நிம்மதியான வாழ்விற்கு எழும்பூர் ஸ்ரீநிவாசன்
சென்னை - எழும்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் தெருவில் இருக்கிறது, ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில். கெங்கு ரெட்டித் தெருவிலுள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு நேரே மூன்று நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது. நகரத்தின் பரபரப்புக்கும் தனக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என்பது போன்று மிக அமைதியான சூழ்நிலையில் திகழ்கிறது இத்திருக்கோயில்.
தசரத குமாரன் ராமன் பதினான்கு ஆண்டுகாலம் வனவாசம் முடித்து, நாடு திரும்பி, முடிசூட்டிக் கொண்டார். பிறகு, தனது மனைவி சீதையுடன் அயோத்தி மன்னராக, சக்ரவர்த்தி ராமனாக, நாட்டின் பல புனித தலங்களுக்கு எழுந்தருளியுள்ளார். அதில் ஒன்று எழும்பூர் என்கிறார்கள். ராமன், சீதையுடன் வருகை தந்த தலங்களில் எல்லாம் லட்சுமி நாராயணன் எழுந்தருளி இருப்பார். அதே போன்று இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் லட்சுமி நாராயணன் இருக்கிறார். அவர்தான் இத்தலத்தின் அதிபதி என்றும் இந்தக் கூற்றுக்கு ஆதாரமாகத் தெரிவிக்கிறார்கள். இக்கோயில் அமைந்துள்ள தெருவின் பெயரும் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் தெருதான்.
சுமார் 600 ஆண்டுகள் பழமையானதும், புராதனப் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது இக்கோயில். ராஜகோபுரத்தை அண்ணாந்து வணங்கி உள்ளே நுழையும்போது நேர் எதிரே பத்மாவதி தாயார் சந்நதி காணப்படுகிறது. இது பிற வைணவக் கோயில்களில் காணப்படாத அபூர்வமான அமைப்பு என்றே சொல்லலாம்.
அன்னையை தரிசிப்பதற்கு முன் தும்பிக்கை ஆழ்வாராய், நெற்றியில் திருமண் தரித்து அமர்ந்து, அருள்புரியும் விநாயகரை வணங்கி, அர்த்த மண்டபத்தினை அடைகிறோம். கருவறையில் தனி சந்நதியில் பத்மாவதி தாயார் புன்னகைப் பூத்த முகத்தோடு அமர்ந்திருக்கிறாள். மேலிரு கரங்கள் தாமரைகளைத் தாங்கியிருக்கின்றன. கீழிரு கரங்கள் அபய, வரத ஹஸ்தம் காட்டி, ‘தன்னை சரணடைந்தவர்களின் வாழ்வு வளம் பெறும்’ என்று சொல்லாமல் சொல்கிறாள், பத்மாவதி தாயார். அன்னையின் மலர்ந்த கண்களும், கனிந்த இதழும், சிரிக்கும் முகமும் காணக் கண் கோடி வேண்டும். அன்னைக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மூக்குத்தி தீப ஒளியில் அழகுடன் மின்னுகிறது.
தாமரைச் செல்வியின் தரிசனம் பெற்ற நாம் அடுத்துக் காண்பது சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாளின் சந்நதியை. கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள். கருவறையில் அழகுக் கொடியாய் படர்ந்து நிற்கும் இவளது தாள் பணிந்து வேண்ட, தமிழறிவு தானே வளரும். கவி புனையும் திறமையும் மலரும்.
கோதையின் தரிசனத்திற்குப் பிறகு கோதண்டராமனின் சந்நதியை அடையலாம். கருவறையில், மூலவர் ராமனுக்கு அருகில் சீதா தேவியும், இளவல் லட்சுமணனும் காட்சி தருகிறார்கள். ராமனின் சந்நதிக்குப் பின்புறம் மடப்பள்ளியும் அதை ஒட்டி நந்தவனமும் உள்ளன. பிராகாரத்தில் ஸ்ரீபாதம் தரிசனம் தருகிறது. இது, ராமன் இங்கு எழுந்தருளியதை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. அடுத்து தனிச் சந்நதியில் உள்ள பக்த ஆஞ்சநேயரை காண்கிறோம். இவர் வரப் பிரசாதி. தொடர்ந்து மூன்று சனிக்கிழமை இவரை வலம் வந்து, நெய்தீபம் ஏற்றி வழிபட, கருத்து வேற்றுமையாலும், காலக் கோளாறாலும் பிரிந்து வாடும் கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
இத்தலத்தில் அமர்ந்து அருள் பரப்பும் பத்மாவதி தாயாரையும், ஆண்டாளையும், சீதா - லட்சுமண சமேத ராமனையும், அனுமனையும் தரிசித்து விட்டு வரும்போது மனசுக்குள் நிம்மதி பூத்துக் குலுங்குவது சத்தியமான அனுபவம்.
வழி: தி மெட்ராஸ் கிராண்டு ஹோட்டல் (The Madras Grand - Hotel Egmore) மிக அருகில் இந்த கோயில் அமைந்திருக்கிறது.
தேதி: 01.04.2024
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
கருத்துகள்
கருத்துரையிடுக