ஆச்சரியமூட்டும் திருவல்லிக்கேணி திருமகன் / அறியப்படாத தகவல்கள்!

𖣔 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மிக அற்புதத் திருத்தலம் திருவல்லிக்கேணி. 

𖣔 ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அகோபிலம், அயோத்தி போன்ற ஐந்து திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் அர்ச்சாவடிவங்கள் இத்தலத்தில் தனித் தனி சந்நதிகளில் அருளுவது, பிற தலங்கள்  காண இயலாத தனிச் சிறப்பு. 

𖣔 இத்தலம் ``ப்ருந்தாரண்ய தலம்’’ என்றும் வழங்கப்படுகிறது.

𖣔 மிகத் தொன்மை வாய்ந்த ஆலயம் இது என்கின்றன கல்வெட்டுகள். மகாமண்டலேஸ்வரர் மற்றும் வீரப்ரதாப சதாசிவதேவ மகராயர் காலத்தில் இங்கு ஸ்ரீமந்நாதரின் (ரங்கநாதரின்) சந்நதியும், பார்த்தசாரதி ஸ்வாமி சந்நதியும் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கின்றன. 

𖣔 சுமதி என்னும் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, திருவேங்கடமுடையான், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்த கோலத்துடன் மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரோடும் இங்கே அருள்புரிகிறார்.

𖣔 ஆலயத்திற்கு எதிரே நீராழி மண்டபத்துடன் காணப்படும் திருக்குளத்திற்கு ``கைரவிணி’’ என்று பெயர். 

𖣔 ராஜகோபுரத்தின் முன் 36 தூண்கள் தாங்கும் பெரிய மண்டபம் உள்ளது. அதில் தன் மடியின் இடது பக்கத்தில் லட்சுமிதேவியை அமர்த்திக் கொண்டு அருள்கிறார் நரசிம்மமூர்த்தி. 

𖣔 இந்த மண்டபத்திலிருந்துதான் உற்சவ மூர்த்தங்கள் திருவீதி புறப்பாடு ஆகும். வேதபாராயண கோஷ்டி முன்னே செல்லும். வீதியுலா முடிந்ததும், திருவந்திக்காப்பும் இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது. 

𖣔 மூலக் கருவறையில், ஒருகையில் சங்குடனும், மறுகையில் வரதஹஸ்தத்துடனும், மீசையுடனும் கம்பீரமாக வேங்கடகிருஷ்ணன் தரிசனம் சாதிக்கிறார். அருகில் ருக்மிணி தேவி. தாயாரின் வலது பக்கத்தில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமர்; பெருமாளுக்கு இடப்பக்கத்தில் தம்பி சாத்யகி; மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் என்று கிருஷ்ணரின் குடும்பத்தை தரிசிக்கலாம்.  

𖣔 மூலவரின் வலது கையில் உள்ள சங்கு, கீதையின் முதல் அத்யாயத்திலுள்ள 15வது ஸ்லோகமான ``பாஞ்ஜசன்யம்’’ என்பதின் பொருளையும், இடது கை வரதஹஸ்தமாக இருப்பது ``சரம ஸ்லோகமான’’ (18ம் அத்யாயம்) ‘ஸர்வதர்மாந்.’ என்பதையும் உணர்த்துகின்றன.


 𖣔 மூலவரின் திருவடிகளின் கீழ் நித்ய உற்சவர், பலிபேரம், சயனபேரம் ஆகிய மூர்த்திகளும், நவநீத கண்ணனும், சுதர்சனமூர்த்தியும் அருட்காட்சி அருள்கின்றனர்.

𖣔 உற்சவர் பார்த்தசாரதி, முகத்தில் வடுச் சின்னங்களோடு, புன்னகை ததும்ப, உபயநாச்சியார்களுடன் தரிசனம் தருகிறார். அர்ஜுனனுக்குத் தேரோட்டியபோது எதிர்ப்பட்ட அம்புகள் தைத்ததால் ஏற்பட்ட வடுக்கள் அவை. 

𖣔 அவருக்கு சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்களில் மிளகாய் சேர்த்தால் அந்த நெடி சுவாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்பதால், நிவேதனங்களில் மிளகாய் சேர்ப்பதில்லை. 

𖣔 இத்திருத்தலத்தில், யோகநரசிம்மர் ‘அழகியசிங்கர்’ என்ற பெயருடன் தனி சந்நதியில் தரிசனம் தருகிறார். 

𖣔அத்ரி முனிவரின் நோய்தீர்க்க யோகநரசிம்மராய், தெள்ளிய சிங்கமாய் காட்சி தந்திருக்கிறார் திருமால். இப்போதும் தன்னை நாடிவருபவர்களுக்கு அபய, ஆஹ்வான அஸ்தங்களுடன் அருள் பொழிகிறார்.


𖣔 ஒரு சிறிய தூணில் சிற்பமாகக் காட்சி தந்து, பக்தர்களால் கொண்டாடப்படுகிறார் அனுமன். 

𖣔 பார்த்தசாரதியின் கருவறை விமானமான ஆனந்த விமானத்தை கண்குளிரக் காணலாம். 

𖣔‘கலௌ வேங்கடநாயகம்’ என்றும், ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்றும் மகான்களால் போற்றப் பெற்ற வேங்கடாசலபதியும், கிருஷ்ணனும் ஒன்றிணைந்து ஓருருவாய், வேங்கடகிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார்கள். 

𖣔ஒவ்வொரு ஜனவரி மாதமும் ஏதாவது ஒரு சனி - ஞாயிறன்று ஈக்காட்டுத்தாங்கலுக்கு பெருமாள் எழுந்தருளி திருமஞ்சனம் ஏற்கிறார். பிறகு, சைதை பிரசன்னவெங்கடாசலபதி ஆலயத்திற்கு வந்து அலங்காரம் செய்து கொண்டு, திருவல்லிக்கேணிக்குத் திரும்புகிறார். இது திருவூரல் உற்சவம் எனப்படுகிறது.

இன்னும் ஏராளம் ஏராளம் சாரதியை பற்று சொல்ல... ஆனால், இந்த ஒரு தொகுப்பு போதாது. அடுத்த தொகுப்பில், நாம் சாரதியை பற்றி இன்னும் ஆழமாய் தியானிப்போம்!

நன்றி..

தேதி: 18.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்