``துளசி... துளசி.. எந்து ஸ்மரணெயாதரு மாடி'' துன்பங்களை போக்குவாள் துளசி - பகுதி - 1

நம், ஸ்ரீ ஹரிக்கு மிகவும் பிரியமானது துளசி. நாம் செய்கின்ற ஸ்ரீ ஹரியின் பூஜைக்கு மிக முக்கியமானவை துளசி. ஸ்ரீ தன்வந்தரி ரூபி பரமாத்மாவின் ஆனந்த பாஷ்பத்திலிருந்து ஜனித்தவள் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஸ்ரீ விஜயதாசர், தன்வந்தரி ஸுளாதியில், ஸ்ரீ தன்வந்தரியைத் துதிக்கையில், ``ஸ்ரீ துளசி ஜனக'' என வர்ணனை செய்துள்ளார். ஸ்ரீ ஹரியின் பூஜைக்கான பதார்த்தங்களான ஜலம், புஷ்பம், கந்தம் முதலானவகைகளில் உள்ள ஸ்ரீ ஹரியின் ஸன்னிதானத்தை, ஹரிகதாம்ருத ஸாரம் - விபூதி ஸந்தியிலே வர்ணித்துள்ள ஸ்ரீ ஜகன்னாத தாஸர், ஸ்ரீ துளசியில், ஸ்ரீஹரி 5317 ரூபங்களில் ஸன்னிதானம் கொண்டுள்ளதை, ``மூரெரடு ஸாவிரத மேல் முன்னூரஹதினேளெனிப ரூபவு ஸ்ரீ துளசி தளதி'' என்பதாக விளக்கியுள்ளார்.

எல்லாத் தீர்த்தங்களும் எல்லாத் க்ஷேத்திரங்களும், எல்லா தேவதைகளும், வேத சாஸ்திரங்களும்கூட ஸ்ரீ துளசியில் ஸன்னிதானம் கொண்டுள்ளதை, ``யன்மூலே ஸர்வதீர்த்தானி யன்மத்யே ஸர்வ தேவா: யதக்ரே ஸர்வ வேதாஸ்ச துளசி த்வம் நமாம்யஹம்'' போன்ற ஸ்தோத்திரங்களிலும், ``மூலதலி ஸகல தீர்த்தகளுண்டு தன்மத்யதலி காலமீரதெ நதநதிகளு தேவகண மேலே தள ஒந்தொந்தரலி ஒந்தொந்து மூருதியு வாலயவாகி இஹவு'' என ஸ்ரீ விஜய தாஸரின் ஸ்ரீ துளசி பற்றிய தாஸ ஸாஹித்யத்திலும் காணலாம்.

பகவான் கீதையில், ``பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி" எனத் தமக்கு பக்தியுடன் ஸமர்ப்பிக்கப்படுகின்ற ஓர் இலை, புஷ்பம், பழம் மற்றும் ஜலம் போன்றவற்றைதான், ப்ரீதியுடன் ஏற்று அனுக்ரஹம் புரிவதாகக் கூறுகையில், பகவான் இங்கு பிரதானமாக குறிப்பிட்டுள்ளது ஸ்ரீ துளசி தளத்தையே ஆகும் என அறிய வேண்டும். ஆதலால்தான் ஸ்ரீ ஹரியின் பூஜையில் அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் மற்றும் சமர்ப்பணம் என அனைத்திலும் அங்கம் வகிக்கும் மிக இன்றியமையாத வஸ்துவாக ஸ்ரீ துளசி உள்ளது. 

எவ்வளவு மிக விலை உயர்ந்த பதார்த்தங்கள் மற்றும் வைபவங்கள் இருப்பினும் ஸ்ரீ துளசி இல்லாத பூஜையை ஸ்ரீஹரி ப்ரீதியுடன் ஏற்பதில்லை என்பதை ஸ்ரீ புரந்தரதாசர் ``ஒல்லனோ ஹரி கொள்ளனோ எல்ல ஸாதனவித்து ஸ்ரீ துளசி இல்லத பூஜெ'' என்ற பதத்தினால் குறிப்பிட்டுள்ளார்.

``துளசி இல்லத தீர்த்த எந்தித்தரு வ்யர்த்த", ``துளசி இல்லத பூஜெ நரகக்கிளுவோ ஹாதி'' என்பதாக ஸ்ரீ விஜய தாஸரும், துளசி இல்லாமல் செய்யும் பூஜை, தீர்த்தம், நைவேத்தியம் என அனைத்தும் வ்யர்த்தம் என்பதாக விவரித்துள்ளார். ``தளவித்தரே ஒளிது, இல்லத்தித்தரே காஷ்ட, எலெ ம்ருத்திகெகளிந்த பூஜெ மாடலுபஹூது, துளசி ஒணகித்தரு லேஸ தோஷகளில்ல, துளசி விரஹிதவாத பூஜெயது ஸல்லது''

``துளசி துளசி எந்து ஸ்மரணெயாதரு மாடி'' என்பதாக துளசி இல்லை எனில் துளசிகாஷ்டம். அதுவும் இல்லை எனின் துளசி இருந்த இடத்தின் மண் (மிருத்திகை) அதுவும் இல்லை எனில் ``துளசி துளசி'' என அழைத்து ஸ்மரணையுடன்கூட பூஜை செய்திடினும், ஸ்ரீ ஹரி ஏற்கிறான் என்பதை ஸ்ரீ விஜயதாசர் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். அதே போல், ``துளசி துளசி எந்து கூகிதரெ நம்ம புரந்தர விட்டல ஒலிவா'' என்பதாகக் குறிப்பிடுகிறார். 

12 கோடி ஸ்வர்ண புஷ்பத்தை சமர்ப்பணம் செய்வதைக் காட்டிலும் பல மடங்கு பலன், பக்தியுடன் துளசி தளத்தைக் கொண்டு ஸ்ரீ ஹரிக்கு கத்தோதகத்துடன் அபிஷேகம் செய்து பூஜிப்பவர்களுக்கு, பகவான் முக்தியையே அளிக்கிறான் என்பதை ஸ்ரீ புரந்தரதாசர் ``ஓந்து தள ஸ்ரீ துளசி பிந்து கந்தோதகவ இந்திரா ரமணகெ அர்பிதவென்னலு" என்ற பதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்...)

                                                  

                                                   


                                                      🖋️: ``பிரசங்க பூஷணம்", ``பிரவசன பூஷணம்",``மத்வ                                                   ரத்னா" எஸ்.லக்ஷ்மிபதிராஜா, மேடவாக்கம், சென்னை

தேதி:20.07.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027      

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்