வாழ்வில் ஜெயம் பெற ஸ்ரீ ஜெயதீர்த்தர் / மகத்துவமிக்க மத்வ மகான்கள்
பகுதி - 1
சென்ற தொகுப்பில் ``அக்ஷோப்ய தீர்த்தரை'' பற்றிய தகவல்களை படித்து, மனம் குளிர்ந்ததை பற்றி ஏராளமான வாசகர்கள் வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலமாக தெரிவித்திருந்தார்கள். மேலும், ``ஸ்ரீஜெயதீர்த்தரை'' பற்றி அறிய ஆவலாக உள்ளதாகவும், எப்போது அந்த கட்டுரை வரும் என்றும் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை நான் வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலமாக நன்கு அறிவேன்.
இதோ.. நீங்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த, ``மஹான் ஸ்ரீ ஜெயதீர்த்தரின்" அற்புதமான அறியப்படாத தகவல்கள்... அவரைப் பற்றி எழுத வேண்டும் என்றவுடன் எண்ணற்ற பல கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது. படிக்க படிக்க ``ஹாஹா.. இத்தனை அற்புதங்களை ஜெயதீர்த்தர் செய்திருக்கிறாரா! இந்த அத்தனை அற்புதங்களையும் ஒன்றுவிடாமல் நம் மத்வாச்சாரியா தமிழ் மேகஸின் வாசகர்களுக்கு தர வேண்டும் என்று முடிவாகிவிட்டது. அதனால், பகுதி - 1 , 2 என பிரித்துள்ளோம். வாருங்கள் பகுதி ஒன்றில்...
ஸ்ரீ ஜெயதீர்த்தர், மத்வ மஹான்களிலேயே மிக முக்கிய மகானாவார். மேலும், மத்வ தத்துவத்தின் தூண்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர், ஸ்ரீமத்வாச்சாரியாரின் பரம்பரையில் வந்த 6-வது யதிகளாவர்.
பூர்வாஷ்ரம விவரங்கள்: (சந்நியாசி எடுத்துக் கொள்ளும் முன்பு வரை)
→ காலம்: 1365 - 1388.
→ பூர்வாஷ்ரம பெயர்: ஸ்ரீ ரகுநாத நாயகர்.
→ ஆஷ்ரமம் குரு: ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர்.
→ ஆஷ்ரமம் சிஷ்யர்: ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர்.
துவைத மதத்தில், ஸ்ரீஜெயதீர்தரின் பெயர் எப்போதும் அவரது பங்களிப்புகளுக்காக நினைவுகூரப் பட வேண்டும். பலரும் ஆராதனை போன்ற நிகழ்வின் போது நினைவுக் கூர்ந்து வருவது மகிழ்ச்சியே...!
1. ``தத்வப்ரகாஷிகா’’ - ப்ரஹ்மஸூத்ர பாஷ்ய டீகா.
2. ``ஸ்ரீமன்னியாயசுதா’’ - அனுவ்யாக்யானா டீகா.
3. ``நியாயவிவரன டீகா’’
4. ``பிரமேய தீபிகா’’ - கீதாபாஷ்ய டீகா
5. ``நியாய தீபிகா’’ - கீதாதாத்பர்ய டீகா
6. ``ஈஷாவாஸ்யோபநிஷத்பாஷ்ய டீகா’’
7. ``ஷட் பிரஷ்ணோபநிஷத் பாஷ்ய டீகா’’
8. ``தத்வஸங்க்யான டீகா’’
9. ``தத்வவிவேக டீகா’’
10. ``தத்வோத்யோத டீகா’’
11. ``மாயாவாடா கந்தனா டீகா’’
12. ``உபாதி கந்தனா டீகா’’
13. ``பிரபஞ்சமித்யாத்வானுமான கந்தன டீகா’’
14. ``கர்மநிர்ணய டீகா’’
15. ``கதா லக்ஷண டீகா’’
16. ``பிரமன லக்ஷண டீகா’’
17. ``விஷ்ணுதத்வ நிர்ணய டீகா’’
18. ``ருக்பாஷ்ய டீகா’’
19. ``வாதவாளி’’
20. ``பிரமாண பந்தந்தி’’
21. ``பத்யமாலா’’
ஆகிய சுமார் 22 படைப்புகளை ஜெயதீர்த்தர் இயற்றியிருக்கிறார். அதில், மத்வருடைய படைப்புகள் பற்றிய வர்ணனைகள் ஏராளம். அதே போல், அத்வைதத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் பல சுயதீன ஆய்வுகள் உட்பட பலவற்றையும் எழுதியிருக்கின்றார்.
ஸ்ரீ ஜெயதீர்த்தர் எழுதும் `டீக்கா' (மத்வர் எழுதிய கிரந்தங்களுக்கு உரை எழுதுவது) போன்ற வேதாந்த நூல்களில் அவரது தனித்துவமான எழுத்திற்கும், பல இடங்களிலும் வாதாடி மத்வ தத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும், இவரை போன்று வேறாரும் இல்லை. யாரையும் ஒப்பிட முடியாது.
மேலும், ஸ்ரீ ஜெயதீர்த்தருக்குப் பிறகு வந்த அனைத்து மஹான்களுமே, இவருடைய கிரந்தங்கள், டீக்காக்கள், வியாக்யாக்களை அடிப்படையாகக் கொண்டே பின்தொடர்ந்தும், எழுதியும் வந்திருக்கின்றார்கள். அதனாலேயே இவர் மிக முக்கிய மஹானாவார்.
மேலே கூறியதை போல், இவருடைய ``டீக்காக்கள்" அற்புதமாகவும், இவர் வழிவந்த மஹான்கள் இவருடைய ``டீக்காக்களை" பின்தொடர்வதாலும், ஸ்ரீ ஜெயதீர்த்தருக்கு ``டீகாச்சாரியார்" என்னும் பெயரும் ஏற்பட்டது. இன்றும் பக்தர்கள் ``டீகாராயரு'' என்றே அன்போடு அழைப்பதை பார்க்கமுடிகிறது.
ஸ்ரீ ஜெயதீர்த்தரின் முப்பிறவி:
மத்வாச்சாரியார், தன் சிஷ்யர்களுக்கு கிரந்தபாடங்களை கற்பிக்கும்போது, சரியாக தினமும் ஒரு காளை, அவரின் வீட்டருகே வந்து நின்றுக் கொண்டு மத்வர் உபதேசிக்கும் கிரந்தங்களை ஆனந்தமாக தலையசைத்து ஆரமார உற்சாகத்துடன் தினமும் கேட்டுவந்தது. சில சமயங்களில், வீட்டிற்குள் வந்து, மத்வரின் அருகே அமர்ந்து, மத்வர் சொல்லும் வேத பதங்களுக்கு ஏற்ப தலையினை அசைத்து, அதன் கழுத்தில் கட்டியிருக்கும் மணியானது ரீங்கார ஓசையினை எழுப்பும்.
இப்படி இருக்க திடீர் என்று ஒரு நாள், தன் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது, ``பிரம்ம சூத்ர பாஷ்யம்" (பிரம்ம சூத்திரங்கள் பற்றிய விளக்கம்), ``கீதா பாஷ்ய" (பகவத் கீதையின் வர்ணனை), ``உபநிஷத் பாஷ்யங்கள்" (பல உபநிடதங்கள் பற்றிய வர்ணனைகள்), ``மஹாபாரதம் தாத்பர்ய நிர்ணயம்" (மகாபாரதத்தின் பகுப்பாய்வு), ``ரிக் பாஷ்ய" (ரிக் வேதத்தின் வர்ணனை), ``விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்" (விஷ்ணு சஹஸ்ரநாமம் பற்றிய வர்ணனை) போன்ற மத்வரின் மகத்துவமான பொக்கிஷங்களை மக்களிடத்தில் ஜெயதீர்த்தருக்கு அடுத்து எந்த சிஷ்யர் பரப்புரையை மேற்கொள்வார், என்கின்ற சர்ச்சை எழுந்தது.
மத்வர், தங்களின் பெயர்களைதான் பரிந்துரைப்பார் என்று அனைத்து சிஷ்யர்களும் ஒருவரையொருவர் முகத்தை பார்த்து சிரித்து, தற்பெருமை கொண்டு ஆணவத்தின் உச்சிக்கே சென்றனர். இந்த அண்ட சராசரத்தை காத்தருளும் ஸ்ரீ மந் நாராயணன் ஆணைக்கு இணங்கியே மத்வரின் ஒவ்வொரு அசைவும், செயலும் இருக்கும். மத்வர், ஒரு போதும் தன்னிச் சையாக செயல்பட்டதே இல்லை.
இங்கும், பகவான் நாராயணனின் ஆணைக்கு இணங்க, தன் சிஷ்யர்களை பார்த்து கூறுகிறார்;
"வியாக்யாஸ்யத்யேஷ்ட கோராட்" (व्याख्यास्यत्येष्ट गोराट्) (Vyakyasyadyeshta Korat)
- என்கிறார்.
அதாவது, அனுதினமும் நம் முன்னால் அமர்ந்து, நான் சொல்லும் வேதங்களை ஸிரத்தையுடன் கேட்டுவரும் இந்த காளைதான் தனது படைப்புகளுக்கு விளக்கம் எழுதியும், பாமர மக்களுக்கு பரப்புரைகளையும் செய்யும். என்று திட்டவட்டமாக ஆணையிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறார்.
![]() |
கர்நாடக மாநிலம் மல்கேட் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ ஜெயதீர்த்தரின் மூல பிருந்தாவனத்தின் நுழைவாயில். |
அது போலவே, காளையை பாம்பு கடித்தது. பாவம் காளை, துடிதுடித்து இறந்தது. ஆனால், இறப்பதற்கு முன்பாக, ஸ்ரீமதாச்சாரியாரிடமிருந்து முழு சர்வமூலத்தையும் நேரடியாகக் கேட்டரிந்த பின்னரே காளையானது மாண்டது.
இதன் பலனாகவும், மத்வரின் அனுகிரஹத்தினாலும், அந்த காளை மறுபிறப்பில், ``மஹான் ஸ்ரீ ஜெயதீர்த்தராக" அவதரித்து, மத்வர் கூறியபடியே அவரின் அனைத்து கிரந்தங்களுக்கும் உரை எழுதி, பரப்புகிறார். ஹாஹா.. எத்தகைய ஒரு அருமையான, அற்புதமான மஹானை நமக்கு மத்வர் கொடுத்திருக்கிறார்!
✏ ரா.ரெங்கராஜன்.
(``யாரகோல் குகை’’, ``ஜெயதீர்த்தரை கண்டெடுத்த அக்ஷோப்யர்’’, ``துர்கா பெட்டாவில் தவம்’’ போன்ற பல ஆச்சரியமான தகவல், பகுதி - 2 ...)
மகத்துவம் வளரும்...
தேதி: 14.05.2024
கருத்துகள்
கருத்துரையிடுக