புதிய வேதத்தையே உருவாக்கினார் யாஜ்ஞவல்கியர் / சுவாரஸ்ய பின்னணி கதை

வைசம்பாயனர் என்னும் ரிஷி, ஒருநாள் அதிகாலை தன் படுக்கையை விட்டு எழுந்தார். இருட்டில் கொல்லைப் புறம் நோக்கிச் செல்லும்போது ஒரு மெல்லிய மானை, தான் மிதிப்பது போல உணர்ந்தார். “அம்மா!” என்றொரு ஒலி. அவ்வொலியைக் கேட்டு அவரது சீடர்கள் அனைவரும் விழித்துக் கொண்டார்கள். விளக்கை ஏற்றினார்கள். வைசம்பாயனரின் காலால் கழுத்தில் மிதிக்கப்பட்டு அவரது தங்கை மகன் இறந்து கிடப்பதைக் கண்டார்கள். சிலைபோல உறைந்துபோன வைசம்பாயனர், “ஐயோ! என் மருமகனையே நான் கொன்றுவிட்டேனே. 

கடந்த வாரம் மேருமலையில் நடந்த முனிவர்களின் கூட்டத்துக்கு நான் செல்லாததால், எனக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும் என்று அவர்கள் சாபம் கொடுத்தார்கள். இப்போது இந்தச் சிறுவனைக் கொன்றதன் மூலமாக உண்மையாகவே எனக்குப் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டதே!” என்று புலம்பினார்.

தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து, “எனக்கு ஏற்பட்ட இந்தப் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக நீங்கள் அனைவரும் இணைந்து பிராயச்சித்த யாகம் செய்யவேண்டும்!” என்றார் வைசம்பாயனர். யாஜ்ஞவல்கியர் என்ற சீடர் எழுந்து, “குருவே! எதற்காக எல்லாச் சீடர்களும் இதற்காகச் சிரமப்பட வேண்டும்? நான் ஒருவனே அதைச் செய்துவிடுகிறேன்!” என்றார்.

தன்னுடைய சக மாணாக்கர்கள் சிரமப்பட வேண்டாம் என்பதற்காகவே யாஜ்ஞவல்கியர் அவ்வாறு கூறினாரே தவிர, பிறரைக் குறைத்து மதிப்பிடும் எண்ணத்திலோ தற்பெருமையாலோ கூறவில்லை. இதை உணராத வைசம்பாயனர், “உன்னுடைய அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை. குரு ஒரு ஆணையிட்டால், அதை மீறி இவ்வாறு பேசலாகுமா? நான் சொன்னதைச் செய்!” என்று கோபத்துடன் கூறினார்.


 “இல்லை குருவே....” என்று தன் நிலையை விளக்கவந்த யாஜ்ஞவல்கியரைப் பார்த்து, “உன்னைப் போன்ற பணிவில்லாத ஒருவன் எனக்குச் சீடனாக இருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன். இத்தகைய சீடர்கள் எனக்குத் தேவையில்லை!” என்றார். “சீடன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்காமலேயே கோபம்கொள்ளும் குரு எனக்கும் தேவையில்லை!” என்று சொல்லிவிட்டு யாஜ்ஞவல்கியர் குருகுலத்திலிருந்து புறப்பட்டார்.

நீ போகலாம்! ஆனால், போகும் முன் இதுவரை என்னிடம் கற்ற வேதத்தை என்னிடம் திருப்பித் தந்துவிட்டுச் செல்!” என்றார் வைசம்பாயனர். “இதோ!” என்று சொன்ன யாஜ்ஞவல்கியர், தான் அதுவரை கற்ற வேதத்தை அப்படியே உமிழ்ந்துவிட்டார். “இனி இந்த வேதத்தை நான் என் வாயால் சொல்லமாட்டேன்!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

தனிமையான ஒரு குகைக்குச் சென்ற யாஜ்ஞவல்கியர், தன் தந்தை தனக்கு உபதேசித்த காயத்ரி மந்திரத்தை ஜபித்தார். சூரியனுக்கு மத்தியில் உள்ளவரும், வேத ஒலிகளையே தன் திருமேனியாகக் கொண்டவரும், வேதத்துக் கெல்லாம் ஆதியாக இருப்பவருமான ஹயக்ரீவப் பெருமாளைத் தியானித்தார். 

குதிரை வடிவினரான ஹயக்ரீவப் பெருமாள் அவருக்குக் காட்சிதந்தார். ஹயக்ரீவர், யாஜ்ஞவல்கியரைப் பார்த்துக் கனைத்தார். அந்தக் கனைப்பு ஒலியிலிருந்து ``சுக்லயஜுர் வேதம்’’ என்ற புதிய வேதத்தையே உருவாக்கினார், யாஜ்ஞவல்கியர். அதுவரை யாஜ்ஞவல்கியரின் குருவான வைசம்பாயனர் சொல்லிவந்த வேதம் ``கிருஷ்ணயஜுர் வேதம்’’ ஆகும். அதை இனி சொல்லமாட்டேன் எனச் சபதம் செய்ததால், இப்போது சுக்லயஜுர் வேதம் என்ற புதிய வேதத்தையே உருவாக்கிவிட்டார், யாஜ்ஞவல்கியர்.

இப்படித் தன்னுடைய கனைப்பு ஒலியினுள்ளே வேத மந்திரங்களைப் பொதிந்து வைத்திருக்கும் ஹயக்ரீவப் பெருமாள் ‘மஹாஸ்வன:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸ்வன:’ என்றால் ஒலி என்று பொருள்.

வேத ஒலிகளைத் தன்னுள் ஒளித்துவைத்துள்ள ஒளிமிக்க திருமேனியை உடைய ஹயக்ரீவரைத் தியானித்தபடி 

“மஹாஸ்வனாய நமஹ” என்று தினமும் ஜபித்துவரும் மாணவ மாணவிகள் பரிமுகப் பெருமாளின் பரமானுக்கிரகத்துக்குப் பாத்திரமாகிக் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நன்றி: உ.வெ.வெங்கட்டேஷ்

தேதி: 21.03.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்