கிருஷ்ணரை பற்றி வாதிராஜர் கூறியது / ஸ்ரீ வாதிராஜரின் தசம ஸ்கந்த பாகவதம்
![]() |
ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் மூல பிருந்தாவனம் - ஸோதே |
முதலில், ஸ்ரீ வாதிராஜர் ‘நெனெவெனனுதின நீல நீரத வர்ணன குண ரன்னன, முனி ஜனப்ரிய முத்து உடுப்பிய ரங்கணா தயா பாங்கன’ என்ற பல்லவியுடன் தொடங்கி, அனுதினமும் நீலமேக ஸ்யாமளாகிய ஸ்ரீ மன் நாராயணன், குண சம்பூர்ணனை, முனிகளின் பிரியனான அழகிய முத்துப் போன்ற உடுப்பி ரங்கனை, தயாநிதியை நினைப்பேன் - என்று கூறி, ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை, மகிமைகளைப் புரிந்த ஸ்ரீ கிருஷ்ணனை, தினமும் நினைப்பதாகக் கூறி, பல்லவியை அமைத்திருக்கிறார்.
முதல் பத்யத்தில், ஸ்ரீ கிருஷ்ணனின் ஜனனத்தையும், கோகுலத்திற்குச் சென்று லீலைகள் புரியத் துவங்கியதையும் விளக்கும்படியாக, தேவகியின் உதரத்தில் உதித்த சந்திரனைப் போன்றவனை, நல்ல குணங்கள் உடையவனை, கோகுலத்திற்கு யமுனையைத் தாண்டி வந்தவனை, அங்கு இருந்தவனை, மாமன் கம்சன் அனுப்பிய மாய பூதனையை வதைத்தவனை, ஆனந்த ஸ்வரூபனை, தைத்யனான ஷகடாசுரனை உதைத்தவனை (கொன்றவனை), ஸ்ம்ருதிகள் புகழ்பவனை, ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்து துதிக்கிறார் ஸ்ரீ வாதிராஜர்.
![]() |
கம்சனை வதம் செய்யும் கிருஷ்ணர் |
இரண்டாம் பத்யத்தில், ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலைகளை வர்ணிக்கும் விதத்தில் தொடர்ந்து, கோகுலத்தில் கோபியரின் மனதைக் கவர்ந்தவனை, மிகவும் பராக்கிரமம் உடையவனை, எண்ணற்ற கோபிகா ஸ்த்ரீகளின் வஸ்திரங்களை அபகரித்து, அவர்களுக்கு பாடம் புகட்டியவனை, மாடுகள் மேய்த்தவனை, தேனுகாசுரன் என்னும் கன்றுக்குட்டி ரூபத்தில் வந்த அசுரனைக் கொன்றவனை, புகழ் பெற்றவனை, சிறுமதி படைத்த காளிங்கனின் தலையில் குதித்தவனை, அவனுக்கு அருள்புரிந்தவனை, ஸ்ரீ கிருஷ்ணனை ‘காகுமதி காளிங்கன பண துளிதன அவ கொலிதன’ முதலான பதங்களால் துதித்துள்ளார் ஸ்ரீவாதிராஜர்.
![]() |
கோபிகாஸ்த்ரீகளுடன் கிருஷ்ணர் |
நான்காம் பத்யத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் மதுராவிற்கு கிளம்பிச் சென்று அங்கு பராக்கிரங்களைக் காண்பிக்கும் கட்டங்களை விளக்கும் விதத்தில் க்ரூரமான கேஸி, பகாசுரன் போன்றவர்களை கிழித்து அழித்தவனை, சஜ்ஜீவியான அக்ரூரர் அழைத்தவுடன் சந்தோஷமாக வந்தவனை, தேவர்கள் போற்றுபவனை, குப்ஜை என்னும் பெண்ணிற்கு யௌவன வரமளித்து சந்தோஷப்படுத்தியவனை, மிகுந்த சக்தி படைத்தவனை, குவலய பீடம் என்னும் யானையை அழித்த பலம் படைத்தவனை, அதிசாமர்த்தியம் உள்ளவனை, ஸ்ரீ கிருஷ்ணனை துதிப்பதாக வர்ணித்துள்ளார் ஸ்ரீ வாதிராஜர்.
![]() |
குவலய பீடம் என்னும் யானையை அடக்கும் கிருஷ்ணர் |
ஆறாவது பத்யத்தில், முக்கியமாக ஸ்ரீ கிருஷ்ணனின் குருகுலவாசம், குருவிற்கு அளித்த தட்சிணை இவற்றை விளக்குவதாக, உக்ரசேனனுக்கு அரசாட்சியைக் கொடுத்தவனை, மிகவும் சிரேஷ்டமானவனை, கோபிகா ஸ்த்ரீகளுக்கு உத்தவனை சமாதானம் செய்ய அனுப்பியவனை, சமர்த்தனை, மிகுந்த அறிவுடையவனை, 64 கலைகளையும் கற்றவனை (வெறும் 64 நாட்களில் கற்றது போல லோகவிடம்பனத்திற்காக), சுக சரித்திரம் கொண்டவனை, திமிங்கலத்தின் வயிற்றில் அகப்பட்ட குரு புத்திரனின் உயிரைக் காப்பாற்றிக் கொணர்ந்தவனை, ஆனந்தம் அளிப்பவனை, ஸ்ரீ கிருஷ்ணனை விவித வித்யா கலெகளெல்லவ அரிதன, சுப சரிதன, ஜவன சிக்ஷிஸி த்விஜன கந்தன தந்தன ஆனந்தன முதலான பதங்களால் வர்ணித்து துதிக்கிறார் ஸ்ரீ வாதிராஜர்.
![]() |
உடுப்பி கிருஷ்ணர் |
எட்டாவது பத்யத்தில், விசேஷமாக தைத்யர்களின் சம்ஹாரத்தைப் புரிந்த கட்டத்தை விளக்கும் விதத்தில், முரண், நரகன் முதலான அசுரர்களை சக்ராயுதத்தால் வதைத்தவனை, கஜேந்திரனுக்கு அருள் புரிந்தவனை (ஜகத்துக்கு ரட்சகனாக இருப்பவனை), தேவலோக விருட்சத்தை சத்யபாமாவிற்காக கொணர்ந்து தந்தவனை, சமர்த்தனை, ஜகத்தை இயக்குபவனை, சிசுபாலன் முதலான தைத்யர்களை சம்ஹரித்தவனை, மிகுந்த பராக்கிரமம் உடையவனை, குருகுல வம்சத்தில் உதித்த கௌரவர்களை அழித்தவனை, அதே குலத்தில் உதித்த பாண்டவர்களுக்கு ப்ரியமானவனை, நல்லிதயம் கொண்ட வனை ஸ்ரீ கிருஷ்ணனைப் போற்றுகிறார் ஸ்ரீ வாதிராஜர்.
![]() |
சிசுபாலனை வதம் செய்யும் கிருஷ்ணர் |
கடைசி பத்யத்தில், ஸ்ரீ கிருஷ்ணனிடம், ஸ்ரீ ஹயவதனனிடம் பிரார்த்தனை செய்து பூர்த்தி செய்வதுடன், இந்த பத்யத்தைக் கேட்பதால் உண்டாகும் பலனை விவரிக்கும் விதத்தில், இன்று நம்மைக் காப்பாற்றும் லட்சுமியின் காந்தனும், ஸ்ரீ லட்சுமி துதிக்கும் பிரகாசம் உடையவனும், ஸ்ரீ ஹயவதனனும், முனிவர்களால் தொழப் படுபவனுமான ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமையை உரைக்கும் இந்தக் கதையை பக்தியுடனும், ப்ரீதியுடனும் கேட்பவரை, நிறைந்த வாழ்க்கையை வாழச் செய்து, கந்துபிதனான ஸ்ரீகிருஷ்ணன், காருண்யத்துடன் காப்பாற்றுவான், சுகத்தைக் கொடுப்பான் என்பதாக ‘ஸந்தஸதொளீ ஸார கதெயன்னு கேள்வர நெரெ பா3ள்வர, கந்து பித காருண்யதிந்தலி பொரெவனு சுக கரெவனு’ போன்ற பத்யங்களால் வர்ணித்து பூர்த்தி செய்கிறார் ஸ்ரீவாதிராஜர்.
இத்தகைய உயரிய கிரந்தத்தை அனுதினமும் பக்தியுடனும், அதன் விசேஷ அர்த்தங்களைத் தெரிந்து கொண்டும், நாம் அனைவரும் பாராயணம் செய்து ஸ்ரீ வாதிராஜரின் அந்தர்யாமியான ஸ்ரீ ஹயக்ரீவ ரூபி பரமாத்மாவின் அருளுக்கு பாத்திரராவோமாக.
✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா
S. லக்ஷ்மிபதிராஜா
தேதி: 06.09.2023
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக