ராமேஸ்வரமும் அதனைச் சுற்றியுள்ள ஷேத்திரங்களும் / அருமையான கைடு... பகுதி - 2
பகுதி - 2
திருப்புல்லாணி (அ) தர்பஸயனம்
இங்கு, ஸ்ரீராமபிரான் தர்ப்ப ஸயனத்தில் படுத்து, விரதம் அனுஷ்டித்தது, லோக விடம்பனமே ஆகும் என ஸ்ரீ மன் மத்வாச்சாரியார், தமது ``மஹா பாரத தாத்பர்ய நிர்ணயத்தில்’’ (அத்தியாயம் 8: ஸ்லோகம் - 2) ஸ்பஷ்டமாக நிர்ணயம் செய்து குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, அபார சக்தியுள்ளவர் என்பது பிரஸித்தி ஆகியிருந்தாலும், எந்த ஒரு கார்யத்தையும் முதலில் மென்மையாகத்தான் தொடங்க வேண்டும் எனவும், 'ஸாம', 'தான', 'பேத', 'தண்ட' என்கின்ற உபாயங்களை கிரமமாகத்தான் உபயோகப்படுத்த வேண்டுமே ஒழிய, எடுத்தவுடன் தண்ட பிரயோகம் கூடாது என்னும், தர்மத்தை உலகிற்கு உணர்த்தவே ஸ்ரீராமபிரான் கடல் அரசனை வழிவிடும்படி வேண்டிக் கொள்பவன் போல் நடித்து, விரதத்தை அனுசரித்து, தர்ப ஸயனத்தில் (புல்லணையில்) படுத்திருந்தானே தவிர, ராமனுக்கு அஸக்தியோ, ஸமுத்திரத்தைக் கடக்க வேறு வழி கிடையாது என்பதில்லை, எனவும் ஆச்சாரியர் நிர்ணயம் செய்துள்ளார்.
![]() |
திருப்புல்லாணி கோயிலின் முழுத் தோற்றம் |
தர்ப ஸயனத்தைப் பற்றி தீர்த்த பிரபந்தத்தில் வர்ணித்துள்ள ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர், சித்ரகூடத்தில் ஸ்ரீ ராமபிரான் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் வாஸம் செய்யும் வேளையில், காக்கையின் உருவில் வந்த குரங்காஸூரன் ஸீதையிடம் தவறான ரீதியில் சில்மிஷம் செய்ய எத்தனித்த போது, தர்பைப் புல்லையே அஸ்திரமாக்கி ஏவ, அது குரங்காஸூரணை கொன்றதனால், ஸ்ரீ ராமபிரான் தர்ப்பைப் புல்லை அனுகிரஹிக்கும் பொருட்டு, அதையே ஸமுத்ர ராஜன் லங்கைக்குச் செல்ல பாலம் அமைக்க அனுமதிக்கும் வரை ஸயனிக்க தேர்ந்தெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் (தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 14).
ராம சேது
சீதையை (மாய) அபஹரித்த ராவணனை, இலங்கை சென்று எதிர்த்து யுத்தம் புரிய, வானர சைன்யத்தைக் கொண்டு கடலின் மீது ஸ்ரீ ராமர் அமைத்த பாலமே 'ராம ஸேது' என்பதாகும்.
ராம ஸேதுவைப் பற்றி தீர்த்த பிரபந்தத்தில் வர்ணித்துள்ள ஸ்ரீ வாதிராஜர், ஸ்ரீ ராமனால் தன்னுடைய சேவகர்களான வானர சைன்யத்தைக் கொண்டு கட்டப்பட்ட இந்த ராமஸேது, கடல்சூழ் இந்த பூமியின் தாயான பூமாதேவி, தனது மகளான ஸீதாதேவியைக் கடத்திச் சென்ற ராவணனிடம் இருந்து மீட்டெடுக்க மருமகனான ஸ்ரீராமனுக்கு உதவி செய்யும் (சேவை) விதத்தில் அமைந்துள்ளது எனக் காவியமாக வர்ணித்துள்ளார். (தக்ஷிண பிரபந்தம் ஸ்லோகம் - 15).
மேலும், பொதுவாக வாயுவின் பராக்கிரமம், பர்வதங்களின் முன்னால் எடுபடாது என்பதைப் பொய்யாக்கும் விதத்தில், ராக்ஷஸர்களை அழிக்கும் பொருட்டு, வாயுபுத்திரரான (அவதாரமான) அனுமான், பல பர்வதங்களை பெயர்த்தெடுத்து, அந்தக் கற்களினால் இந்தப் பாலத்தை, வானர ஸைன்யத்தைக் கொண்டு அமைத்துள்ளார் என வாயு பகவானின் சாமர்த்தியத்தையும், இங்கு புகழ்ந்துள்ளார் ஸ்ரீவாதிராஜர் (தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 17).
![]() |
ராம சேது, சாட்டிலைட் வரைபடம். |
ஸ்ரீ வாதிராஜர், மேலும் ஒரு உதாரணத்துடன் ராமஸேதுவைப் பற்றி வர்ணிக்கும் விதமாக, இப்பெருங்கடலை உபநிஷத்துக்கள் எனக் எடுத்துக் கொண்டால், அதில் லங்கைக்குச் செல்ல மார்க்கத்தைத் தேடும் வானரர்களை அந்த உபநிஷத்துக்களின் அர்த்தங்களை அறிய விளையும் ஸஜ்ஜனர்களுடன் ஒப்பிட்டால், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அதன் மீது பாலம் அமைத்தது போல், அவரே வேதவ்யாஸ ரூபத்தில் ஸஜ்ஜனர்களுக்காக பிரஹ்மஸூத்ரத்தை இயற்றியுள்ளார் எனவும், இந்த மாபெரும் ராமஸேது நிர்மான காரியத்தில், ஸ்ரீ அனுமான் பல்வேறு பர்வதங்களிலிருந்து, கற்களைக் கொணர்ந்து வந்து பாலத்தை அமைக்க சேவை புரிந்தது போல், அவரே ஆச்சாரியர் ஸ்ரீ மத்வராக அவதரித்து பல்வேறு இதிகாச புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார் எனவும், யாராலும் அழிக்க முடியாத பாலத்தை ஸ்ரீ அனுமான் நிர்மாணம் செய்தது போல், யாராலும் கண்டிக்க இயலாத எல்லோருக்கும் சம்மதமான சித்தாந்தத்தை ஆச்சாரியராக அவதரித்து அருளியதாகவும் ஒப்பிட்டு, எவ்விதம் இந்த ராமஸேது வானரர்கள் மட்டும் ராம கார்யத்திற்காக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டதோ, அதுபோலவே, ஆச்சாரியாரின் ஸித்தாந்தமும்கூட தகுதியுள்ள ஸஜ்ஜனர்கள் மட்டுமே அறிந்துகொள்ளும் விதத்தில் அமைந்தது எனவும் ஒப்பிட்டு வர்ணித்துள்ளார் ஸ்ரீ வாதிராஜர் (தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 18)
மேலும், இந்த ராமஸேதுவின் மகத்துவத்தை விளக்கும்படியாக, ஸ்ரீ ராமரின் பாத துளியானது பாலத்தில் (ராம ஸேது) படிந்திருப்பதால் அதை ஸ்பர்ஸித்து வணங்கும் பொருட்டு கடலானது அலைகளை வீசி, எம்பி மேலெழுகிறது எனவும் குறிப்பிட்டு, இத்தகைய ராம ஸேதுவின் தரிசனமே ப்ரமஹத்யா முதலான தோஷங்களை போக்கக் கூடியது எனவும் விளக்கியுள்ளார் ஸ்ரீ வாதிராஜர்.( தக்ஷிண பிரபந்தம்- ஸ்லோகம் - 19)
![]() |
கழுகுப் பார்வையில், தனுஷ்கோடி. |
தனுஷ்கோடி
`தனுஸு’ என்றால் வில் என்று பொருள். `கோடி’ என்றால் `முனை’ என்று பொருள். ஸ்ரீராமபிரானின் வில் முனையினால் உருவானது தனுஷ்கோடி ஆகும். ஸ்கந்த புராண வாக்கின்படி, விபீஷணனின் பிரார்த்தனைக்கு இணங்க, ராமஸேதுவின் மூலமாக பின்னாட்களில் எதிரிகள் லங்கைக்குள் நுழைவதைத் தடுக்க, ஸ்ரீராமபிரான் தன் வில்லின் நுனியைக் கொண்டு ராம ஸேதுவின் ஒரு பகுதியை (பாலத்தின் தொடர்ச்சியை) உடைத்து, பிரித்த இடமே 'தனுஷ்கோடி' எனப் போற்றப்படுகிறது.
கங்கையில், இறப்பதினால் உண்டாகும் புண்ணியத்தையும், நர்மதையில் நோன்பு மேற்கொள்வதனால் உண்டாகும் பலனையும், குருக்ஷேத்திரத்தில் தானம் செய்வதால் ஏற்படும் நன்மையையும் இணைத்து மாபெரும் புண்ணியத்தை தனுஷ்கோடியில் செய்யும் ஸ்நானம், தீர்த்தத்தின் ஸ்வீகாரம் அருள்கிறது எனப் போற்றப்படுகிறது.
ஸ்ரீவாதிராஜர், தீர்த்த பிரபந்தத்தில் குறிப்பிடுகையில், தனுஷ்கோடி தரிசனம், தீர்த்த ஸ்நானம், பல்வேறு தீர்த்தங்களிலே நீராடிய பலனை அளிக்கும் எனவும், சஜ்ஜனர்களுக்குச் செய்யும் தானம், யாகம், குளங்கள் வெட்டுதல் முதலான பல்வேறு அனுஷ்டானங்களை செய்வதால் உண்டாகும் புண்ணியம், தனுஷ்கோடி தீர்த்தத்தினாலேயே ஸித்திக்கும் எனவும், விளக்கி உள்ளார். (தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 25 & 26)
மேலும் ஸ்ரீவாதிராஜர், ஸ்ரீராமபிரானிடத்தில் பிரார்த்தனை செய்யும் விதத்தில், வானரப் படைக்குத் தலைவனும் (ஸ்வாமி), அம்புராத்தூணியில் அம்புகள் எப்போதும் நிறைந்தவனும், தைத்யர்களின் ஸேவையை முழுவதுமாக அழித்தவனும், சத்ரியர்களில் சிறந்தவனும்,ஸீதா தேவியை மகிழ்விக்க கடலிலே பாலம் அமைத்தவனும், அனைத்து நற்குணங்களும் நிரம்பியவனுமான ஸ்ரீராமன், நம்மை ரக்ஷிக்கட்டும் என வேண்டியுள்ளார் (தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 29).
![]() |
உப்பூர் விநாயகர் ஆலயம். |
✧ இதுபோல் இன்னும் பிற க்ஷேத்திரங்களான உப்பூர் விநாயகர் ஆலயம், ஸ்ரீ ராமன் லங்கையை நோக்கி வந்தபோது வழிபட்டது.
✧ தேவிபட்டினம் என்பது தேவியானவள் மகிஷன் எனும் அரக்கனை ஸிம்ஹவாஹினியாக அழித்த இடம் மற்றும் ஸ்ரீராமர் நவக்ரகங்களை (நவபாஷாணம்) வழிபட்ட இடம் எனவும் வணங்கப்படுகிறது.
✧ திருஉத்திரகோசமங்கை என்பது தபஸூ மேற்கொண்ட 1000 முனிவர்களுக்காக சிவபெருமான் ஸஹஸ்ர லிங்க ரூபத்தில் மங்களேஸ்வரி உடன் உறை மங்களநாத ஸ்வாமியாக அருள் புரியும் க்ஷேத்திரம் ஆகும். இங்கும்கூட ஸ்ரீராமபிரான் வழிபட்டது என்பது லோக விடம்பனத்திற்காகவும் அஸூர மோகஹத்திற்காகவும் என அறிய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக