸேஷ தேவரின் விசேஷ சன்னிதானம் இருக்கிறது. மேலும் பிராமண ரக்ஷணைக்காக அணியப்படும் ஒன்பது இலைகளில் மூன்றாம் இலையில் ஸேஷ தேவர் இருக்கிறார். 

ந்தியாவந்தனம், பூஜை, ஜபங்கள் செய்யும் போது ஆஸன ஸுத்திக்காக ஸேஷ பகவானை சிந்தனை செய்ய வேண்டும். பசுவின் வாலில் ஸேஷ பகவான் சன்னிதானம் கொண்டிருக்கிறான். ஆதலால் கோ பூஜையின்போது பசுவின் வாலை பூஜிக்கும் சமயத்தில்கூட ஸேஷ பகவானின் தியானத்தை செய்ய வேண்டும்.

யாகங்களிலும்கூட நாம் சமர்ப்பிக்கும் அனைத்து ஆஹுதிகளை பஸ்மம் செய்பவரும் ஸேஷ தேவரே என்பதால், இங்கும் ஸேஷ பகவானுக்கு ஆஹுதி அளித்து பூஜிக்க வேண்டும்.

"பிரம்ம ஞான யோகிகளுக்கும் அவர்களது சமாதி நிலையிலும்கூட முழுவதுமாக காண முடியாத சாஸ்திரங்களிலும் மறைபொருளான வேதங்களிலும் மட்டுமே காணக்கூடிய தன்னிகரில்லாத ஸ்ரீ ஹரியை தனது 2000 நாக்கினால் பரம பக்தியுடன் கொண்டாடுபவனும், அண்டமனைத்தும் பரவிய அந்த பரமனின் யோக நித்திரைக்கு படுக்கையாக சேவை புரிபவனுமான தேவ குரு நாகராஜனின் பாதங்களை மனதினால் எப்போதும் நமஸ்கரிப்பேன்" என ஜகன்னாத தாஸர் தமது ஹரிகதாம்ருதஸாரத்தில் தேவதா தாரதம்ய சந்தியில் பிரார்த்தனை செய்கிறார். 

சிராவண மாஸ ஸுக்ல பக்ஷ சதுர்த்தி மற்றும் பஞ்சமி தினங்கள் முறையே நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி, கருட பஞ்சமி பூஜை என முக்கியமான விரதங்களாக அனுஷ்டிக்கப்படுகின்றன. இது புருஷர்களும் ஸ்திரீகளும் செய்ய வேண்டிய பூஜை என்றாலும்கூட  ஸ்திரீயர்களுக்கு இது முக்கியமான விரதமாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகளின் க்ஷேமத்திற்காக தாய்மார்களுக்கும், குழந்தை இல்லாதவர்கள் தாய்மைப் பேற்றை அடைவதற்காகவும் இப்பூஜையை கண்டிப்பாக செய்ய வேண்டும். 

நாக சதுர்த்தி பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு சர்ப்ப பயம் வருவதில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது. முதலில் பகவான் ஸ்ரீ  ஹரிக்கு  (சாளகிராமம்) பூஜையை செய்து, லட்சுமி முக்ய ப்ராணர் முதலானவர்களுக்கு தீர்த்தத்தை அளித்து நைவேத்யம் செய்த பிறகு நாகராஜரின் ப்ரதிமைக்கு பூஜை செய்ய வேண்டும்.


நாக விக்ரஹங்களுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், இளநீர், சுத்தமான ஜலம் கொண்டு அபிஷேகம் செய்த பிறகு பகவானுக்கு சமர்ப்பணம் செய்த சந்தனம் அட்சதை போன்றவற்றையும்,  மஞ்சள் நிறத்தில் செய்யப்பட்ட கஜவஸ்திரம், பூணூல் (யஞ்ஞோபவீதம்), ஆபரணங்கள் போன்றவற்றையும் சமர்ப்பணம் செய்து, பகவானுக்கு சமர்ப்பித்த நிர்மால்ய புஷ்பத்தினால் அர்ச்சனை செய்து, தூபம், தீபம், நைவேத்தியம், மக்களாரத்தி,  நமஸ்காரம் போன்றவற்றுடன் இப்பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இதன் பின்னர் வீட்டு நிலை கதவுக்கு இரு புறங்களிலும் சுவரில் நாகர்களை வரைந்து பூஜையை செய்ய வேண்டும் என்று புராண வசனம் குறிப்பிடுகின்றது. 

நாக சதுர்த்தி அன்று பெண் குழந்தைகள் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து கொண்டு ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு நாக பூஜை செய்ய வேண்டும்.  ஸ்த்ரீகள் நாக சதுர்த்தி தினம் போஜனம் செய்வதில்லை. அன்று  உபவாசம் செய்ய வேண்டும். அவரவர்கள் குடும்ப வழக்கின்படி பலகாரம் செய்யலாம். ராத்திரியில் உபவாசம் அல்லது அல்ப ஆகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். 

ப்பு சேர்க்காத சம்பிரதாயம் உள்ளவர்கள், ரவா கேசரி, உப்பில்லாத தயிர் சேர்த்து தயாரித்த பலகாரம், பாயசம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நாக பூஜைக்கு பால் அபிஷேகம், பால் நைவேத்தியம் செய்திருப்பதால் இரவில் பால் உட்கொள்ளும் வணக்கம் இல்லை.

நாக சதுர்த்தியன்று உணவு உண்பவர்கள்கூட எண்ணெயில் பொறித்த பதார்த்தங்களை உண்ணக்கூடாது.  ஏனெனில் நாகங்களுக்கு இவை பிடிப்பதில்லை என்பதே ஆகும்.  நாகர் சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அன்று யாரும் இரவு மற்றும் பகல் வேலைகளில் பூமியை தோண்டக் கூடாது.


றுநாள், நாக பஞ்சமி (அ) கருட பஞ்சமி தினத்திலும் நாகராஜர் உடன் கருடனுக்கும் சேர்த்து பூஜை செய்வது வழக்கம்.  நாகராஜனும் கருடனும் உடன் பிறந்தவர்கள்.  நாகர் சதுர்த்தி அன்று செய்தது போலவே நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி தினத்திலும் நாகங்களுக்கு விசேஷமாக பூஜை செய்து குங்கும நீரினால் செய்த கஜ வஸ்திரத்தை சமர்ப்பித்து, குங்கும ஆரத்தி எடுத்து, பச்சை எள்ளுக்கு பதிலாக வறுத்த எள்ளைக் கொண்டு 'சிகிலி' எனும் இனிப்பு பதார்த்தம் மற்றும் பிற நைவேத்தியங்களை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஞ்சமி தினத்திலே உபவாசம் என்பது இல்லை. நாக பஞ்சமி விரத கதையில் சகோதரர்களை கௌரவிக்கும்படி குறிப்பிட்டுள்ளதால் இன்றும்கூட பெண்கள் தங்களது சகோதரர்களை அழைத்து உபசரிப்பது வாடிக்கையாக உள்ளது. தம்பதிகளுக்கு உணவு அளிப்பது போல பிரம்மச்சாரிகளுக்கும் உணவு அளிப்பதால் நாகங்களுக்கு ப்ரீதி உண்டாகிறது. 

நாகரின் புற்றுக்கு (பாம்பு புற்று) பூஜை செய்பவர்கள், ஒரு பிடி புற்று மண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து பிரசாதம் போல அதை எல்லோருக்கும் கொடுப்பது வழக்கம்.

தை வயிற்றிலும்  தொப்புள் மற்றும் காதுகள் மேலேயும் தடவிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. முக்கியமாக இதை சகோதரர்களுக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடன் பிறந்த சகோதரர்களுக்கு தீர்க்க ஆயுள்,  ஆரோக்கியம் இருக்க வேண்டும் என்று நாக பஞ்சமி பூஜையின்போது சகோதரிகள் பிரார்த்தனை செய்ய வேண்டும். சகோதரர்களோடு கோபம் துவேஷம் ஏதும் இல்லாமல் அன்புடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.  இதை மனதில் கொண்டு சகோதரிகள் சகோதரர்களுக்கு புற்று மண் மற்றும் நாக பஞ்சமி பிரசாதத்தை அன்புடன் அளிக்க வேண்டும். அதற்கு பதிலாக சகோதரர்கள் சகோதரிகளுக்கு  பரிசு பொருள்களை வழங்கும் வழக்கமும் உள்ளது.

வாரிசு இன்மை,  செல்வத்தை இழத்தல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பம் போன்றவற்றிற்கு நாக தோஷம் காரணமாக இருக்கலாம் என்பது சாஸ்திரங்களின் மூலம் அறியப்படுகிறது. ஆண்டிற்கு ஒரு முறை வரும் நாக சதுர்த்தி & நாக பஞ்சமி விரத பூஜையை பக்தியுடன் செய்வதனால், இத்தகைய துன்பங்களுக்கு பரிகாரம் காண முடியும். நாகங்களுக்காகவே இந்த ஒரு நாளினை பகவான் கொடுத்திருப்பதால் நாக பஞ்சமி அன்று மிகவும் சிரத்தையுடனும் பக்தியுடன் நாக ஆராதனை செய்ய வேண்டும். 

பாம்பினைக் கொன்றால் மட்டுமே நாக தோஷம் வருகிறது என்று இல்லை.  பாம்புகளின் வீட்டினை நாசம் செய்வதால்கூட தோஷம் வருகிறது. இங்கு பாம்புகளின் வீடு என்பது காடு,  மரங்கள், புற்று ஆகிய இடங்களையும் உள்ளடக்கியது ஆகும். இவற்றை முற்பிறவிகளில் நாசம் செய்திருந்தால்கூட சர்ப்ப தோஷம் வருகிறது.

நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி விரதங்களை அனுசரிப்பதினால், வாரிசு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், பிறந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களின் பரிகாரமும், நல்ல சம்பத்தும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும் கைகூடும். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷம், முற்பிறவியிலும் இப்பிறவியிலும் உண்டான ஸர்ப்பஹத்யா தோஷங்கள் முதலானவைகளும்கூட பரிகாரம் ஆகின்றது. 

ண்களின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 2,7,8ல் செவ்வாய் இருந்தாலும், பெண்களின் ஜாதகத்தில் 4,8,12ல் செவ்வாய் இருந்தால் வரும் செவ்வாய் தோஷமும்கூட நாகர்களின் ஆராதனையினால் பரிகாரம் ஆகிறது.

த்தகைய மிகுந்த பலன் அளிக்கும் நாக பூஜையை இடைவிடாது செய்து நாகராஜரின் அந்தர்யாமியான பாரதீ ரமண முக்யப்ராண அந்தர்கத ஸ்ரீ ஸங்கர்ஷண ரூபி பரமாத்மாவின் அருளுக்கு பாத்திரராவோமாக!!


✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


தேதி: 07.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்