முன்பே சொன்ன சாஸ்திரம்! / ஆசிரியர் பகுதி

ஆசிரியர் பகுதி


சமீபத்தில் பிரபல அரசியல் தலைவர் அண்ணாமலை, ``விரதம் இருப்பதால் கேன்சர் போன்ற கொடிய நோய் விலகுகிறது'' என்று பேட்டியில்கூற, அந்த வாக்கியம் பிரபலமானது. உடனே முற்போக்கு வாதிகள் என்று தங்களை தாங்களே நம்பிக்கொள்ளும் சில ஊடகவாதிகள், தாங்கள் வைத்திருக்கும் சேனல் மூலமாக மைக்கையும் கேமராவையும் தூக்கிக்கொண்டு நேராக அவர்களுக்கு தெரிந்த மருத்துவரை அணுகினர்.

``புல் ஷட்... யார் இப்படி சொன்னது? இது மூட நம்பிக்கை, இந்துத்துவாவின் திட்டமிட்ட சதி. பசுவின் மூத்திரக்குடி சங்கிகளுக்கு வேற என்ன வேலை?'' என மருத்துவர்கள் காரசாரமாக பேசுவார்கள் என்று நினைத்தனர். ஆனால், நடந்தது வேற.. ஆம்! மருத்துவர்களே.. விரதம் இருப்பதால், கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன. என்று கருத்துக்களை செல்ல ஆரம்பித்தனர்.

இதனால், முற்போக்கு ஊடகவாதிகள் கப்சிப் ஆனார்கள். இருந்தபோதிலும், சமூக ஊடகங்களில், விரதம் இருப்பதால் ஏற்படுகின்ற நன்மைகளை பற்றி மருத்துவர்கள் பேசத்தொடங்கினர்.

``கேன்சர் உருவாக காரணமாக இருக்கும் செல்கள் இயற்கையாகவே நமது உடலில் இருக்கிறது. ஒருவர் விரதம் இருப்பதினாலும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவதாலும் அந்த செல்கள் மாண்டுவிடுகின்றன. குறிப்பாக, சஷ்டி விரதம் போன்ற விரதம் காலங்களில், விரதம் இருப்பதால் பெரும்பாலும் கேன்சர் செல்களை வளராமல் தடுக்கின்றன'' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஆனால், விரதம் இருப்பதினால் இன்சுலின் அதிகளவில் சுரக்கப்பட்டு, நீரிழிவு நோய்க்கு வித்திடும் என்றும், காலையில் எழுந்தவுடன் பல் துலக்குறோமோ இல்லையோ... பிரேக் ஃபாஸ்ட் (Break fast) அவசியம் செய்ய வேண்டும் என்று சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆக, மருத்துவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் உள் அர்த்தம், அறிவியல் என்று சொல்லப்படுகின்ற சில கருத்துக்கள் நிலையாக ஒரே மாதிரி இருப்பதில்லை என்பது நன்கு விளங்குகிறது.

விரதம் இருப்பதினால் கேன்சர் போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன என்பதனை அண்ணாமலை கூறுவதற்கு முன்பே, நம் ஆச்சாரியர் ஸ்ரீ மத் மத்வாச்சாரியார் ``ஏகாதசி'' போன்ற விரதத்தை கடைபிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அவருக்கு பின்பும்கூட சில ரிஷிகளும், தேவர்களும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன்... நம் தாத்தா பாட்டிகள்கூட நமக்கு வயிறு சரியில்லை என்று சொன்னாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னாலோ, ``வயிற்றை லங்கனம் போடு'' (எதையும் சாப்பிடாமல் பட்டினியாக இரு) என்று சொல்லி நம்மை வழிநடத்துவார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பிரேக் ஃபாஸ்ட் (Break fast) கலாச்சாரம் எல்லாம் கிடையாது. நேராக 11:00 மணி அளவில் சாப்பாடு சாப்பிடுவார்கள். சிறிய குழந்தைகள் இருக்கும் வீட்டில், புட்டு, அவல் உப்மா போன்ற உணவை கொடுப்பார்கள். 

சிலர் வீட்டில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குழி பணியாரம், கேழ்வரகு - கம்பங் கூல், பழைய சாதம் (சாஸ்திரத்தை கடுமையாக பின்பற்றுவர்களுக்கு பொருந்தாது. காரணம் அவர்கள் பழைய சாதத்தை சாப்பிடுவதில்லை) என்று சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். அதே போல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் பொங்கல், பூரி போன்ற உணவை சமைப்பார்கள்.

தற்போது தலைகீழாக மாறிவிட்டது. ஆனால், ஒன்றை கவனித்தால் நமக்கு நன்கு புரியும். நம் மத்வ சம்ரதாயத்தின்படி, பிரேக் ஃபாஸ்ட் (Break fast) கலாச்சாரம் கிடையாது. சந்தியாவந்தனம், ஜபம், பூஜைகளை முடித்த பின்னர்தான் சாப்பிட வேண்டும். அதுவரை ஃபாஸ்டிங்தான். பூஜைகளை முடித்து சாப்பிட அமரும் போதே நேரம் 11:00 முதல் 12:00 ஆகிவிடுகிறது.

இரவில், இலகு ஆகாரம் என்று சொல்லக்கூடிய, எளிதில் ஜீரணமாகும், லைட் ஃபுட் (Light Food) மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டார்கள். மேலும், உணவில் உப்பு, உறைப்பு, புளிப்பு ஆகியவைகளை அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.


 ஆகையால், உடலில் இருக்கக்கூடிய டாக்சிக் (Toxic) தானாகவே வெளியேறிவிடுகிறது. இப்போதுள்ளதுபோல் போல், அப்போது எல்லாம் இத்தகைய கொடிய நோய்கள் கிடையாது. காரணம், சாஸ்திரத்தின் மூலமாக மத்வர் போன்ற ஆச்சாரியர்களும் நம் முன்னோர்களும் வழிவகை செய்திருக்கிறார்கள்.

முடிவாக, அறிவியல் என்பது நிலையானது கிடையாது. ஒவ்வொருவரின் கருத்தும் மாறுபடும். புதிது புதியதாக அறிவியல் கண்டுபிடிப்புகள் நடைபெற அவைகள் மாறிக்கொண்டே இருக்கும். மத்வர் அமைத்துக்கொடுத்த சாஸ்திரம் நிலையானது.

ஏகாதசி விரதம் ஒன்று போதும், நம் உடலில் தங்கியுள்ள டாக்சிக் (Toxic) வெளியேற! ஏகாதசி விரதம் இருக்கும் போது, அன்றைய நாட்களில் இருமுறை நம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதை நாம் கண்டிருப்போம். மேலும், உடல் பருமன் இருப்பவர்களையும், நோய்வாய் பட்டவர்களையும் மருத்துவர் டயட் (Diet) இருக்கச்சொல்வார்கள்.

எனக்கு தெரிந்து மருத்துவர்கள் கூறும் டயட் இருப்பது கடினம். ஆனால், மாதத்திற்கு ஒரு இரு முறை வருகின்ற ``ஏகாதசி விரதத்தை'' கடைபிடிப்பது மிகவும் சுலபம். உடல் படிபடியாக மெலிய ஆரம்பிக்கும். (60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்) புண்ணியத்திற்கு புண்ணியமும் ஆகிவிடும். டாக்சிக் (Toxic) வெளியேறிவிடும்.

நான் இங்கே குறிப்பிட விரும்புவது, சாஸ்திரம் மேலானது, அறிவியல் கீழானது என்பதல்ல. மாறாக, அறிவியல் எதை தற்போது குறிப்பிடுகிறதோ, அதனை சாஸ்திரம் முன்பே குறிப்பிட்டுவிட்டது!

✎ரா.ரெங்கராஜன் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 06.04.2026   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்