``நற்கதி அடைய நரஹரி தீர்த்தர்''

நற்கதி அடைய நரஹரி தீர்த்தர் 

சென்ற சில தினங்களுக்கு முன்பு, ``மன அமைதியை தந்தருளும் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர்'' என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை ``மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்" சார்பாக வெளியிட்டிருந்தோம். 

அதற்கு பலரும் தங்களின் மகிழ்ச்சியினையும், ஆதரவையும் தெரிவித்திருந்தீர்கள். சென்னையில் வசிக்கும் கிருஷ்ணாச்சார்@ கிருஷ்ணமூர்த்தி (Retired, Trichy B.H.E.L) அவர்கள் நம் பத்திரிகைக்கு  தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருவது மகிழ்ச்சி ! நன்றி !!!    

சரி..! இந்த பகுதியில் நாம் காணவிருப்பது, ``மகான் ஸ்ரீ நரஹரி தீர்த்தர்"

ஸ்ரீ நரஹரி தீர்த்தர் மூல பிருந்தாவனம் 

ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் போலவே, ஸ்ரீ நரஹரி தீர்த்தரும், மத்வ சம்ரதாயம் மற்றும் கிர்வாண பாஷாவில் ஒரு மிக பெரிய சிறந்த அறிஞர். அதே போல் இவரும், ஸ்ரீ மத்வாச்சார்யாவின் நேரடி பிரதான இரண்டாவது சிஷ்யராவார்.

தனது புலமை வாய்ந்த அறிவால் வேதத்தை மட்டுமின்றி, அவர் இயற்றிய ஹரி கீர்த்தனைகள் மூலமாகவும், பாகவத தர்மத்தைப் பிரசங்கம் செய்து, அன்றைய மத்வ மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தார். அதன் காரணமாக, அன்றைய மத்வ சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக மத மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றுகூட சொல்லலாம்.

 

ஸ்ரீ நரஹரி தீர்த்தரை கவனித்த அன்றைய அரசர்கள், நரஹரிக்கு சிறப்பு மரியாதைகளை செய்தது. ஆனால், அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் பற்றிய நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை. ``நரஹரியாதி ஸ்தோத்ரம்" என்றழைக்கப்படும் 13 ஸ்ரக்தாராக்களின் ஒரு சிறு துதி அவரது வாழ்க்கையைப் பற்றிய முழு விவரங்களையும் கூறுகிறது. 

இருப்பினும் அவை தெளிவாக காணப்படவில்லை. எனவே, வரலாற்று நோக்கங்களுக்காக அவை நம்பமுடியாதது. இருந்த போதிலும், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், கலிங்கத்தில் சில காலம் அமைச்சராக இருந்தார் என்று மட்டும் நமக்கு விளங்குகிறது.


``ஸ்ரீகூர்மம்'' மற்றும் ``சிம்மாசலம்" கோயில்களின் கல்வெட்டுகளில், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், சில காலம் அமைச்சராக இருந்தார் என்பதுக்கான  சான்றுகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், நரஹரியாதி ஸ்தோத்திரத்தில்,  தனது குருவான ஸ்ரீ மத்வாச்சாரியாரின் உத்தரவின் பேரில், கலிங்கத்திற்குச் சென்று, மூலராமர் மற்றும் மூல சீதை (புராண வரலாறு கொண்ட) சிலைகளை வாங்குவதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது எப்படி நடந்தது? ஒரு சந்நியாசி அமைச்சராவதா? என்கின்ற கேள்வி எல்லோரின் மனதிற்குள்ளும் எழும். அது பரமாத்மாவின் சங்கல்பம். அது சூக்ஷ்மம் மூலமாக மகான்களுக்கு தெரியும். அவை எப்படி நடந்தது என்பதனை நமக்கும் விவரிக்கிறது நரஹரியாதி ஸ்தோத்திரம்.


திடீர் என்று கலிங்க நாட்டு மன்னர் இறந்துவிட்டார். மன்னரின் வாரிசுக்கோ குறைந்த வயது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழல் அக்காலத்தில் ஏற்பட்டால், யானையின் தும்பிக்கையில்  மாலையை கொடுத்து, யாரின் மீது யானை மாலை இடுகிறதோ, அவர்களை முதன்மை அமைச்சராக்கிவிடுவது வழக்கம். அப்படித்தான் யானை, மாலையை ஸ்ரீ நரஹரிதீர்த்தரின் கழுத்தில் அணிவித்தது.                 . 

இது பகவானின் கட்டளை என்று புரிந்துக்கொண்ட ஸ்ரீ நரஹரி தீர்த்தர், அதனை ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு, மன்னரின் வாரிசுக்கு இளவரசர் ஆகும் தகுதி வந்தவுடன், அவருக்கு பட்டத்தை கொடுத்துவிட்டு, தனது பதவியைத் துறந்தார்.


ஸ்ரீ நரஹரி தீர்த்தர், கலிங்க மற்றும் ஆந்திரப் பகுதிகளின் பல சமஸ்தான மற்றும் பிரபுத்துவ குடும்பங்களை மத்வ மடமாக மாற்றுவதற்கும் காரணமாக இருந்தார். இந்தக் குடும்பங்களின் வழிவந்தோர், இன்றும் கடலோர ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் செழித்து வாழ்ந்து வளர்ந்து வருகின்றன.

இவர் பல பாடல்களை ஹரியின் (பகவான்) மீது இயற்றியுள்ளார். ஆனால், ​​அவருடைய மூன்றே  மூன்று பாடல்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

அவை, 'எந்து மருளாதே நானெந்து', `ஹரியே இது சரியே..' மற்றும் 'திளியோ நின்னளொகே நீனே'  என்பதாகும்.

ஸ ஸீதா மூலராமார்சா
கோஶே க₃ஜபதே꞉ ஸ்தி₂தா
யேனானீதா நமஸ்தஸ்மை ஶ்ரீமந்ந்ருʼஹரிபி₄க்ஷவே 

அவரது மூல பிருந்தாவனம் ஹம்பியில் அமைந்துள்ளது.

கர்நாடக மாநிலம், பல்லாரியில் இருந்து சுமார் 61 கிலோ மீட்டர் தொலைவில் ஹம்பி இருக்கிறது.

தொகுப்பு:ரா.ரெங்கராஜன்  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்