"தீராத நோயை தீர்க்கும் வைத்திய நரசிம்மர்"



Exclusive For Narasimmar Jayanthi - 04.05.2023

"தீராத நோயை தீர்க்கும் வைத்திய நரசிம்மர்"

யாதகிரி லக்ஷ்மி நரசிம்மர்

ரமாத்மா எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் அழகான அவதாரம், நரசிம்ம அவதாரம். ``அது என்ன அழகு? அவன் எடுத்த அத்துணை அவதாரங்களுமே அழகுதானே?" என்கின்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அனைத்து அவதாரங்களுமே அழகுதான் என்றாலும்கூட, நரசிம்ம அவதாரங்கள் அழகோ... அழகு என்று மகான்கள் குறிப்பிடுகிறார்கள். அதன், காரணத்தையும் கூறியிருக்கிறார்கள்.

அவதாரங்கள், பெரும்பாலும் அசுரர்களை வதம் செய்வதற்காகவே எடுக்கப்பட்டது. நரசிம்ம அவதாரம்கூட அப்படித்தான் என்றாலும், பிரகலாதன் என்னும் பக்தனுக்காக, அவனின் பக்தி வைராக்கியத்தை மெச்சி, அசுரர்கள் பிரகலாதனை வதம் செய்யும் போதெல்லாம், அவனை காத்தருளினானே..! அதைவிட, ``டேய் உன் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?'' என்று இரண்யன் பிரகலாதனிடம் கேட்கும் போது.

கோவிலின் கோபுரம்

 ``ஹரி... எங்கும் இருப்பவன். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்'' என்று பக்தியுடன் சொன்னானே.. அவனுக்காக நொடி பொழுதில் கம்பத்தை உடைத்து வெளியே வந்து நரசிம்ம அவதாரத்தை எடுத்தானே... ஆஹா... அதல்லவா அழகு! என்று மகான்கள் வர்ணிக்கிறார்கள்.

அப்படியொரு அழகிய நரசிம்மர்தான் ``யாதகிரி லக்ஷ்மி நரசிம்மர்".

திரேதா யுகம் நடக்கும் போது, யாத ரிஷி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் அனுமானின் அருள் பெற்று, நரசிம்மரை நினைத்து தவம் செய்து வந்தார். இவரது தவத்தால் மகிழ்ந்த நரசிம்மர், ஜ்வால நரசிம்மர், யோக நரசிம்மர்,  உக்கிர நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர், சாந்த நரசிம்மர் என பல வடிவில் தோன்றினார்.

இதனால் பிற்காலத்தில் ``பஞ்ச நரசிம்ம கோவில்" என பெயர் பெற்றது. பதினெட்டு புராணங்களில் ஒன்றான ``ஸகந்த புராணத்தில்" இந்த கோவிலை பற்றிய தகவல்கள் உள்ளது.

 கோவில் அலங்காரங்களும், பொருட்களும் 6 கி.மீ தொலைவில் இருந்தே அறியலாம். இந்த கோவில் பல ரிஷிகளால் வழிபட்டுள்ளதால் ``ரிஷி ஆராதன" ஷேத்திரம் என்ற மற்றொன்று பெயரும் உண்டு.

பக்தர்களின் தீராத நோயை தீர்ப்பதால், ``வைத்திய நரசிம்மர்" எனவும்  அழைக்கப்படுகிறார். அதைப்போல், தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பிடிக்கப் பட்டவர்களின்  துன்பங்களை அகற்றி, காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும் விளங்குகிறார். 

பல சமயங்களில், பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ முலிகைகளை தருவதும், பக்தர்களின் நோயை தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லாசியும் வழங்குகிறார்.

கோவிலின் தோற்றம்

ஒரு மண்டலம் அதாவது, 48 நாட்கள் விரதமிருப்பது மிகவும் விசேஷமானது. இங்கு ஆராதனைகளும், பூஜைகளும் பாஞ்சராத்திரம் நெறிகளின்படி பின்பற்றப்படுகிறது.

ஹனுமான், புவன யாதகிரி என்னும் இந்த திருத்தலத்தில் இருந்து, கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது, வந்த தடம், இப்போதும் மாறாமல் இருப்பதை, சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதே போல், இங்குள்ள குளத்தில்  எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் இருப்பதும் சிறப்பு.

தெலங்காணா அரசு, ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கி, கடந்த 2016-ஆம் ஆண்டு இக்கோவிலின் கட்டுமான பணிகளை  தொடங்கியது. இதற்கென ``யாததிரி கோயில் வளர்ச்சி குழு" ஒன்றையும் முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்தார். இந்த குழுவினரின் மேற்பார்வையில் கோயிலை பிரம்மாண்டமாக 14 ஏக்கர் பரப்பளவில் காக்கத்தியர் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.

இக்கோவில், மொத்தம் ஏழு கோபுரங்களை உள்ளடக்கியதாக விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில், 12 மிகப் பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் முகப்பில், ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மூலவர்: நரசிம்மர் 

எப்படி செல்வது: இந்த கோவில், தெலங்கானா மாநிலம், ஐதராபாதிலிருந்து 52 கி.மீ துரத்தில், புவனா யாததிரி மாவட்டதில் உள்ள யாதகிரிகுட்டா எனும் சிறு நகரதில் உள்ளது.

✏ ரா.ரெங்கராஜன்

கருத்துகள்