வியக்கவைக்கும் வேத வியாசர் / பகுதி – 1

 வியக்கவைக்கும் வேத வியாசர்

பகுதி – 1

ஞான காரியத்திற்காக பகவான் அவதரித்த கபில, தத்தாத்ரேய, ஹயக்ரீவ ரூபங்களை போல, ஸ்ரீ வேத வியாசரும் ஞான காரியத்திற்காக அவதரித்தவர். 

வேதங்களைப் பிரித்தாளுவதால் வேத வியாசர் எனப்படுகிறார். வெவ்வேறு மஹாயுகங்களில், வெவ்வேறு தேவதைகள், வேத வியாசராக அவதரிக்கின்றனர். 

ந்த கல்பத்தில், 28-வது மஹாயுகத்தில் த்வாபரயுகத்தில் ஸாக்ஷத் ஸ்ரீமன் நாராயணனே, ``கிருஷ்ண த்வைபாயனர்" என்னும் வேத வியாசராக அவதரித்து, வேதங்களை விபாகம் செய்து, பிரம்ம ஸூத்திரம், புராணங்கள் மற்றும் உபபுராணங்களையும் இயற்றி, `பஞ்சம வேதம்' அல்லது `ஐந்தாம் வேதம்' என்று போற்றப்படுகிற ஸ்ரீமன் மஹாபாரதத்தையும் இயற்றியுள்ளார்.

 ஸ்ரீமத் ஆனந்த தீர்த்த பகவத்பாதாச்சாரியர், வேத இதிகாச புராணங்களில் இருந்து, மேற்கோள்கள் காட்டி ஸ்ரீ வேத வியாசர், ஸாக்ஷத் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் என்பதை தமது ஸர்வ மூல கிரந்தங்களில் நிர்ணயம் செய்து உள்ளனர். ஆச்சாரியரின் பரம்பரையில் வந்த பல்வேறு டீகா மற்றும் டிப்பணிகாரர்களும், தாஸர்களும் வேத வியாசரைத் தங்களது கிரந்தங்களிலே துதித்துள்ளனர். முன்னால் வரக்கூடிய கல்பத்தில் அஸ்வத்தாமர் வேத வியாசராகிறார்.

ஸ்ரீ வேத வியாசர், பராசர முனிவர் - ஸத்யவதி தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். பராசர முனிவர், வேத வியாசரின் அவதாரம் என்னும் உத்தம காரியத்திற்காக தியானம் மேற்கொண்டு, உத்தமியும் தபஸ்வினியும், நறுமணம் கொண்ட தேக காந்தியுடைய ஸத்யவதியுடன் கூட, அந்தக் கணத்திலேயே யமுனை நதிக்கு நடுவினின் ஒரு தீவினில் ஸ்ரீ மன் நாராயணனே வேத வியாசராக அவதரித்தார். 

பிறந்த உடனேயே அவர் 7 வயது பாலகனாக மாறினார். லோக தர்மத்தை காண்பிக்கும் பொருட்டும், அஸூர மோஹனத்திற்காகவும் உடனே தந்தையிடமிருந்து உபநயன ஸம்ஸ்காரத்தை செய்து கொண்டார்.

 ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தைப் போலவே, தனது திவ்ய ஸ்வரூபத்தைத் தமது தாய் தந்தைக்கு உபதேசித்தார். மேலும், அவர்கள் எப்போது நினைத்தாலும் அந்தக் கணம் அவர்கள் முன் காட்சி தருவதாக வரமளித்தார். யமுனை நதியின் தீவினில் பிறந்தமையால் `த்வைபாயனர்' என்றும், வேதங்களை நான்கு பாகங்களாக பிரித்ததினால் `வேத வியாசர்' என்றும் பத்ரியில் நிலைத்திருப்பதால் `பாதராயணர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ வேத வியாசர் வேதங்களை, ``ரிக்'', '`யஜூர்`', '`ஸாம'' மற்றும் ``அதர்வண'' என நான்காக பிரிந்து, அதில் ரிக் வேதத்தை 24 பிரிவுகளாகவும், யஜூர் வேதத்தை 101 பிரிவுகளாகவும், ஸாம வேதத்தை 1000 பிரிவுகளாகவும் மற்றும் அதர்வண வேதத்தை 12 பிரிவுகளாகவும் விபாகம் செய்து அருளியுள்ளார். 

வேதங்களை 4 பாகங்களாக பிரித்ததுடன், அந்த வேதங்களின் உட்பொருளை விளக்கும் பிரம்ம மீமாம்ஸ சாஸ்திரத்தை விளக்கும் வகையில் பிரம்ம ஸூத்திரத்தை (562 ஸூத்ரங்கள்) இயற்றினார்

நிர்ணய சாஸ்திரம் என்று போற்றப்படுகின்ற பிரம்ம மீமாம்ஸ சாஸ்திரமானது ``பரவித்யை" என்றே அழைக்கப்படுகிறது. வேதங்களின் சாரத்தை எளிதாக விளக்கும்படியாக புராணங்கள் மற்றும் உபபுராணங்களையும் படைத்தார்.

மேலும், அனைத்து வேத, உபநிஷத்துக்களின் சாரத்தை, ஏன் வேதங்களைக் காட்டிலும் உத்தமமான ``ஐந்தாவது வேதம்'' என்று போற்றப்படுகின்ற ``ஸ்ரீமத் மகாபாரதம்'' என்னும் இதிகாசத்தை இயற்றினார். பின்னர் அதனை பிரம்மா, ருத்ரர் முதலான தேவதைகளுக்கும் தானே உபதேசம் செய்தார். 

திலும் கௌரவ - பாண்டபவர்கள் பிறக்கும் முன்பே மகாபாரதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை இயற்றியுள்ளார் என்பது விசேஷம். இதுவும் நிர்ணய சாஸ்திரமாக உள்ளது.

 

ஸ்ரீ வேத வியாசர் மஹாபாரத கதா பாத்திரங்களிலும், முக்கிய ஸ்தானத்தை வகித்துள்ளார். தனது தாயான ஸத்யவதியின் கட்டளைக்கிணங்க திருதராஷ்டிரன், பாண்டு ராஜா மற்றும் விதுரர் போன்றவர்களின் பிறப்புக்கு காரணமாய் இருந்தவர். காந்தாரி, குந்தியின் மேல் கொண்ட பொறாமையினால், தனது கர்ப்பத்தை கிழித்து எறிந்த போது, அதை நூறு குவளைகளில் வைத்து அபிமந்த்ரனம்  செய்து, அவற்றிலிருந்து கௌரவர்கள் 100 பேரை பிறக்கும்படி செய்தவர். 

ஹிடிம்பன் என்னும் அசுரனின் மகளான ஹிடிம்பியின் யோக்கியதையை அறிந்து பீமசேனரிடம் அவளை விவாஹம் செய்துக்கொள்ள அறிவுறுத்தியவர். மகாபாரத குருஷேத்திரத்தின் யுத்தத்தின் போது, திருதராஷ்டிரனின் தேரோட்டியான சஞ்சயனுக்கு ஞான திருஷ்டியை அளித்து, அவனிருக்கும் இடத்திலிருந்தே யுத்த நிகழ்வுகளைக் கண்டு திருதராஷ்டிரனுக்கு கூறும்படி அருள் புரிந்தவர். 

யுத்தத்தின் முடிவில் ஆயுதங்களால் அங்கஹீனம் மற்றும் காயமடைந்தவர்களைத் தமது யோக சக்தியினால் குணப்படுத்திக் காட்டியவர். இதன் மூலமாக தாம் ஸர்வோத்தமன் என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளார்.

 

ஸ்ரீ வேத வியாசர், அசுர மோஹனத்திற்காக கிருதாசியை மோஹித்தது போல், காண்பித்துக் கொண்டு, ஸ்ரீ ருத்ர பகவானின் பிரார்த்தனைக்கு இணங்க அவரை ஸூகபிரம்ம ரிஷியாக பிறக்க வைத்தவர். 

ஸ்ரீ ஹரியின் சேவைக்காக ஸ்ரீ வாயு பகவானும் அங்கு சேர, அவருக்கு அனைத்து வேதங்கள், பாரதம், பாகவதம் முதலான வைஷ்ணவ புராணங்களையும் உபதேசித்தார். மேலும், ஸூகபிரம்ம ரிஷியை பூலோகத்திலும், கந்தர்வ லோகத்திலும் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார். நாரதருக்கு உபதேசம் செய்து அவரை தேவ லோகத்தில் பிரச்சாரம் செய்ய வைத்தார்.

 -  வியப்பு தொடரும்... (பகுதி - 2)

🖋️: ``பிரசங்க பூஷணம்", ``பிரவசன பூஷணம்", ``மத்வ ரத்னா" எஸ்.லக்ஷ்மிபதிராஜா, மேடவாக்கம், சென்னை     

 

லக்ஷ்மிபதிராஜா ஓர் அறிமுகம்:

எஸ்.லக்ஷ்மிபதிராஜா
தற்போதுள்ள மத்வ மக்களுக்கு வழிக்காட்டி என்றே சொல்லலாம். உபன்யாசத்தில் சிறந்து நன்கு பேசக் கூடியவர். அதுவும், தமிழில் மத்வ சித்தாந்தத்தை எடுத்து சொல்வதில் கைதேர்ந்தவர். இவரின் உபன்யாசத்தை கேட்டவர்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை (நான் உட்பட) பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். மடிப்பாகியாக்கத்தில் நடக்கும்  பல ஸத்சங்க நிகழ்ச்சிகளை முன்னிலையில் இருந்து நடத்திக்கொடுப்பார்.


சில காலமாக எழுத்துலகிலும் காலடிப்பதித்து வருகிறார். அவரின் பிரத்தேக பிளாக்குகளில் எண்ணற்ற பல அறியப்படாத மத்வ மகான்களை பற்றி எழுதியும், உபன்யாசம் செய்தும் வருகின்றார். அந்த வகையில், மத்வாச்சார்யா தமிழ் மேகஸின்காக "வியக்கவைக்கும் வேத வியாசர்" என்னும் கட்டுரையை வழங்கியதற்கு மிக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...

 - ஆசிரியர் 

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்