தாஸப்ப என்னும் விஜயதாசர் / பிரஸங்க பூஷணம் - S. லக்ஷ்மிபதிராஜா

விஜயதாசரின் மூல பிருந்தாவனம்

ஸ்ரீ விஜயதாஸர், ப்ருகு மகரிஷியின்  அம்ஸ ஸம்பூதர் ஆவார். மத்வ மதத்தில் தாஸ சாஹித்யத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்த அஷ்ட தாஸர்களில் மிக முக்கியமான ஸ்தானத்தில் போற்றப்படுபவர். த்ரேதா யுகத்தில்  'ஸூரலீ' என்ற கபியாக அவதரித்து, ஸ்ரீ ராமபிரானுக்கு சேவை புரிந்தவர். த்வாபர யுகத்தில் 'நிகம்ப' என்னும் யாதவனாகப் பிறந்து ஸ்ரீ  கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஸகாவாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றவர். 

லியுகத்தில், ஸ்ரீ புரந்தர தாஸரின் வீட்டு கன்றுக் குட்டியாகவும், பின்னர், ஸ்ரீ புரந்தரதாஸரின் மகன் மத்வபதியாகவும் அவதரித்து, மீண்டும் அவரே தாஸரின் அனுக்ரஹத்துக்கு பாத்திரராகி, ஸ்ரீ விஜய தாஸராகவும் அவதரித்தார்.

ஸ்ரீ விஜய தாஸர், 1682 - ல் துங்கபத்திரா நதி தீரத்தில் உள்ள சீக்லபர்வியில் ஸ்ரீ நிவாஸ - கூஸம்மா தம்பதியருக்கு மகனாக 'தாஸப்ப' (கூஸி மக தாஸ) என்ற பெயரில் அவதரித்து, சிறுவயதிலிருந்தே வறுமையில் திளைத்து வந்த சூழ்நிலையில், தனது 14-வது வயதில், அரஸம்மா என்ற கன்னிகையை மணந்துக்கொண்டார். இதனால், மேலும் அவரை வறுமை  வாட்டி வதைக்க, விரக்தியினால் காஸி ஷேத்திரம் சென்று, ஸத்ஸங்கத்தில் ஈடுப்பட்டார். 

தன் பயனால் பக்தி உணர்வு மேலிட, ஸ்வப்னத்திலேயே (கனவில்) பகவான் ஸ்ரீ வேதவ்யாஸர், புரந்தரதாஸரின் ரூபத்தில் தோன்றி, வியாஸ காஸிக்கு அழைத்துச் சென்று, வியாஸ பகவான் மூலமாக நாவினில் 'விஜய' என்னும் பீஜாக்ஷரத்தை எழுதி அனுக்ரஹம் செய்ய, விஜய தாஸராக பரிமளித்து 'விஜய விட்டல' என்ற முத்திரையில், பல தேவர நாமாக்களை (பாடல்கள்) இயற்றி, தாஸ ஸாஹித்யத்திற்கு பெரும் பங்களித்தவர்.


 வரது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த திருப்புமுனைக்குப் பின், பகவத் கிருபையால் நித்ய அன்னதானம், பிராமண போஜனம், கன்யாதானம், தர்ம உபநயனம் என பல ஸத்காரியங்களைச் செய்தவர். ஸ்ரீ புரந்தரதாஸரின்  ஐந்து லட்சம் தேவர நாமாக்களை இயற்றும் ஸங்கல்பத்தில் 25000 குறைய, தாஸர் தனது மகன் மத்வபதியை பூர்த்தி செய்யக் கோர, அவரே ஸ்ரீ விஜயதாஸராக அவதரித்து, ஸ்ரீ புரந்தரதாஸரின் சங்கல்பத்தை நிறைவு செய்துள்ளார். 

கோபாலதாஸர், மோஹனதாஸர்,  வேணுகோபாலவிட்டலதாஸர், வியாஸவிட்டலதாஸர் போன்ற 60-க்கும் மேற்பட்ட சிஷ்யர்களுக்கு அங்கிதம் அளித்தவர். பாரததேஸம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, மத்வ சித்தாந்தத்தை தாஸ ஸாஹித்யத்தின் மூலம் பரப்பி, பாமரர்களுக்கும் பக்தியையும், ஞானத்தையும் ஊட்டிய தாஸர்.

திருப்பதி க்ஷேத்திரத்திற்கு இவர் மேற்கொண்ட யாத்திரை, கணக்கிலடங்காதது. பதங்கள், வ்ருத்த நாமங்கள், பத்யங்கள், கீர்த்தனைகள், உகாபோகங்கள் மற்றும் கத்யங்கள் எனப் பலவகைகளிலும் தாஸ ஸாஹித்யத்திற்கு வித்திட்டவர் நம் தாஸர்.

விஸேஷமாக, வேத சாஸ்திர உபநிஷத்துக்களின் ஸாரத்தை மிகச் சுலபமான வகையில், ``ஸூளாதிகளாக’’ அளித்து 'ஸூளாதி தாஸர்' என்று பலராரும் போற்றப்படுபவர். 1755 - ல், தமது 73 - வது வயதில் கார்த்திக ஸூத்த தஸமியன்று, பாஸ்கர க்ஷேத்திரமான சிப்பகிரியில் அவதாரத்தை பூர்த்தி செய்து, இன்றும் வேண்டும் பக்தர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றி ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்தை அருளிவருகிறார் ஸ்ரீ விஜயதாஸர்.

✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா 

இது வரை, தாசர்களை பற்றி நாம் பதிவு செய்யவில்லையே என்கின்ற ஏக்கம் என்னுள் இருந்தது. நேற்றைய தினம் அவராகவே இந்த கட்டுரையை எனக்கு அனுப்பினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  லக்ஷ்மிபதிராஜா அவர்களுக்கு நன்றிகள் பல...  - ஆசிரியர்

தேதி: 23.11.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்