பள்ளிக் கொண்டருளும் அரங்கநாதஸ்வாமி / சென்னை பட்டாபிராம்.

நின்ற, அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கும் பெருமாள், நாம் சொல்லும் குறைகளை அல்லது வேண்டுதல்களை மிக விரைவாக தீர்த்துவைப்பதாகவும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் தாமதப்படுத்துவதாகவும் ஒரு கூற்று பக்தர்களிடத்தில் நிலவி வருகின்றது. காரணம், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால், பக்தர்களின் வேண்டுதலை சற்று தாமதம் செய்கிறாராம். 

து தவறான கூற்று. இன்னும் சொல்லப் போனால், சிறிய பரிகாரங்களைகூட எதிர்பார்க்காமலும், பக்தர்கள் செய்கின்ற (மொட்டையடித்தல், விரதம் இருத்தல்) வேண்டுதலை எதிர்பார்க்காமலும், பக்தர்கள் இடுகின்ற காணிக்கைகளைகூட முக்கியமாக கருதாமல், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து, சீக்கிரமாக நிவர்த்தி செய்கிறார். அது எப்படி! என்று ஆச்சரியமாக இருக்கிறதா!

தற்கு நம் முன்னோர்கள் மிக அழகான ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் சயன கோலப் பெருமாள், பக்தர்களின் வேண்டுதல்களை கேட்டு, சயன கோலத்திலிருந்து சற்று கண்விழிப்பாராம். எங்கு இந்த வேண்டுதல்கள் எல்லாம் நம் தொடர் நித்திரைக்கு ஆபத்தாகிவிடுமோ? என்கின்ற அச்சத்தினால், சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் வேண்டியதை தந்து விடுவாராம்.

டாடா... என்ன அருமையாக முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்கள். அப்போது, சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் யார்? என்ற கேள்வி எழுகின்றதல்லவா? பலரும் அறிந்ததே.. பெரும்பாலான கோயில்களில், சயன கோலத்தில் காட்சிக் கொடுப்பது சாக்ஷாத் அந்த ``ரங்கநாத பெருமாள்தான்’’!

ரெங்கநாதர் என்று சொன்ன உடனே, ஸ்ரீரங்கத்தில் கோயில்கொண்டுள்ள `ரங்கநாதஸ்வாமி'யைதான் நம் நினைவுக்கு முதலில் வரும். ஆஜானுபாகு தோற்றம், பெரியத் திருவடி என நம் கண்கள் முன்னே நிற்கும்.

ப்படி நம் கண்கள் முன்னே நிற்கும் மற்றுமொரு கோயிலும் உள்ளது. சென்னை பட்டாபிராம், திருத்தண்டுரை என்கின்ற இடத்தில் `ஸ்ரீ அரங்கநாயகி தாயார் சமேத, ஸ்ரீ அரங்கநாதப் பெருமாள்' எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்து வருகிறார். கோயிலின் முகப்பை கண்டவுடனே;

கண்களித்யாதகோ

காவேரி ரங்கன நோடதா

ஜகங்களொளகே மங்கள மூருத்தி

ரங்கன ஸ்ரீ பாதங்கள நோடதா

என்னும் `ஸ்ரீ பாதராஜரின்’ பாடலை மனதில் நினைத்தவாறே உள்ளே சென்றோம். அழகிய தோற்றம். பழமைமாறாத வாசம். கோயிலை பற்றி அறிந்துக் கொள்ள ஆவலாக இருந்தோம். உள்ளே சென்றதும் கோயிலின் நிர்வாகியிடம் கேட்கத் தொடங்கினோம்.

1948-ஆம் ஆண்டில், திருத்தண்டுரையில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தினமும் சில சத்சங்கத்தை செய்ய ஆசைப்பட்டனர். அதனால், ஒரு கூடாரம் ஒன்றினை அமைத்து, அவ்வூர் மக்கள் அனைவரும் இனைந்து நித்தியப்படி சுவாமி பஜனைகளை செய்துவந்துள்ளார்கள். மேலும், 1958-ல் அவ்விடத்தில் கருங்கற்களைக் கொண்டு, சுவர் எழுப்பி கோயில்போன்ற வடிவமைத்து, பாமா - ருக்மணி சமேதராக இருக்கக்கூடிய ஸ்ரீ கிருஷ்ணரின் புகைப் படத்தைக்கொண்டு, வெகு சிறப்பான முறையில் பூஜையும், பஜனையும் செய்துவந்திருக்கின்றார்கள்.

1983 - ஆம் ஆண்டு முதல் சிவக்குமார் என்பவர் இந்த பஜனை செய்யும் பொறுப்புகளை ஏற்கிறார். ஒருநாள் இந்த இடத்தில் கோயில் கட்டினால் எப்படியிருக்கும் என்று மனதில் நினைத்திருக்கிறார். நாட்கள் செல்ல.. சுமார் 2007 - ஆம் ஆண்டில், சிவக்குமாருக்கு கனவு ஒன்று ஏற்படுகிறது. அந்த கனவில், ஐந்து தலை பெரிய நாகத்தின் மீது அரங்கநாதசுவாமி பள்ளி கொண்டிருப்பதையும், `இதே போன்று எமக்கு ஒரு அழகிய கோயில் ஒன்றினை கட்டுமாறு' உத்தரவிட்டிருக்கிறார், பள்ளிக் கொண்டான்.

தன் படி, 2007-ஆம் ஆண்டு முடிவில், கோயில் எழுப்ப திட்டமிடுகிறார். மகாபலிபுரத்தில் உள்ள சில சிற்பிகளிடம் ஆலோசனைகளை பெற்று, ஒரே கற்களினால் ஆன அரங்கநாதரை வடிவமைத்தார்கள். அந்த பெருமானை, 2008 - ஆம் ஆண்டு மேற்கூரைகளை மட்டும் தகர்த்துவிட்டு, அரங்கநாதரை ஒரு நாள் முழுவதும் உள்ளே நகர்த்தி பிரதிஷ்டை செய்தார்கள். எப்படி அந்த சிறிய இடத்திற்குள் அரங்கநாதர் எழுந்தருளினார் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

பிறகு, கோபுரங்களை அமைக்கும் பணிகள் தொடக்கி, நிறைவுபெற்று 2009 - ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைப் பெற்றது.

ந்த அரங்கநாதஸ்வாமிக்கு முன்பாக கருடாழ்வாரும், சுற்று பிரகாரத்தில் அரங்கநாயகி தாயாரும், ஆண்டாளும் வீற்றியிருக்கிறார்கள். கருவறைக்குள், ஐந்து தலை சேஷனின் மீது வலது கரத்தை தலையில் வைத்துக் கொண்டு புஜங்க சயனமாகவும், இடது காலை சற்று மடக்கி, வலது காலை நீட்டி, அனந்த சயன திருக்கோலத்தில் அரங்கநாதஸ்வாமி சேவை சாதிக்கிறார். அருகில் ஸ்ரீதேவி - பூதேவியும், அரங்கநாதரின் வயிற்று பகுதியில் இருந்து தோன்றிய பிரம்மாவும் பக்தர்களுக்கு அருளுகிறார்கள். மேலும், மூலவரின் முன்பு சில உற்சவ மூர்த்திகளும் உள்ளன.

புரட்டாசி காலங்களில், அரங்கநாதருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதே போல், ரங்கநாதர் என்று சொல்லாலே வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமல்லவா! இங்கும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போல், மாதந்தோறும் ரேவதி நட்சத்திரத்தன்று மஹா சுதர்சன ஹோமமும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. சித்திரை திருவாதிரை ஆடிப்பூரம், கோகுலாஷ்டமி, புரட்டாசி மாதத்தில் அன்னகூட உற்சவம், மார்கழி தனுர் மாத உற்சவம், அனுமன் ஜெயந்தி, மாசிமகம் அன்று சமுத்திரத்தில் தீர்த்தவாரி, பங்குனி உத்திரத்தன்று தாயாருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். மேலும், திருப்பதியில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்காக அலங்காரக் குடைகள், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்படி செல்லும் வழியில், இந்த கோயிலுக்கும் குடைகள் வந்துவிட்டு செல்லுகின்றது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, அரங்கநாதர் ஏராளமான வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார். அதே போல், பள்ளிக் கொண்டிருக்கும் அரங்கநாதருக்கு, தயிர் அபிஷேகம் செய்து, அந்த தயிரை உட்கொண்டால், சந்தான பாக்கியம் அதாவது, குழந்தை பேறு நிச்சயம் கிட்டும். நிறைவேறினால் துலாபாரமும் போடுவார்கள்.

காலை: 7.00 முதல் 10.00 வரை, மாலை: 6.00 முதல் 9.00 வரை கோயில் திறந்திருக்கும். சனிக்கிழமை மற்றும் விழா காலங்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டதாகும். மேலும், தொடர்புக்கு: 9841996683 

✒ ரா.ரெங்கராஜன்

தேதி: 23.12.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்