ஆடியும், பண்டிகைகளும் / தேங்காய் சுடும் வினோத பண்டிகை!

ஆடி தேங்காய் சுடும் பண்டிகை

டி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப் பட்டாலும், ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதியில் ஆடி முதல் நாள் கொண்டாட தனியாய் ஒரு பண்டிகை உண்டு. 

அதன் பெயர் தேங்காய் சுடும் பண்டிகை. இந்த தேங்காய் சுடும் பண்டிகை தோன்றியது மகாபாரத காலத்தில், அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம், ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் தொடர்ந்து, ஆடி-18 அன்று முடிவுக்கு வந்ததாம்.

அதர்மத்திற்கெதிரான போரில், தர்மம் வெல்ல வேண்டுமென்று, போர் தொடங்கும் நாளன்று அதாவது, ஆடி மாதம் முதல் நாளன்று பாண்டவர் படையை சேர்ந்த வீரர்கள், விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமெனவும், தாங்கள் பத்திரமாய் வீடு திரும்ப வேண்டுமெனவும் வேண்டிக் கொள்ள முடிவெடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார்களாம்.

போர்க்களத்தில் பாத்திரம் ஏது?! காய்கள்தான் ஏது?! கைக்கு கிடைத்த தேங்காய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து நெருப்பில் சுட்டு, அதை இறைவனுக்கு சமர்பித்து போரில் வென்றதால், அன்றிலிருந்து ஆடி ஒன்றன்று இப்படி தேங்காய் சுடும் பூஜை உண்டானதாம்.

முற்றிய தேங்காயினை எடுத்து, நன்றாக மழுமழுவென வருமளவிற்கு தேய்த்து, (சபரிமலைக்கு இருமுடி கட்டும்போது தேங்காயினை தேய்ப்பதுபோல்) முக்கண்ணில் ஒரு கண்ணினை உடைத்து, உள்ளிருக்கும் நீரினை வெளியேற்றி, பச்சரிசி, நாட்டு வெல்லம், வறுத்த எள், உடைத்த பச்சைப் பயிறினை முக்கால் பங்கும், தேங்காயிலிருந்து வெளியேற்றிய நீர் கால்பங்கும் சேர்த்து தேங்காய்க்குள் திணித்து, அழிஞ்சில் குச்சியை சீவி, திறந்த தேங்காய் கண்ணில் சொருகி, மஞ்சள் பூசி நெருப்பினில் சுடவேண்டும்.

சுட்ட தேங்காயினை, கோயிலுக்கு எடுத்துச் சென்று உடைத்து, சாமிக்கு வைத்து வழிபட வேண்டும். தேங்காய்யில் நாட்டுச் சர்க்கரையின் ருசி ஏறி, எள், தேங்காய் வாசனையோடு மணமும் ருசியுமாய் அமர்க்களமாய் இருக்கும். அந்த பண்டத்தினை போலவே தங்கள் வாழ்வும் இனிப்பு மணமும் கொண்டதாய் இருக்கும்மென அவர்களின் நம்பிக்கை.

திருமணத்தடை நீக்கும் பெண்களின் ஆடிப்பூர விரதம்

திருமணத்தடை உள்ள பெண்கள் ஆடிப்பூரம் அன்று விரதம் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால், அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள். பூமாதேவி அவதரித்த மாதமும் இந்த ஆடி மாதம்தான். அதாவது, ஆண்டாள் அவதரித்த அந்த நன்னாள்தான் ஆடிப் பூரமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடிப் பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். திருமணத்தடை உள்ள பெண்கள், ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால், அவர்களுக்கு திருமண பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.

மாங்கல்ய பலம் அதிகரிக்க

டி செவ்வாயும், ஆடி வெள்ளியும் பெண்கள் அதிகளவில் ஆலயத்துக்கு வரும் நாட்களாகும். ``ஆடி செவ்வாய் தேடி குளி. அரைத்த மஞ்சளை பூசி குளி’’ என்று சொல்வார்கள். ஆடி மாதத்து செவ்வாய்க் கிழமைக்கு அந்த அளவுக்கு மகத்துவம் இருக்கிறது. ஆடி செவ்வாய் தினத்தன்று பெண்கள், மா விளக்கு போடுவதும், திருவிளக்கு பூஜை செய்வதும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதும், செவ்வரளி பூக்கள் வழிபாடு செய்வதும் அதிகமாக நடைபெறும். இதன் மூலம் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்