அனைத்தையும் அருளும் அனந்தசயன அரங்கநாதர் / அனந்த விரதம் - 28.09.2023

இயற்கையாக அமைந்த ஒரு பெரிய பாறையில் சயன கோலத்தில் புடைப்புச் சிற்பமாக காட்சி தரும் அரங்கநாதர் சமீபத்தில் பக்தர்களுக்கு காட்சி தர தன்னை வெளிப்படுத்தியுள்ளார். எத்தனையோ நூற்றாண்டுகளாக புதர் மறைவில் காணப்பட்ட இச்சிற்பம் தற்போது, அவற்றையெல்லாம் அகற்றி, சுத்தமாக்கி வழிபட ஆரம்பித்துள்ளனர் ஊர்மக்கள். 

ஐந்து தலை ஆதிசேஷனாகிய அரவணையில் சயன திருக்கோலத்தில், அந்தப் பாறையை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு சுமார் 7 அடி அளவில் நான்கு திருக்கரங்களுடன், ஒரு கை தலை தாங்க, மற்றொரு கரத்தில் மணி மாலையும், மற்ற இரு கரங்களும் முழங்கால் வரை நீண்டுள்ளது. அகன்ற மார்பில் முத்தாரம், வனமாலைகள் புரள்கின்றன. தலையில் பெரிய கிரீடமும், தலை அருகே சக்கரமும், இடது கரம் அருகே சங்கும், கணுக்கால் அருகே கதாயுதம் அமைந்துள்ளது.


 தலை அருகே ஆனைமுகன், ஸ்ரீதேவியும், வயிற்றுப் பகுதி மேல் மூன்று முகங்களுடன் பிரம்மாவும், வலது கால் பாதத்தில் அருகே பூதேவி சமேதராக தைலகாப்பு இல்லாமல் பெருமாள் நிஜமாகவே சயனித்திருப்பது போல் காட்சியளிக்கிறார். 

இப்போது தொட்டு தரிசிக்கும் அளவில் உள்ள அரங்கன், விரைவில் எட்டிப்பார்த்து தரிசிக்கும் அளவுக்கு முன்புறம் ஆலயம் அமைத்து விடக்கூடும்!என்ற அளவில் அந்தப் பகுதியில் பிரபலமாகி, பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர். பிரபல ஆலயம் போல் இல்லாமல், கூட்ட நெரிசல் இன்றி அமைதியாக உள்ளது. விரைவில் சென்று தரிசிக்கவும். சின்ன கீசகுப்பம், மேல்பாடி, ராணிப்பேட்டை, வேலூர். சின்ன கீசகுப்பம் சென்று யாரிடம் வழிக்கேட்டாலும் சொல்வார்கள்.

                                                                                                                                  - பாலகணபதி

தேதி: 26.09.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்