தாயுள்ளம் கொண்ட தாயுமாணவர் / சுகபிரசவம் ஆக அருள்கிறார்...
![]() |
மட்டுவார் குழலியம்மை சமேத தாயுமானவர் உற்சவர் |
𖤓 ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசரன், இங்குள்ள இறைவனை பூஜித்ததால் இத்தலம் சிராப்பள்ளி என அழைக்கப்பட்டது; பின்னர் மருவி திருச்சிராப்பள்ளி என்றாயிற்று. சுருக்கமாக திருச்சி.
𖤓 ரத்னாவதி எனும் பெண்ணிற்கு, அவளுடைய தாய் உருவில் இத்தல ஈசன் வந்து பிரசவம் பார்த்ததால் தாயுமானவர் என அழைக்கப்பட்டார்.
𖤓 மாணிக்கவிநாயகர் சந்நதி உள்ளிட்ட முதல் நிலை; மட்டுவார் குழலியம்மை சமேத தாயுமானவர் திருக்கோயில் இரண்டாம் நிலை; குடைவரைக் கோயில் உச்சிப் பிள்ளையார் கோயில் மூன்றாம் நிலை என்று அமைந்துள்ளது மலைக்கோயில்.
𖤓 உச்சிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து கீழே பார்த்தால் படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும் விநாயகரின் துதிக்கை போல தோன்றும்.
𖤓 தாயுமானவர் கோயில் குடமுழுக்குக்காக பொருளுதவி செய்தவரில் ஒருவர் பெயர் கல்வெட்டில் பிச்சைக்காரன் என பொறிக்கப்பட்டுள்ளது.
![]() |
மட்டுவார் குழலியம்மை சமேத தாயுமானவர் மூலவர் |
𖤓 சித்திரைப் பெருந்திருவிழாவின் 5ம் நாள் செட்டிப்பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுகப்பிரசவம் நிகழ, சுக்கு வெல்லம் கலந்த மருந்துப்பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அதனால் பயனடைந்தோர் அநேகம்.
𖤓 பதினாறு கால் மண்டபத்திற்கு மேல் உள்ள மணி மண்டபத்தில் இரண்டரை டன் எடை, 4 அடி 8 அங்குல குறுக்களவும் கொண்ட மணியைக் காணலாம். இது கிரிக்டன் எனும் ஆங்கிலேயர் அளித்தது.
𖤓 மலைப்பாதையின் நடுவில் ‘சிவ சிவ ஒலி மண்டபத்தில்’ தினமும் காலை, மாலை இரு வேளையும் ஒலிபெருக்கியில் திருமுறை ஓதுதல் நடைபெறுகிறது.
𖤓 மட்டு எனில் தேன் எனப்பொருள். தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவள் எனும் பொருள்படி இத்தல அம்பிகை மட்டுவார் குழலம்மை என அழைக்கப்படுகிறாள்.
𖤓 சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான திருவையாறு தியாகராஜர் இந்த மட்டுவார் குழலம்மை மீது பாடல்கள் புனைந்துள்ளார்.
𖤓 அம்மன் சந்நதியின் முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீசக்ரம் வரையப்பட்டுள்ளதால் அம்மனை ஸ்ரீசக்ரநாயகி என்றும் அழைப்பர்.
𖤓 அம்மன் சந்நதி எதிரில் உள்ள பாதாள அறையில் பாதாள ஐயனார் அருள் புரிகிறார். விவசாயம் செழிக்க அருள்பவராம் இவர்.
𖤓 தமிழ்நாட்டிலுள்ள நான்கு பெரிய லிங்கங்களில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்று.
𖤓 தாயுமானவருக்கு அருகில் நாக கன்னியர் எட்டுபேர் அருள்கின்றனர்.
𖤓 இத்தல தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்கள் நால்வர் தவிர, கூட இரு முனிவர்களுடன் தரிசனம் அளிக்கிறார்.
𖤓 ஆலயத்தில் காணப்படும் கல்லால் உருவாக்கப்பட்ட சங்கிலி, கல் சிங்கத்தின் வாய்க்குள் சுழலும் கல்பந்து போன்றவை சிற்பக்கலை சிறப்புக்கு சான்றுகள்.
𖤓 இத்தலத்தில் அருளும் திருமகளை 108 செந்தாமரை மலர்களால் அர்ச்சிப்பவர்களின் கடன்கள் விரைவில் தீரும் என நம்பிக்கை.
𖤓 பௌர்ணமி நாட்களில் திருச்சி மலைக்கோட்டையைச் சுற்றி கிரிவலமும் நடக்கிறது.
𖤓 சுகப் பிரசவத்துக்கு நேர்ந்து கொண்டவர்கள் தரும் வாழைப் பழத்தாரை அர்ச்சகர், பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்.
𖤓 ஐப்பசி பௌர்ணமியில் தாயுமானவருக்கு அன்னாபிஷேகம் நடக்கும்.
தேதி: 29.05.2024
கருத்துகள்
கருத்துரையிடுக