வாழ்வில் ஜெயம் பெற ஸ்ரீ ஜெயதீர்த்தர் - 3 / மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக்விற்கு அனுகிரஹம்


 பகுதி - 3

ஸ்ரீஜெயதீர்த்தரின் அனுகிரஹம்:

ரு கிராமத்தின் கால்வாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த கிராமத்தாரிடம் ஸ்ரீஜெயதீர்த்தர், தனது கைப்பிடி மண்ணைக் கொடுத்து, இதனை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தூவிவிடவும். உடைப்பு சரியாகிவிடும் என்றார். அது போலவே தூவிய ஊர் மக்கள், உடைப்பு சரியாகி தண்ணீர் நின்றுவிட்டது.

அதே போல், கிராம மக்களால் கட்டப்பட்ட கால்வாய் ஒன்று, வெய்யில் காலத்தில் வறண்டுபோயிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள், பல இன்னல்களுக்கு ஆளாகியிருந்தனர். 

மீண்டும் அந்த கிராம மக்கள், ஸ்ரீஜெயதீர்த்தரை அணுக, அவர் பரமாத்மாவை நினைத்து சில மந்திரங்களை ஜபித்தபின், ஒரு பிடி மண்ணைக் கொடுத்து, குளத்தில் போடச் சொன்னார்.

ஸ்ரீஜெயதீர்த்தர் திருவாய் மொழிந்தபடியே கிராம மக்கள் செய்தார்கள். என்ன ஆச்சரியம்! போட்ட மாத்திரத்தில் குளத்தின் அடி பாகத்தில் இருந்து குபுகுபுவென தண்ணீர் வரத் தொடங்கியது. இன்றும் பல கிராம மக்கள் இந்த குளத்தின் தண்ணீரையே பயன்படுத்தி வருகின்றன. ஸ்ரீஜெயதீர்த்தரின் அருளால், இன்றளவும் வற்றாமல், தண்ணீர் கிடைத்து வருவது ஆச்சரியமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் பூரித்து, மகான் ஸ்ரீஜெயதீர்த்தரை நினைவுக் கூருகிறார்கள்.

கோனேரி பிரணேஷா

"கோனேரி பிரணேஷா"

ருமுறை, ஜெயதீர்த்தர் தன் தினப்படி பூஜைகளை முடித்ததும், ஒரு குரங்கு ஒன்று தீர்த்தரின் அருகில் வந்து, அருகில் இருந்த ஒரு பாறையில் “கீதா பாஷ்ய டீகா" என்று எழுதிக் கொண்டிருந்தது. இதை கவனித்த ஜெயதீர்த்தர், “கீதா பாஷ்ய டீகா” என்று எழுதுவது, முக்யபிராணதேவரின் (அனுமார்) கட்டளை என்பதை உணர்ந்து,  அதே பாறையில் குரங்கின் உருவத்தை வரைந்து. அதனை பிராணபிரதிஷ்டையும் செய்தார்.  அதன் பின்னர், கோனேரி என்னும் ஒரு பிரிவை தேர்ந்த குடும்பத்தார், முக்யபிராணருக்கு ஒரு மண்டபத்தைக் கட்டினர். 

முஸ்லீம் மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக்விற்கு அனுகிரஹம்:

முஸ்லீம் மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக் ஆண்ட காலத்தில், இந்துக்கள் மற்றும் பிராமணர்களுக்கு அதிக வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மன்னரின் மகனான இளவரசர் தீராத நோய் பிடியில் இருந்தார். அந்த வேளையில், மகான் ஸ்ரீஜெயதீர்த்தரின் மகிமைகளை பற்றி ஃபிரூஸ்ஷா தெரிந்துக்கொள்ள, ஜெயதீர்த்தரை தன் அரண்மனைக்கு அழைத்து, இளவரசரை காப்பாற்ற முடிவு செய்தார். 

தீர்த்தரை அழைத்து வர, தன் மந்திரி ஒருவரை அனுப்பினார், மன்னர். மன்னரே அழைப்புவிடுத்ததால் மறுப்பு தெரிவிக்காமல் உடனே ஒப்புக் கொண்டார். அரண்மனை நோக்கி ஜெயதீர்த்தர் வர, அதிக வரிவிதிப்பாலும், இந்துக்களை முஸ்லீமாக மாறும்படியும் வற்புறுத்தியதாலும் இந்துக்களும், பிராமணர்களும் அரண்மனையின் முன்பு உபவாசம் (உண்ணாவிரதம்) போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

தனைக் கண்ட ஜெயதீர்த்தர், ``நான் இவர்களுக்குதான் ஆதரவு. பலரும் உபவாசம் இருப்பது எனக்கு வேதனைகளை தருகிறது. ஆகையால் நான் அரண்மனை அருகில்  உள்ள ஒரு மண்டபத்தில் தங்கிக் கொள்கிறேன். மறுநாள் அரண்மனைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள்'' என்று அறமனைக்கு வரமறுத்த தீர்த்தர், மந்திரியிடம் தெரிவித்தார்.

மறுநாள், மகான் ஸ்ரீஜெயதீர்த்தர் அரண்மனைக்கு சென்றார். தடபுடலாக மன்னன் ஃபிரூஸ்ஷா வரவேற்றார். ``எத்தனையோ வைத்தியர் வந்து என் மகனான இளவரசனுக்கு சிகிச்சைகள் அளித்தும் துளிக்கூட குணமாக வில்லை. தனது மகன் கடுமையான நோயால் அவதிப்படுகிறான். அவன் படும் அவதிகளை என்னால் பார்க்கமுடியவில்லை. தயவு செய்து நீங்கள்தான் இளவரசனை காப்பாற்ற வேண்டும்" என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்.

மெல்லிய சிரிப்பில் சிரித்த ஸ்ரீஜெயதீர்த்தர், ``உன் மகனின் துயரத்தை உன்னால் காணமுடியவில்லை. என்னப்பனான ஸ்ரீ மந் நாராயணனின் பிள்ளைகள் தொடர்ந்து உபவாசம் இருக்கிறார்களே.. அந்த துயரத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே... இதனால்கூட உன் மகனுக்கு அந்த தீராத நோய் இன்னும் குணமாகவில்லையோ..என்று தோன்றுகிறது. இதற்கு என்ன செய்ய" என்று ஜெயதீர்த்தர் அதிரடித்தார்.

மனம் வருந்திய மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக், ``தான் என்ன செய்ய வேண்டும்" என்று ஜெயதீர்த்தர் முன்பாக மண்டியிட்டு அழுதுகொண்டே கேட்டார்.


 ``பிராமண சமூகத்தை அதிக வரிகளில் இருந்து விடுவித்து, இந்துக்களை மதமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்" என்ற நிபந்தனையை மன்னரிடத்தில் வலியுறுத்தினார். மேலும், இப்படி செய்தால் உன் மகனை நான் காப்பதாகவும் அனுக்கிரஹம் செய்தார்.

ஃபிரூஸ்ஷாவும் ஒப்புக் கொண்டார். அன்றே, மகான் ஸ்ரீஜெயதீர்த்தர் சிறப்பு பூஜைகளை செய்து, நைவேத்தியம் மற்றும் தீர்த்தப் பிரசாதத்திற்குப் பிறகு, 

மன்னர் ஃபிரூஸ்ஷாவிற்கு சிறிது பிரசாதத்தை தந்து, இதனை இளவரசருக்கு கொடுக்கும்படி கூறினார். அதே போல் செய்த மன்னர், மறுநாளே இளவரசரின் தீராத நோய் குணமாகிவிட்டது. ஃபிரூஸ்ஷாதுக்ளக் ஒப்புக் கொண்ட படி, பிராமண சமூகத்தை அதிக வரிகளில் இருந்து விடுவித்தும், மதமாற்றம் செய்வதை தடை செய்தும் ஆணையினை பிறப்பித்தார்.

இளவரசர் குணமடைந்த மகிழ்ச்சியில், ஸ்ரீஜெயதீர்த்தரை டெல்லிக்கு அழைத்து, பல மன்னர்களின் முன்னிலையில் தீர்த்தரை கௌரவிக்க ஆசைப்பட்டார் மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக். ஆனால், அதனை ஏற்க மறுத்த மகான் ஸ்ரீஜெயதீர்த்தர், ``என்னால் என்ன ஆனது? என் ஸ்ரீராமச்சந்திரரின் ஆசீர்வாதத்தாலும், ஸ்ரீமத்வாச்சாரியாரின் அனுக்ரஹத்தாலும்தான் மன்னரின் மகன் காப்பாற்றப்பட்டான் ஆக முழு மரியாதையும் அவர்களுக்கு மட்டுமே சேர வேண்டும்" என்று கூறினார், ஜெயதீர்த்தர்.

தனை கேட்ட ஃபிரூஸ்ஷாதுக்ளக், இப்படி ஒரு மஹானா! என்று ஆச்சரியப்பட்டு, அன்று முதல் மகான் ஸ்ரீஜெயதீர்த்தரின் தீவிர பக்தனானார். இதனை படித்த வாசகர்களும் நிச்சயம் மஹான் ஸ்ரீ ஜெயதீர்த்தரின் பக்தராக மாறியிருப்பார்கள் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை. ஜெயதீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை காண வேண்டும் என்கின்ற ஆவல் இருக்கிறதா? கண்டிப்பாக ஜெயதீர்த்தரை தரிசித்து ஆசி பெற வேண்டும்!

ஸ்ரீ ஜெயதீர்த்தரின் மூல பிருந்தாவனம் மல்கேட் பாலம், மல்கேட் ஜே, மல்கேட், கர்நாடகா 585317, 094481 81288.

கர்நாடக மாநிலம், கலபுர்கி என்னும் இடத்தில் இருந்து சுமார் 38.கி.மீ தொலைவில், ஸ்ரீ ஜெயதீர்த்தரின் மூல பிருந்தாவனத்தை அடைந்துவிடலாம்.

யஸ்ய வாக்கமதேனுர்ண: கமிதார்த்தன் ப்ரயச்சதி |

ஸேவா தாம் ஜெயயோகீந்த்ரம் கம்பனாச்சிதம் ஸதா ||

தேதி: 14.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்