ராமேஸ்வரமும் அதனைச் சுற்றியுள்ள ஷேத்திரங்களும் / அருமையான கைடு... பகுதி - 1

பகுதி - 1

ராமேஸ்வரம், பாரத தேசத்தில் உள்ள ஷேத்திரங்களில் மிக முக்கியமானதாகும். பரதக் கண்டத்தில், 4 திசைகளிலும் உள்ள முக்கிய க்ஷேத்திரங்களில், மேற்கே த்வாரகை, வடக்கில் பத்ரி, கிழக்கில் புரி என ஒவ்வொரு திக்கிற்கும் சிறப்பானதொரு க்ஷேத்திரப் பற்றி குறிப்பிடும் நமது சாஸ்திரங்கள், தென்திசையில் அமைந்துள்ள ராமேஸ்வரத்தை பற்றியும் போற்றுகின்றன. 

இது, கடற்கரை தளங்களில் முக்கியமானதொரு புண்ணியத் தலமாகவும், பாண்டிய நாட்டு சைவத் திருத்தலங்கள் 14-ல், சிறந்ததாகவும் விளங்குகிறது.

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலில் மூலவர், ஸ்ரீ ராமநாத ஸ்வாமி, தாயார் பர்வதவர்த்தினி அம்மன். மூலவரான ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திரேதா யுகத்தில், ராவணயுத்தம் முடிந்து திரும்புகையில், ஸ்ரீ சீதாதேவி தமது திருக்கரத்தினால் மணலினாலேயே லிங்கம் அமைக்க, அதை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிரதிஷ்டை செய்து பூஜித்தது என பிரசித்தியாகி உள்ளது. 

இந்த க்ஷேத்திரம் மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூவகையிலும் வணங்கப்பட்டு, முப்பெருமைகளை பெற்றதாக உள்ளது. த்வாபர யுகத்தில் பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சகோதரனான பலராமனும், தீர்த்த யாத்திரையின் போது விஜயம் செய்த திருத்தலம் இது. 

ஸ்ரீ முக்ய ப்ராணரின் மூன்றாவது அவதாரமான ஸ்ரீமன் மத்வாச்சாரியார், சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த புண்ணிய பூமி இது

சைவக் குருமார்கள் நால்வரும் போற்றித் துதித்த தலம் இது. கி.பி 12-ஆம் நூற்றாண்டில், இலங்கை அரசன் பராக்ரமபாகு என்பவர், மூலஸ்தானத்தை கட்டினார். இவ்வாலயத்தின் அமைப்பும் தூண்களும், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இதுவன்றி, ஸ்ரீ ஆஞ்சநேயர், காசியில் யிருந்துக் கொண்டு வந்த சிவலிங்கம் (காசி விஸ்வநாதர்) விசாலாக்ஷி, ஸ்ரீ சக்ரம், நந்தி மண்டபம், கொடிமரம் விமானம், பலிபீடம், பிரகாரங்கள், கோபுரங்கள் என அனைத்துமே மிகச் சிறப்பு வாய்ந்தது. 

இங்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் கொண்டு வந்துள்ள ``காசி விஸ்வநாதருக்கே’’ முதல் பூஜை செய்யப்படுகிறது. இது ஸ்ரீ ஹரி (ஸ்ரீ ராமன்) வாயு பகவானின் (ஹனுமன்) மேல் கொண்ட ப்ரீதிக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

பொதுவாக, எல்லா ஆலயங்களிலும் தீர்த்தமானது குளம் வடிவில் இருப்பதுண்டு. ராமேஸ்வரத்தில், கோவிலுக்கு எதிரில் பெரிய கடல் வடிவில் 'அக்னி தீர்த்தம்' அமைந்துள்ளது. ராமேஸ்வரம் செல்லும் பாதையில் வேதாளை என்னுமிடத்தில் வேதாளவரத தீர்த்தத்தில் ஆரம்பித்து தனுஷ்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் அக்னி தீர்த்தம், ஈறாக 53 தீர்த்தங்கள் என தலப்புராணங்களில் கூறப்பட்டுள்ளன. 

அவற்றில் சில, காலப்போக்கில் மூடி தூர்ந்துவிட்டன. கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கோவிலின் வெளிப்புறம் உள்ள தீர்த்தங்கள் முறையே விநாயகர் தீர்த்தம், நவபாஷாணம், சக்கர தீர்த்தம் (தேவி பட்டினம்), சக்கர தீர்த்தம் (திருப்புல்லாணி), வேதாள வரத தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், கபி தீர்த்தம், பைரவ தீர்த்தம், சீதாகுண்ட தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், மங்கள தீர்த்தம், ரண விமோசன தீர்த்தம், அமுதவாவி தீர்த்தம், லட்சுமண தீர்த்தம், ராம தீர்த்தம், தனுஷ்கோடி தீர்த்தம், ஜடாமகுட தீர்த்தம், சுக்ரீவ தீர்த்தம், தர்ம தீர்த்தம், பீம தீர்த்தம், அர்ஜுன தீர்த்தம், நகுல தீர்த்தம், சகாதேவ தீர்த்தம், திரௌபதி தீர்த்தம், பிரம்ம குண்ட தீர்த்தம், பரசுராம தீர்த்தம், அனுமகுண்ட தீர்த்தம் அகஸ்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் மற்றும் நாக தீர்த்தம் என்பனவாகும்.

திருக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள தீர்த்தங்கள் முறையே, மகாலட்சுமி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், ஸர்வ தீர்த்தம், சாத்யாமிர்த தீர்த்தம், சிவ தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நளதீர்த்தம், நீல தீர்த்தம், கவாய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், ப்ரம்மஹத்தி விமோசன தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சங்கு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம் யமுனா தீர்த்தம், கங்கா தீர்த்தம் மற்றும் கோடி தீர்த்தம் என்பனவாகும்.

ராமேஸ்வரம் என்பது இங்கு உள்ள ராமநாத ஸ்வாமி ஆலயத்தை மட்டுமன்றி, சுற்றியுள்ள இன்னும் பிற ஆலயங்களையும், புண்ணியத் தலங்களையும் உள்ளடக்கியது. ஸ்ரீராமபிரான் பாதம் பட்ட, ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் கண்ட புனித க்ஷேத்திரங்கள். 

இவற்றில் முக்கியமானவை தனுஷ்கோடி திருப்புல்லாணி (தர்ம ஸயனம்), உப்பூர், தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை முதலியவை ஆகும். 

ஸ்ரீமத்வமதப் பரம்பரையில், உடுப்பியின் அஷ்ட மடங்களில் ஒன்றான ஸோதே மடத்தின் பீடாதீஸராக விளங்கிய `ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர்’ பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, தாம் தரிசித்த க்ஷேத்திர மூர்த்தி, தீர்த்தம், புராணம் மற்றும் மகிமைகளைத் தொகுத்து 'தீர்த்த பிரபந்தம்' என்ற மிக உயர்ந்த கிரந்தத்தை அளித்துள்ளார். 

இதில், தக்ஷிண பிரபந்தத்தில், தென்னிந்தியாவின் முக்கிய க்ஷேத்திரங்களின் வரிசையில் ஸ்ரீ வாதிராஜர், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தர்பஸயனம் மற்றும் ராமசேது முதலியவற்றை தரிசித்து போற்றித் துதித்துள்ளார்.

ராமேஸ்வர க்ஷேத்திரத்தைப் பற்றி வர்ணித்துள்ள ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர், ஸ்ரீ ராமநாத ஸ்வாமியை துதிக்கும் வகையில், காமனை நிராகரித்தவரும், காமிதார்த்தங்களை நிறைவேற்றுபவரும், ஜடாமுடியில் கங்கையை தரித்தவரும், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவரும், தமது அங்கத்தில் பாதியை பார்வதிக்கு அளித்தவருமான ஸ்ரீ ராமேஸ்வரனைத் துதிப்பதாக பாடியுள்ளார். (ஸ்ரீவாதிராஜரின் தீர்த்த பிரபந்தம் - தக்ஷிண பிரபந்தம் - ஸ்லோகம் - 21).

மேலும், இந்துக்களுக்கு தமது வாழ்நாளில் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று 'காசி யாத்திரை'. காசி யாத்திரை செல்பவர்களுக்கு, ராமேஸ்வர யாத்திரையும் செய்து, காசியிலிருந்து கொணர்ந்த கங்கையைக் கொண்டு அபிஷேகம் செய்வதாலேயே, யாத்திரையின் பூரண பலன் சித்திக்கும் என்ற வகையில் ஒரு வழக்கம் உள்ளது. 

இது, பாரத தேசத்திலே வட இந்திய மற்றும் தென்னிந்திய மக்களிடையே ஓர் ஒற்றுமையை ஏற்படுத்தும் பாரம்பரியமாகவும் விளங்குகிறது.

மேலும், பொதுவாக ராமேஸ்வர ஸ்தல புராணத்தில் கூறப்படுவது, ராவணனுடன் புரிந்த யுத்தத்தில் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, பிராமணனான ராவணனைக் கொன்றதினால் ஏற்பட்ட பிரஹ்மஹத்தி தோஷம் நீங்க சிவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பதாகும். 

ஆனால், சர்வோத்தமனான ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீ ராமனுக்கு, எவ்வித தோஷங்களும் இல்லை என்ற நிலையில், இவ்விதம் பிரதிஷ்டை செய்ததன் தாத்பர்யத்தை, ஸ்ரீ வாதிராஜ தீர்த்தர் அவரது 'தீர்த்த பிரபந்தத்திலும்', கன்னட கிரந்தமான 'ஹரி ஸர்வோத்தம ஸார' என்பதிலும் மிக எளிதாக விளக்கமளித்துள்ளார்.

ஸ்ரீ வாதிராஜரின் 'தீர்த்த பிரபந்தம்' (தக்ஷிணபிரபந்தம் - ஸ்லோகம் 21 - 25) மற்றும் 'ஹரி ஸர்வோத்தம ஸார' (பத்தியங்கள் 2-7) முதலியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய ஸாராம்சங்கள் :-


கல்பத்தின் இறுதியில், பிரளய காலத்தில், பிரஹ்ம, ருத்ராதி தேவதைகளையும், முனிவர்களையும், அழிக்கும் ஸ்ரீ ஹரியின் அவதாரமான ஸ்ரீ ராமபிரான்  எந்த ஹரனை (சிவனை) தோஷம் நீங்க பூஜித்தார்?

ராவணவதத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஸ்ரீமத் ராமாயணம் புண்ணியக் கதையாக போற்றப்படும் வேளையில், ஸ்ரீமத் ராமாயண கதா ஸ்ரவணமே நம் பாவங்களைப் போக்குகையில், ஸ்ரீ ராமருக்கு எவ்வித பிரஹமஹத்யா தோஷம் ஏற்படும் ?

பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கத்தரித்த சிவபெருமான், அதன் பாவத்தை போக்க, காசிக்குச் சென்று விஷ்ணுவின் பாதம் பணிந்தார் என்றிருக்க, ஸ்ரீராமன் இங்கு பிரஹ்மஹத்யா தோஷம் நீங்க சிவனை பிரதிஷ்டை செய்தார் என்பது எவ்விதம் சரியாகும்?

ராமர் உண்டாக்கிய ராமசேதுவின் (பாலம்) தரிசனமே பிரஹ்மஹத்யா முதலான பெரும் பாவங்களைப் போக்கும் என்று இருக்கையில், ஸ்ரீ ராமருக்கு ப்ரஹ்மஹத்யா பாவங்கள் நீங்க சிவபூஜை செய்தார் என்பது சரியா?


ஸ்ரீ ராமபிரானின் தாரக மந்திரத்தை தாம் இடைவிடாது ஜபிப்பதாக சிவபெருமானே கூறுகையில், அந்த சிவனை வழிபட இங்கு ஸ்ரீராமருக்கு அவசியம் இல்லை.

ஸ்ரீ ராம சேதுவின் தரிசனத்தினால், பிரஹ்ம ஹத்யா முதலான தோஷங்கள் நீங்கும் என்பதினால், சிவபெருமானுக்கு பிரம்மாவின் தலையைக் கத்தரித்ததால் ஏற்பட்ட பிரஹ்மஹத்யா தோஷம் நீங்க, ஸ்ரீ ராமபிரான் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, சிவனுக்கு ராம சேதுவின் தரிசனம் மூலமாக, அவருக்கு உண்டான தோஷம் நீங்கும் வகையில் அருள் புரிந்துள்ளார். 

ஸ்ரீ ராமசந்திர முர்த்தி, மனிதனாக அவதரித்து, அதன்படி நடந்து கொண்டு ஆடிய நாடகமே, ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை மற்றும் பூஜை என்றுணர வேண்டும். இது அஸுர மோஹத்திற்காக நடந்த விளையாட்டே ஆகும். 

ஸ்ரீ ராமபிரான் பரம வைஷ்ணவரான சிவபெருமானின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது,  அனைவரும் சிவனை வழிபடுவதன் மூலமாகவே, தம்முடைய (ஸ்ரீ ஹரியின்) அனுக்ரஹத்திற்கு பாத்திரராக இயலும் என்பதை உணர்த்தவே ஆகும்.

✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


(பகுதி - 2 தொடரும்...)

தேதி: 20.01.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்