குரு - ரவி புஷ்ய யோகம் என்றால் என்ன? / விளக்குகிறார், பிரஸங்க பூஷணம் லக்ஷ்மிபதிராஜா...

குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி புஷ்ய யோகம் என்ற இந்த இரண்டு பருவ காலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம். இவைகளை `புஷ்யார்க யோகம்’ என்றும் அழைக்கப் படுகிறது. புஷ்ய நட்சத்திரம் (பூசம்), 27 நட்சத்திரங்களில் ஒரு முக்கியமான ஸ்தானத்தில் இருக்கக் கூடிய ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரமானது ஸம்பத்தை (தன வரவு) கொடுக்கக் கூடிய நட்சத்திரம். மேலும், ஞானத்தை கொடுக்கக் கூடிய ஒரு நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. 

பொதுவாகவே, புஷ்ய நட்சத்திரம் என்பது ஸம்பத்துக்கு அபிமானி தேவதையான மகாலட்சுமியின் நக்ஷத்திரமாகப் போற்றப் படுகிறது. மகாலக்ஷ்மி அவதரித்த நக்ஷத்திரம் என்ற பெருமை புஷ்ய நட்சத்திரத்திற்கு  உண்டு. 

மேலும், பகவான் ஸ்ரீ ராமனின் அவதார காலத்தில், ராமனுக்கு சகோதரனான, பரதனின்  நட்சத்திரமும் புஷ்ய நட்சத்திரம் ஆகும். இவர்  ஸாக்ஷாத் மன்மதன் அவதார ஸ்வருபமாவார்.

இந்தப் புஷ்ய நட்சத்திரத்தின் மகத்துவத்தை மேலும் கூறவேண்டு என்றால், இதன் அதிபதி தேவதை நீதிமானாகப் போற்றப்படக் கூடிய சனி. பிரகஸ்பதி ஆச்சாரியரின் நக்ஷத்திரம் இது. குரு, ஞானத்தின் அதிபதி. நவகிரகங்களிலே ஞானத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு. புஷ்ய நட்சத்திரம் ஞானத்தை கொடுக்கக் கூடிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.

குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி புஷ்ய யோகம் என்பதைப் பற்றிக் காணும்போது,  குரு வாரத்தில் (அ) வியாழக்கிழமையில் புஷ்ய நட்சத்திரமும் சேர்ந்து வந்தால், அந்த தினமானது, "குரு புஷ்ய யோகம்" என்று சொல்லபடுகிறது. "குரு புஷ்ய அமிர்த யோகம்" என்றும் சொல்லப்படுகிறது. 

அதேபோல, புஷ்ய நட்சத்திரமானது, ரவி வாரத்தில் (ஞாயிற்றுக் கிழமையில்) வரும்போது, "ரவி புஷ்ய யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டுக்குமே விசேஷமான மகத்துவம் நிறைந்தது.


 குருவானவர், ஞானத்திற்கு அதிபதி. அந்த ஒரு தினத்தில் புஷ்ய நக்ஷத்திரம் சேரும் போது, அது விசேஷமான பருவ காலமாக அமைகிறது. புஷ்ய நட்சத்திரமே விசேஷமான ஞானத்தைக் கொடுக்க கூடியது மற்றும் ஸம்பத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திரமாக இருக்கிறது என்று பார்க்கும் போது, அது குருவுடன் சேர்ந்து வரும்போது, குரு புஷ்ய யோகமாக இருக்கும் போது, இன்னும் விசேஷமான பலனைக் கொடுப்பதாக அந்த தினம் அமைகிறது. 

அதனால் வியாழக் கிழமையும், புஷ்ய நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய குரு புஷ்ய யோக தினத்திலே செய்யும் ஸத்காரியங்களுக்கு விஸேஷமான பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, ரவி புஷ்ய யோகம் என்பது "ரவி புஷ்ய அமிர்த யோகம்" என்றும் சொல்லப்படுகிறது. இவை இரண்டுமே விஸேஷமான பர்வகாலங்கள் என ஜோதிட ஸாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பொதுவாக, இந்த பருவ காலங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், நாம் செய்யக்கூடிய ஸத்காரியங்கள், தான, தர்மங்கள் ஆகட்டும், பகவத் பூஜை மற்றும் ஆராதனை ஆகட்டும், பகவன் நாம ஸங்கீர்த்தனம், ஸ்தோத்திரம், ஜெபம், பாராயணம் போன்ற நற்காரியங்கள் ஆகட்டும்,  தீர்த்த க்ஷேத்திர யாத்திரை, அந்த க்ஷேத்திரங்களில் இருக்கக்கூடிய தீர்த்தங்களில் ஸ்நானம், மூர்த்திகளின் தரிசனம் என அனைத்தும் புண்ணிய காரியங்கள், நற்பலன்களைக் கொடுக்கக் கூடியது என்றாலும், விசேஷமான காலங்களில் செய்வதைப் பொறுத்தும், செய்யும் விதத்தைப் பொறுத்தும் அதன் பலனானது அமைகிறது.

தானம் தரும்போது நாம் எதை தானமாக கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும், எங்கு தானம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்தும், எப்போது தானம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும், யாருக்கு தானம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும் அதன் பலனானது மாறுபடுகிறது என்று ஸாஸ்திரங்கள் கூறுகின்றன.

அதனால்தான் நம் முன்னோர்கள், அக்காலத்தில் நல்ல பருவகாலங்கள் வரும்போது அந்த நேரத்தில் செய்யக் கூடிய ஸத்காரியங்களை,  பல்லாயிரக்கணக்கான வருடங்கள்..... ஏன்... பல ஜென்மங்களில் செய்யக்கூடிய புண்ணிய பலன்களை, அந்த மிகக் குறுகிய  காலத்திலே அளிப்பதனாலே ஸாஸ்திரங்கள் கூறிய வகையிலே நடந்து, அதை நன்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

அதேபோல, செய்யக் கூடிய இடமும் (ஸ்தலம்) முக்கியமானது. நாம் நம் வீட்டிலிருந்து பூஜை செய்கிறோம், பாராயணம் செய்கிறோம் மற்றும் ஜெபம் செய்கிறோம். அதைக் காட்டிலும், புண்ணிய பலன்கள், நதிதீரத்திலே, புண்ணிய தீர்த்தங்களின் கரையிலே, க்ஷேத்திரங்களிலே, குரு மகாசன்னிதானத்திலே மற்றும் பகவானின் சன்னிதானத்தில் செய்யும்போது பல மடங்கு மாறுபடுகிறது.

``அனந்தம் விஷ்ணு ஸந்நிதௌ’’

விஷ்ணுவின் சன்னிதானத்தில் செய்யப்படுகின்ற ஜெபம், பாராயணம், தானம் போன்றவற்றிற்கு அனந்த மடங்கு பலன் (பல மடங்கு) என்று சொல்லப் பட்டிருக்கிறது. நற்காரியங்கள் பல உண்டு. அதிலும், செய்யக் கூடிய தானங்கள், பகவத் பூஜை,  நாமசங்கீர்த்தனம், ஜெபங்கள், கதாஸ்ரவணம் முதலியன விஸேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது. ஆக, எந்த காரியத்தை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் பலன் மாறுபடுகிறது.

ஆக, புண்ணிய பலன் செய்யும் இடத்தை பொறுத்தும், காலத்தைப் பொறுத்தும், எதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

தானங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதை ஸ்வீகாரம் செய்பவர்களைப் பொறுத்தும் பலனானது மாறுபடுகிறது. தானத்தை பெறுபவர்களின் தபோ சக்தி, அவர்களின் ஜெப ஸித்தி, அனுஷ்டானம், நல்லொழுக்கம் (ஸீலம்) இதையெல்லாம் பொறுத்து தானத்தின் பலனானது மாறுபடுகிறது.

இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து புண்ணியத்தை சம்பாதிக்கக் கூடிய ஒரு ஆசை,  ஒரு வேகம், தாகம் எல்லாம் நம் பெரியவர்களுக்கு இருந்திருக்கிறது. இப்போது நாம், காசு சம்பாதிக்கத்தான் பார்க்கிறோம், எந்த வங்கியில் போட்டால் எவ்வளவு வட்டி கிடைக்கும், எந்த மியூச்சுவல் ஃபண்டில் போட்டால் அதிகமாக பணம் கிடைக்கும், எங்கு நிலம் வாங்கினால் பல மடங்கு அதிகம் பலன் கிடைக்கும் என்றெல்லாம் மட்டுமே யோசிக்கிறோம்.



நாம் பணத்தின் பின்னால் சென்று கொண்டு இருக்கிறோம். அந்தக் காலத்தில் பெரியவர்கள், புண்ணியத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். எந்த காலத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். எந்த தேசத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். எந்த நேரத்தில், எந்த இடத்தில் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என அறிந்து, அதைப் போன்ற தேசங்கள்,  பருவ காலங்கள் அமையும் போது புண்ணியங்களை, பகவான் வாரி வழங்க  காத்துக் கொண்டிருக்கிறான் என உணர்ந்து ஸத்காரியங்களை நம் முன்னோர்கள் செய்து வந்துள்ளனர்.

இந்த குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி புஷ்ய யோகம் என்ற இந்த இரண்டு பர்வ காலதங்களிலும் நாம் செய்யக் கூடிய காரியங்கள் விஸேஷமான பலனைக் கொடுக்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது.

குரு புஷ்ய யோகம், குரு பகவானின் அனுக்கிரகத்திற்கு நாம் பாத்திரர் ஆகக்கூடிய காலம் என்பதாலும், விசேஷமான சம்பத்தை கொடுக்கக் கூடியதாக இருப்பதாலும், அந்த நாட்களிலே பொதுவாகக் கட்டிடங்கள் ஆரம்பிப்பது, மந்திரங்கள் தந்திரங்களை குரு மஹனீயர்களிடமிருந்தும் பெரியோர்களிடமிருந்தும் இருந்து தெரிந்து கொள்வது, அதேபோல புதிதாக தொழில் ஆரம்பிப்பது, நகைகள் ஆபரணங்கள் வாங்குவது, புது வீடுகளை வாங்குவது முதலான காரியங்களுக்கு ஒரு சுபபருவகாலம் அமைகிறது.

அதேபோல, ரவி புஷ்ய யோகம் அதாவது ஞாயிற்றுக் கிழமையும், புஷ்ய நக்ஷத்திரமும் சேர்ந்து வருகின்ற காலத்தில், என்ன புதிதாக வாங்குகிறோமோ, அதனோடு மகாலட்சுமியின் சன்னிதானம் இருக்கிறது என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. மகாலட்சுமியின் சாந்நித்யம் இருப்பதால் பல நாட்கள் நிலைத்திருக்கக்கூடிய ஸாஸ்வதமான ஸம்பத்தாக அமைகிறது என்று ரவி புஷ்ய யோகத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. 

அன்றைக்கு நாம் வாங்கக்கூடிய வாகனங்கள், ஆபரணங்கள், தொடங்கக் கூடிய தொழில்கள் நன்மை பயக்கும் வகையில் ரவி புஷ்ய யோகத்திற்கும் அப்பேர்பட்ட பலன்கள் உண்டு. இதெல்லாம் லௌகீகமான பலன்கள்.

ஆனால், பரலோகத்திற்கும் நமக்கு சுகம் வேண்டும். நமக்கு சாஸ்வதமான அழியாத சுகம் வேண்டும், அதுதான் மோக்ஷம் என்னும் பிறப்பற்ற நிலை. அதையடைய வேண்டுமென்றால், நமக்கு அபரோக்ஷ ஞானம் உண்டாக வேண்டும். நம்மிடம் பக்தி பிறக்க வேண்டும். நமக்கு குரு மஹனீயர்களுடைய ஆசி ஏற்பட வேண்டும். 

இந்தப் பர்வகாலம் ஞானத்தின் பால் தாகம் இருப்பவர்களுக்கு, மோக்ஷ மார்க்கத்தை வேண்டுபவர்களுக்கு, நிலையான சுகத்தை விரும்புவர்களுக்கு, விசேஷமான பர்வகாலம் என்று சொல்லப்படுகிறது. இந்த தினத்தில் செய்யக்கூடிய பாராயணம், பகவத் ஆராதனை, பூஜை மற்றும் ஜபங்கள், செய்யக்கூடிய தானங்கள் எல்லாவற்றுக்குமே விசேஷமான பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

அன்று செய்யக் கூடிய பாராயணம்,  முக்கியமாக புருஷர்கள் செய்யக் கூடிய விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம், ஹரி வாயு ஸ்துதி, வேத ஸூக்தங்களின் பாராயணம், ஸூமத்வ விஜயம் போன்ற மகா காவியங்கள், குரு மஹனீயர்களின் சரித்தரிங்களை மஹிமைகளை உரைக்கும் கிரந்தங்களின் பாராயணம், ஆச்சாரியரின் ஸர்வ மூல கிரந்தங்கள் மற்றும் டீகா, டிப்பணி கிரந்தங்களின் பாராயணம் என  அனைத்தும் விசேஷமானது.

ஸ்திரிகளும், (பெண்களும்) ஹரிநாம ஸங்கீர்த்தனம்,  தாசர்கள் இயற்றிய கிரந்தங்கள் மற்றும் லக்ஷ்மி ஷோபானம், மத்வ நாமா போன்ற கிருதிகள், விஜயதாஸர் இயற்றிய ஸூளாதிகள் போன்றவற்றை பாராயணம் செய்வதால், விசேஷமான பலன்கள் கிடைக்கிறது. அபரிமிதமான புண்ணியத்தை, சுகத்தை, ஞான சம்பத்தை கொடுக்கக்கூடிய தினம். 

விவாகம் ஆகாதவர்களுக்கு அப்பேர்ப்பட்ட பாக்கியத்தை கொடுக்கக்கூடியது, புத்திர சம்பத்தை கொடுக்கக்கூடியது என விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அந்த தினம் அமைகிறது.

குருமஹனீயர்களை, குரு புஷ்ய யோக தினத்திலே மற்றும் ரவி புஷ்ய யோக தினத்தில் ஸ்மரணை செய்வதுடன், அவர்களின் சம்பந்தப்பட்ட கிரந்தங்கள்,  அவர்களுடைய சரித்திரம் மற்றும் அவர்களைத் துதிக்க கூடிய ஸ்தோத்திரங்களை  பாராயணம் செய்வதால் விசேஷமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டு இருக்கிறது.

அதிலும், நாம் குறிப்பாக பார்த்தோமேயானால், கலியுக காமதேனு கற்பகவிருட்சம் என்று போற்றப்படும் ஸ்ரீ ராகவேந்திர குருஸார்மபௌமர் இன்றைக்கும் ஜீவனோடு பிருந்தாவனத்தில் இருந்துகொண்டு, 72 தேவதா மூர்த்திகளை ஆராதனை செய்து கொண்டு, மூல ராமருக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார். 

அப்பேர்ப்பட்ட மஹனீயர் மேல், அவரின் பிரியமான சிஷ்யர் அப்பண்ணாச்சாரியார், பிருந்தாவன பிரவேசத்தின் போது ஓடோடி வந்து அவரைக் காண விழையும் போது, அவருடைய முக கமலத்தில் இருந்து பிரவாகமாக, எப்படி துங்கபத்ரா நதி வெள்ளமாக பிரவாகமாக வந்ததோ... அதுபோல, வரவழைத்தவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். 

ஹரி வாயு குருமஹனீயர்களின் அனுகிரஹத்தால் வெளிவந்தது. அப்பண்ணாச்சாரியார் முக கமலத்தில் இருந்து வெளிப்பட்ட ராகவேந்திர குரு ஸ்தோத்திரத்தில், இதை  சொல்வதால் என்ன பலன் என்று கூறி, குறிப்பாக; 

"ஸோமஸுர்யோபராகேச புஷ்யார்காதி ஸமாகமே 

யோனுத்தமமிதம் ஸ்தோத்திரம் அஷ்டோத்தரசதம் 

ஜபேத் பூத ப்ரேத பிசாசாதி பீடா தஸ்ய ந ஜாயதே" 

என எப்போதும் இதனை சொல்லவேண்டும் எனினும், விசேஷமாக "சூரிய சந்திர கிரகண காலத்தில், அதேபோல புஷ்யார்க்க யோகம் முதலான காலங்களில் கூற வேண்டும்" எனத் தெளிவுபடக் கூறியுள்ளார்.


 இந்த பர்வ காலங்களில், ராகவேந்திர குரு ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதால், மீண்டும் மீண்டும் விஸேஷமாக 108 தடவை பாராயணம் செய்வதால், பூதப் பிரேதங்கள் மற்றும் பிசாசு போன்ற துஷ்ட சக்திகள் உடைய ஆதிக்கம், அதனால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் பயம் கவலைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட ஒரு மார்க்கத்தை காட்டுகிறது

அப்பேர்ப்பட்ட அந்த பீடைகள் பரிகாரம் ஆகிறது எனக்குறிப்பிட்டுள்ளார் அப்பண்ணாச்சாரியர். ஸ்ரீ ராகவேந்திரர், தான் நடமாடிய காலத்திலேயே ம்ருத்திகையை சிஷ்யனுக்குக் கொடுத்து அதன் பலத்தினாலேயே அவனை ஒரு பூதத்திடம் இருந்து காத்து, அதற்கும் ஸத்கதி அளித்து,  சிஷ்யனுக்கு விவாஹம் ஆகும்படியாகவம் அனுக்ரஹம் புரிந்துள்ளார்.

இன்று பிருந்தாவனத்தில் இருந்து அப்பேர்பட்ட பல அனுகிரஹங்களை செய்து கொண்டிருக்கிறார். ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு மாத்திரம் அல்ல. அவருடைய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வதாலும் இப்பேர்பட்ட விசேஷமான பர்வ காலங்களில் குறிப்பாக, குரு புஷ்ய யோக காலத்தில் மற்றும் ரவி புஷ்ய யோக காலத்தில் பாராயணம் செய்வதன் மூலமாக அப்பேர்ப்பட்ட பலனை அளிப்பதாக அப்பண்ணாச்சாரியர் செய்த ஸ்தோத்திரத்தின் வாக்குகளை ஸத்தியம் என நிரூபிக்கும் வகையில் ஸ்ரீ ராகவேந்திரர்,

  "ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி" 

என்று பிருந்தாவனப் பிரவேசம் செய்த பிறகு, முதல் மகிமையை காட்டும்படியாக தன்னுடைய வாக்கை அங்கே கொடுத்து,  இதில் இருப்பது அனைத்தும் சத்தியம் என்று திடமாக நிச்சயமாக சொல்லி இருக்கிறார்.


 அதனால், அப்பேர்பட்ட அந்த ஒரு பர்வ காலத்தில் நம்மால் இயன்றளவு எவ்வளவு சாத்தியமோ, எவ்வளவு கால அவகாசம் நேரம் இருக்கிறதோ, நமக்கு எப்பேர்பட்ட வசதிகள் இருக்கிறதோ, இருக்கும் இடத்தில் வசதியை கொண்டு நேரத்தைக் கொண்டு நம்மால் முடிந்த அளவு ஸ்நானம், ஜபம், பகவத் பூஜை, ஆராதனை, ஸ்தோத்திர பாராயணம் முக்கியமாக ஹரி வாயு குருகளுடைய ராகவேந்திர குரு ஸ்தோத்திரம் முதலான பாராயணங்களை செய்து இயன்றளவு தானங்கள் செய்து, அன்றைய தினத்தில் நாம் செய்யக் கூடிய இந்த ஒரு நற்காரியங்களுக்கு அபிரிமிதமான புண்ணிய பலனை பகவான் வாரி வழங்க காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து, இந்த பர்வகாலங்களை உபயோகம் செய்து கொள்வோமாக என வேண்டி,

 குருமஹனீயர்களின் அந்தர்யாமியான பாரதீ ரமண முக்யப்ராணரின் அந்தர்யாமியான ஸ்ரீலக்ஷ்மி நாராயணனின் பாதார விந்தங்களில் ஸமர்ப்பணம் செய்வோமாக!!! 

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து

✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா 


திரு.லக்ஷ்மிபதிராஜா அவர்களின் பிரவச்சனத்தில் இருந்து எழுதப்பட்டவை...

எழுதியவர், மந்த்ராலய மாமி, திருமதி லக்ஷ்மி பார்த்தசாரதி மற்றும் ராஜபாளையம் திருமதி லக்ஷ்மி பாஸ்கரன்...

தொடர்ந்து பல கட்டுரைகளை `மத்வாச்சாரியா தமிழ் மேகஸின்’ - காக அனுப்பி தனது ஆதரவினை நல்கிவரும் லக்ஷ்மிபதிராஜா அவர்களுக்கு எத்தனை முறை நன்றியினை தெரிவித்தாலும் போதாது. இருந்தும்... நன்றிகள் பல...  - ஆசிரியர்

தேதி: 15.11.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்