மகத்துவமான நன்மைகளை தரும் மஹாளய பட்சம் / பகுதி - 1

மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களின் ஆராதனை க்ரமம் (ஸ்ராத்தம் - தர்ப்பணம்) மற்றும் பலன்கள்!

ஹாளய பக்ஷம் என்பது பாத்ரபத மாதம்  கிருஷ்ணபக்ஷம் பித்ருக்களுக்கு மஹாளய பருவகாலம்.  அதனாலே அந்த பக்ஷத்திற்கு 'பித்ரு பக்ஷம்' என்று பெயர்.  அந்த பக்ஷத்திலே தினமும் ஸ்ராத்தம் மற்றும் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய காலம். பிரதமையிலிருந்து ஆரம்பித்து, ஸர்வ பித்ரு அமாவாசை வரை பதினைந்து நாட்களில் ஏகாதசி தவிர, தினமும் ஸ்ராத்தம் மற்றும் ஸர்வ பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய காலம்.  ஒரு நாளாவது ஸ்ராத்தம் செய்ய வேண்டும். அதற்கு 'பக்ஷ ஸ்ராத்தம்' என்று பெயர். மற்ற எல்லா நாட்களிலும் 'ஸர்வ பித்ரு தர்ப்பணம்' கொடுக்க வேண்டும்.  'நாந்தி ஸ்ராத்தம்' என்பது விவாகம், உபநயனம், சீமந்தம் மற்றும் கிரஹப்பிரவேசம் ஆகிய சமயங்களில் செய்வது.


 'வருஷ ஸ்ராத்தம்' வருஷத்தில் அந்தத் திதியில் செய்வது.  மஹாளய காலத்தில் செய்யப்படும் ஸ்ராத்தம்  'பக்ஷ ஸ்ராத்தம்' என்பதாகும். அன்றைய தினம் அன்னமும், எள்ளுடன் கலந்த ஜலத்தை கொடுப்பதினால் பித்ருக்களுக்கு திருப்தி ஆகிறது.  நிச்சயமாக திருப்தி அடைகிறார்கள் என்று `நிர்ணய ஸிந்து’  சொல்கிறது. அறியாமையினால் சிலர் பக்ஷ ஸ்ராத்தம், எங்கள் வீட்டு வழக்கத்தில் அது இல்லை என்று தவிர்த்துவிடுகிறார்கள்.

வர்களுக்கு முன் ஏதாவது ஒரு தலைமுறையில் விட்டுப் போய் இருக்கலாம்.  ஆனால், சாஸ்திரம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. மாதா, பிதா, தாத்தா, பாட்டி, தவிர மூதாதையர்கள் பலர் நம்மேல் ப்ரீதி வைத்திருக்கலாம். அவர்கள்  'காருண்ய பித்ருக்கள்' ஆவர்.  அவர்களும் அன்னமும், எள்ளும், நீரும் நம்மிடமிருந்து அந்தவொரு காலத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.  எனவே, வழக்கம் இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு இந்த 15 நாட்களும் அல்லது ஒரு நாளாவது பக்ஷ ஸ்ராத்தம் நிச்சயம் செய்தாக வேண்டும்.

பித்ருக்கள், அப்படி நாம் செய்யும் ஸ்ராத்தத்தில் மனம் மகிழ்ந்து நம்மை ஆசிர்வாதம் செய்து அவர்களுடைய லோகத்திற்கு திரும்புகிறார்கள் என்று `நிர்ணய ஸிந்து’ சொல்கிறது.  அதாவது, ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மற்றும் அவரவர்களுடைய மனோபீஷ்டம் பூர்த்தியாகிறது.

காலம் சென்ற பித்ருக்களின் இருப்பிடம் 'பிரேத புரம்' என்று சொல்லப் படுகிறது.  எமதர்ம  தேவனிடம்  பித்ருக்கள்,  சூரியனானவன் கன்னியா ராசியில்  அல்லது துலா ராசியில் இருக்கும்போது அந்த இரண்டு மாத காலத்திற்குள் எல்லா பித்ருக்களுக்கும் அவரவர்கள் கிரகத்திற்குச் சென்று வர அனுமதி கிடைக்கிறது. 

ந்த இரண்டு மாதமும் பிரேத புரம் காலியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சூரியன் மறுபடியும் விருச்சிக ராசியில் வரும்பொழுது பித்ருக்கள், தேவதைகள் மூலமாக பிரேத புரத்திற்கு மீண்டும் செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.  மஹாளய பக்ஷ பித்ரு காரியத்திலே இரண்டு விசேஷ காலங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்தப் பித்ருக்கள் வரும் காலம் தான் 'பஞ்சம அபரபக்ஷம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஆஷாட மாதத்தில் இருந்து ஐந்தாவது அபரபக்ஷம். அவை ஆஷாட கிருஷ்ண பக்ஷம் என்பது ஒன்று, ஸ்ராவண ஸுக்ல பக்ஷம் இரண்டாவது, ஸ்ராவண கிருஷ்ணபக்ஷம் மூன்றாவது,  பாத்ரபத ஸுக்ல பக்ஷம் நான்காவது,  பாத்ரபத கிருஷ்ண பக்ஷம் ஐந்தாவது என்பதாக ஆஷாட மாதத்திலிருந்து ஐந்தாவது பக்ஷம் மஹாளய பக்ஷமாக அமைகிறது. 

துவே பித்ருக்களை பூஜிப்பதற்காக உள்ள பர்வகாலம். அன்னமும் எள்ளும் நீரும் கிடைக்குமென்று பித்ருக்கள் எல்லாம், கிரகத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும் காலம். சூரியன் சிம்ம ராசியை விட்டு கன்னி ராசிக்கு வருவதற்கு முன்னதாகவே மஹாளய பக்ஷம் வந்துவிடும். ஆக, மேற்சொன்ன அபர பக்ஷம் என்பது பித்ருக்களுக்கு முக்கியமாக அமைகிறது என்பது நிறைய ஸிந்துவின் வாக்கு. 

சூரியன், கன்யா ராசியில் இருக்கும் கடைசி நாள்வரைதான் அவர்களால் காத்திருக்க முடியும். அதற்குள் அவர்களுக்கு அன்னமும் எள்ளும் நீரும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால், மன வேதனையுடன் காருண்யத்துடன் இன்னும் ஒரு மாதம், அதாவது சூரியன் துலா ராசிக்கு வரும் கடைசி நாள்வரை காத்துக் கொண்டிருப்பார்கள்.  அப்படி நீடித்த காலத்தில்கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால், மனம் துக்கப்பட்டு சாபம் வைத்துப் போகிறார்கள் என்று ``தர்ம சாஸ்திரம்’’   சொல்கிறது.

னவே, குடும்ப க்ஷேமத்திற்காக மஹாளய ஸ்ராத்தம் செய்ய வேண்டியது கடமை. அண்ணன் செய்கிறார், தம்பி செய்கிறார், நேரம் இல்லை, வசதி இல்லை, பணம் இல்லை என்ற காரணங்களை சொல்வது அறியாமை. ஸ்ரத்தையுடன் செய்வதால் குடும்பத்திற்கு க்ஷேமம் உண்டாகிறது என்று சாஸ்திரங்கள்,  நிர்ணய ஸிந்து சொல்கிறது. நியாயமான காரணத்தினால் வழக்கமான ஸ்ராத்தத்தை செய்ய முடியாமல் போகலாம். மடங்கள் இல்லை, நீர் வசதி இல்லை, புரோகிதர்கள் இல்லை, பிராமணர்கள் போஜனத்திற்கு இல்லை, அதனால் சாத்தியமில்லை என்று சிலர் சொல்வது உண்டு.  பிண்ட பிரதானம் வரை செய்து முடித்து, அவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, நெய் முதலியவை கொடுக்கலாம்.  

நிறைய தக்ஷணை அளித்து திருப்திப்படுத்தலாம்.  இதற்கு  'ஆம ஸ்ராத்தம்' என்று பெயர்.  போஜனம் கொடுக்க முடியவில்லை என்றாலும், தட்சணையாவது கொடுத்து செய்யும் ஸ்ராத்தம் 'ஹைம (அ) ஹேம (அ) ஹிரண்ய ஸ்ராத்தம்'  என்பதாகும். அதாவது நமது ஸாஸ்திரம் நம்மால் தர்மத்தை செய்ய முடியவில்லை என்று முழுவதுமாக விட்டுவிடக் கூடாது என்பதற்காக பல வழிமுறைகளை வகுத்துள்ளது.


ஹாளய பக்ஷ காலத்தில் விசேஷமாக ஸ்ராத்தம் எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். முடியவில்லை என்றால், ஒரு நாளாவது செய்ய வேண்டும். அந்த ஒரு நாளிலும் பிராமணர்களை அழைத்து போஜனம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களை அழைத்து அரிசி பருப்பு காய்கறி வகையறாக்களை கொடுக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் தக்ஷணை கொடுக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் பித்ருக்களை நினைத்து பசுமாட்டுக்கு அகத்திக்கீரை பழங்கள், பசும்புல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். 

துவும் கூட ஸ்ரார்த்தமாகி விடுகிறது. அப்படி மேலே கூறிய எதுவுமே செய்ய முடியவில்லை என்ற கட்டத்தில்,  பகவானையும் தேவதைகளையும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று பிரார்த்தித்து மூன்று நாட்களோ அல்லது இரண்டு நாட்களோ, ஒரு நாளோ உபவாசம் இருந்து என்னால் இதுதான் சாத்தியமாகியது என்று வருந்தி பிராயச்சித்தமாக இதை செய்கிறேன் என்று வேண்ட வேண்டும்.

ப்படி உபவாசம் விரதம் இருந்தால்கூட அது ஒருவித ஸ்ராத்தம் ஆகிறது.  இப்படி யதா சக்தி மஹாளய  காலத்திலே ஸ்ராத்தம் செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் விட்டுவிட வேண்டாம் என்று உபதேசிக்கிறது ஸாஸ்திரம். 

கவே இந்த மஹாளய பக்ஷத்தில், வசதி இருக்கும்போது முறைப்படி  செய்யாமல் சுலபமாக 'சங்கல்பம ஸ்ராத்தம்' மட்டும் செய்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.  பித்ருக்களையும் ஏமாற்றக் கூடாது!

தொடரும்...

திரு.லக்ஷ்மிபதிராஜா அவர்களின் பிரவச்சனத்தில் இருந்து எழுதப்பட்டவை...

எழுதியவர் மந்த்ராலய மாமி, திருமதி லக்ஷ்மி பார்த்தசாரதி மற்றும் ராஜபாளையம் திருமதி லக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்... 

Ref: Hari Vamsa, Dharma Sindhu, Nirnaya Sindhu, Sri Sudha Monthly Magazine, Harikathamruthasara, Pravachana by Scholars

இவர்கள் அத்துணை பேருக்கும் நமது பத்திரிகை சார்பாக, கோடான கோடி நன்றிகள்! - ஆசிரியர்

தேதி: 13.10.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்