ஆய கலைகளையும் கற்றுத்தேர்ந்தவர் விஜயீந்திர தீர்த்தர் / சிறப்புக் கட்டுரை

லியுகத்தில் வேண்டும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் காமதேனுவாகவும், கற்பக விருக்ஷமாகவும் விளங்கும் மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தரின் பரமகுருவான நவபிருந்தாவனத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தரின் குருதான் கும்பகோணக்ஷேத்திரத்தில் வீற்றிருக்கும் மகான் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். அவரை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர், 64 கலைகளில் வல்லவர்.  மத்வ மதத்தின் உன்னதமான 104 கிரந்தங்களை இயற்றியவர். ஸ்ரீ வியாஸராஜ தீர்த்தரின் அருளால் 'விட்டலனாக' அவதரித்து, 'ஸ்ரீ விஷ்ணு தீர்த்தராக' ஸன்யாஸ ஆஸ்ரமம் ஏற்று,  ஆறு முறை ஸர்வ மூல கிரந்தங்களையும், ஒன்பது  முறை ஸ்ரீமன் நியாய ஸுதா கிரந்தத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.

ஸ்ரீ விபுதேந்திர தீர்த்தரின் பரம்பரையில் உதித்த ஸ்ரீ ஸுரேந்திர தீர்த்தரால், ஸ்ரீ வியாஸராஜரிடமிருந்து தானமாக பெறப்பட்டு, 'ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தராக' பீடத்தை அலங்கரித்து தமது சேவையை தொடர்ந்தவர்.

காஞ்சிபுரம், காசி, மைசூர் ஆகிய இடங்களில் திக் விஜயம் செய்தவர்.  கோலாரில் மீமாம்ஸ பண்டிதருடனான வாதத்தில் வென்று ஸ்ரீ முக்ய ப்ராணரை பிரதிஷ்டை செய்தவர். கும்பகோண க்ஷேத்திரத்தில் ஸ்ரீ மங்களாம்பிகை அருளால் லிங்க ராஜேந்திரனை வாதத்தில் வென்று, அவரிடமிருந்து வைஷ்ணவ சைவ கோவில்களைக் காத்து நிர்வாகம் புரிந்தவர். விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராமராயர், தஞ்சாவூரின் செவ்வப்ப நாயக் போன்ற அரசர்களுக்கு ராஜ குருவாக விளங்கியவர். 

இதிகாச ஞானம், காவிய ஞானம், சிற்ப சாஸ்திரம் முதலான 64 கலைகளிலும் வல்லவர். அந்தந்த கலைகளிலும் நிபுணத்துவம் பெற்று விளங்கியவர்களுடனும் போட்டியிட்டு வென்றவர். மலையாள மாந்த்ரீகனுடன் மோடி வித்தையில் போட்டியிட்டு ஜெயித்துக் காட்டியவர். 

உத்திரப்பிரதேசத்து கூத்தாடியுடன் நடந்த போட்டியிலே, சாரங்கபாணி மற்றும் கும்பேஸ்வரர் கோவில் கோபுரங்களின் கலசங்களுக்கு நடுவே வாழை நாரின் மீது நடந்து காட்டியவர்.

சிற்பக் கலையிலே சிறந்து விளங்கிய பாண்டிய நாட்டின் நரசிம்ம வீர ராமருடன் போட்டியிட்டு அபூர்வமான சிற்பங்களை வடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர். வஞ்சகர்களின் சூழ்ச்சியால் தம்மை போட்டிக்கு அழைத்தவர்களின் முன்னாலேயே தன்னுடைய இந்திரிய நிக்ரஹத்தை (பிரம்மசரியத்தை) காண்பித்ததுடன், அவ்வேளையிலும்கூட நாராயண நாமத்தின் பொருளை கிரந்தமாக அருளியவர். 

ரத்தின பதக்கங்களை தயாரிப்பதில் வல்லவரான சதாராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷியுடன் போட்டியிட்டு, அபூர்வமான பதக்கங்களை வடித்து ஸ்ரீ ராமனுக்கு சமர்ப்பணம் செய்தவர். சைவ வைஷ்ணவர்களின் ஒற்றுமையைக் குலைக்கும்படியாக,  லிங்க ராஜேந்திரனின் சிஷ்யன் ஒருவன் குழப்பத்தை உருவாக்கும் வகையில் ஆயிரக்கணக்கான நந்தி மற்றும் சிவலிங்கங்களை குளத்திலே போட, அவை அனைத்தையும் முறையே ஸ்ரீ அனுமனாகவும், சாளக்கிராம  கற்களாகவும் தம்முடைய மந்த்ராக்ஷதை பலத்தினாலேயே மாற்றிக் காட்டியவர். 

தான்சேன் சிஷ்யனுடன் நடந்த போட்டியில் சங்கீதத்திலும், காஷ்மீரின் பிரசித்தியான பட்டு நூல் ஆடைகளைத் தயாரிக்கும் நெசவாளியுடனும் போட்டியிட்டு, அவர்களும்கூட வியக்கும் வண்ணம் தம்முடைய படைப்புகளை அளித்தவர். 

பாம்பாட்டியுடன் போட்டியிட்டு புல்லாங்குழல் நாதத்தினாலேயே அனைத்து பாம்புகளையும் ஒரே நேரத்தில் மதி மயக்கி ஆட்டம் காண வைத்தவர். ஜோதிட சாஸ்திரத்தில் நிபுணரான கேரளத்து பிரபஞ்சன சர்மாவுடன் போட்டியிட்டு அந்த ஜோதிடருக்கே அவரின் குழந்தை பிறக்கும் காலத்தை துல்லியமாக கணித்து முன்கூட்டியே எழுதி வைத்து ஆச்சரியப்படுத்தியவர். 

எதிரிகளால் ராமரின் பூஜைக்கான நைவேத்திய பதார்த்தத்தில் விஷம் கலக்கப்பட்டு, அதை பிரசாதமாக உண்ட பின்பு, ஷோடசபாகு நரசிம்மரின் மேல் அஷ்டகத்தை இயற்றி, அதன் பாராயண பலத்தினாலேயே விஷ பரிகாரம் கண்டவர்.  

சமஸ்கிருதத்தில் 104 கிரந்தங்களை இயற்றியதுடன், ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் கன்னடத்திலும், இன்னும் வேறு பல பிராந்திய மொழிகளிலும் எளிய முறையில் பக்தியையும் ஞானத்தையும் பாமரர்களுக்கும் சேர்க்கும் விதமாக,  'ஸ்ரீ விஜயீந்த்ர ராம' என்ற முத்ரையிலேயே பல பாடல்களை இயற்றியுள்ளார்.


97 வயது வரை ராமரின் பூஜையை செய்து கொண்டு, கிரந்தங்களை இயற்றி,  பக்தர்களுக்கு அருளைப் புரிந்து கும்பகோணம் க்ஷேத்திரத்திலேயே பிருந்தாவனஸ்தராகி இன்றும் வேண்டும் பக்தர்களுக்கு காமதேனுவாகவும் கற்பக விருக்ஷமாகவும் அருளை வாரி வழங்குகிறார், ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். குரு மஹனீயரின் பாதம் பணிவோமாக!!

       

                                           ✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 10.03.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

---------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்