வாழ்வில் ஜெயம் பெற ஸ்ரீ ஜெயதீர்த்தர் - 2 / ஜெயதீர்த்தரை கண்டெடுத்த அக்ஷோப்யர்

 

பகுதி - 2

யாரகோல் குகை (Yaragol Cave):

ஸ்ரீஜெயதீர்த்தர், ``ஸ்ரீமன்யாயசுதாதி" என்னும் அறிய கிரந்தங்களை எழுதிய தலம் இது. ஒரு காலத்தில், இந்த குகையை, சங்க முனிவரின் தபோபூமியாக இருந்திருக்கிறது.

ஜெயதீர்த்தர், இந்த யாரகோல் குகையின் ஒரு பகுதியில், தனிமையான  இடத்தில் அமர்ந்து, மிகுந்த பொறுமையுடனும், அறிவுடனும், தீவிரமான அபரோக்ஷஞானத்துடனும், மத்வரின் பல கிரந்தங்களுக்கு வர்ணனைகள் எழுதி இருக்கிறார். இந்த புண்ணிய பூமியில்தான் அவருடைய பெரும்பாலான டீக்காக்கள் (ஆன்மீகம் சார்ந்த உரைகள்) பிறந்தன.

யாரகோல் குகை (Yaragol Cave)

மேலும், மஹான்கள் ஸ்ரீராமச்சந்திர தீர்த்தர் மற்றும் ஸ்ரீவித்யாநிதி தீர்த்தரின் மூல பிருந்தாவனமும் யாரகோல் குகை அருகில் உள்ளது.

இந்த யாரகோல் குகை, யாத்கிரி மாவட்டத்தில் உள்ள சித்தபுராவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜெயதீர்த்தரை கண்டெடுத்த அக்ஷோப்யர்: 

ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தர், தனது சர்வக்ஞ பீடத்திற்கு (தனக்கு அடுத்த பீடாதிபதி) ஒரு சிஷ்யரைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள், அவர் பீமராதி என்னும் நதிக் கரையில் சற்று களைப்பார அமர்ந்திருந்தார். தூரத்தில் ஒரு சிறுவன் குதிரையின் மீது ஏறி அமர்ந்தவாறு, மெதுவாக வந்திக் கொண்டிருந்தான். அதை பார்த்ததும் அக்ஷோப்ய தீர்த்தருக்கு மகிழ்ச்சியோ..மகிழ்ச்சி. 

குதிரையில் வந்த சிறுவனுக்கு அதீத தண்ணீர் தாகம் எடுக்க, குதிரையை நிறுத்தி, அருகில் உள்ள அந்த பீமராதி நதியினில், தன் கைகளைப் பயன்படுத்தாமல் தண்ணீரை வாயினை வைத்தவாறே குடித்தான்.

இதைக் கண்ட அக்ஷோப்யர், அந்த சிறுவனின் அருகில் சென்று, சமஸ்கிருதத்தில், “கிம் பசு பூர்வதேஹே” என்று உரத்த குரலில் சொன்னார். அதாவது முந்தைய ஜென்மத்தில் நீங்கள் பசுவாக இருந்தீர்களா? என்று சொல்ல, இதைக் கேட்ட அந்த சிறுவன் திகைத்து நின்றான், தனது முந்தைய ஜென்மங்கள் அதாவது, ஸ்ரீமதாச்சாரியாரின் காலத்தில், ஒரு காளையாக ஜென்மம் எடுத்தது நினைவுக்கு வந்தது.

டனே ஸ்ரீஅக்ஷோப்ய தீர்த்தரை வணங்கி, யதி ஆசிரமத்தை வேண்டினார் (சந்நியாசம்). அக்ஷோப்ய தீர்த்தருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. காரணம், இந்த சிறுவன், அக்ஷோப்ய தீர்த்தரின் பூர்வாஷ்ரம சகோதரரின் மகனாவார். இருந்தபோதிலும், பெரியவர்களின் அனுமதியைப் பெறுமாறு அந்த சிறுவனிடத்தில் கேட்டுக் கொண்டார்.

தன் குருவான அக்ஷோப்ய தீர்த்தரின் பேச்சை தட்டாது, அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்து அனுமதிகோருகிறார். அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த சிறுவன், எவ்வளவோ எடுத்துரைத்தும் அதை கேட்காது, வலுக்கட்டாயமாக பீமாபாய் என்பவருக்கு திருமணம் முடிக்கிறார். 

அந்த சிறுவனுக்கு முதல் இரவு. பெரியோர்கள் ஏற்பாடுகளை செய்தார்கள். பீமாபாய் தன் கணவனான அந்த சிறுவனின் அருகில் செல்கிறாள். மிக பெரிய ஐந்து தலை நாகம் ஒன்று வந்து, பீமாபாய்யை தொடவிடாமல், அந்த சிறுவனை பாதுகாக்கிறது. பயந்து கூச்சல் விடுகிறாள். அங்கு ஓடி வந்த சிலர்  கதவுகளை திறந்து பார்க்கிறார்கள்.

thanks to sheshagiri K.M

அந்த சிறுவனை நாகம் சுற்றி இருப்பதை கண்டு விலகினர். சிறுவனின் தந்தையும் இதைக் கண்டு நடுங்கினார். தான் செய்த தவறை நினைத்து வருந்தினார். 

உடனடியாக, சிறுவனை அழைத்துக் கொண்டு அக்ஷோப்ய தீர்த்தரின் ஆசிரமத்திற்கு சென்று நடந்தவற்றைகூறி, மன்னிப்பை கேட்டார். சிறுவனின் தந்தையை மன்னித்த அக்ஷோப்ய தீர்த்தர், அந்த சிறுவனுக்கு ``ஸ்ரீஜெயதீர்த்தர்" என்று திருநாமம் சூட்டி, திருவாய் மொழிந்து, அவருக்கு சந்நியாசத்தை வழங்கினார்.

ஜெயதீர்த்தர், தனது முப்பிறவியில் பசுவாக இருந்து மத்வரிடத்தில் பலவற்றை கற்றிருந்தாலும், "சுகவாணி" (நேரடியாக) போல, அவருக்கு கற்பித்த அக்ஷோப்ய தீர்த்தரிடம், மேலும் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார், மகான் ஜெயதீர்த்தர்.

பின்னொரு காலத்தில், தன் குருவான அக்ஷோப்ய தீர்த்தரை;

 "அக்ஷோப்யதீர்த குருநா ஷுகவாக்ஷிச்சிதஸ்ய மீ" 

(“akshobhyatirtha guruNaa shukavakShischitasya mE”)

என்று, அவரே தனது கிரந்தங்களில் புகழ்ந்து பேசியிருக்கிறார். மேலும், அவரது பெரும்பாலான கிரந்தங்களில், ஜெயதீர்த்தர் தனது குருவான அக்ஷோப்ய தீர்த்தரை புகழ்ந்துள்ளார்.

``பதவாக்ய ப்ரமாநாஞாந் ப்ரதிவாதிதாச்சித: 

ஸ்ரீமடக்ஷோப்யாத்இர்தாக்யானுபதிஷ்டி குருஉன்மமா 

பதவாக்ய பிரமாநாக்னான்ப்ரநாம்ய சிரசா குருஉன்

வ்யாகாரிஷ்யே யதாப்ஓதம் விஷ்ணுதத்வவிநிர்நயம்"

(padavaakya pramaaNaagnaan prativaadidachchida:

shrImadakShObhyatIrthaaKyaanupatiShTE gurUnmama 

padavaakya pramaaNagnaanpraNamya shirasaa gurUn 

vyaakariShyE yathaabOdhaM viShNutattvavinirNayaM)

குரு பக்தி, குரு விஸ்வாசத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு, ஸ்ரீ ஜெயதீர்த்த ஸ்வாமிகள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. 

துர்கா பெட்டாவில் தவம்:

தனது குருவான மகான் ஸ்ரீஅக்ஷோப்யதீர்த்தர் பிருந்தாவனம் பிரவேசத்திற்குப் பிறகு,``கிரந்த ரக்ஷனையைத்" (தான் எழுதும் கிரந்தங்கள்) தொடங்க முடிவு செய்தார். ``கிரந்த ரக்ஷனை வேலையைத் தொடங்குவதற்கு முன், கர்நாடக மாநிலம், உடுப்பி அருகில் உள்ள துர்கா பெட்டா என்னும் மலைப் பகுதிக்கு சென்று தவமிருக்க ஆயத்தமானார்.

ச்சை இலைகள், காய்ந்த மொத்தங்கள், பஞ்சகவ்யம் முதலியவற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு, கடும் தவத்தை மேற்கொண்டார்.

ஸ்ரீஜெயதீர்த்தரின் தவத்தை மெச்சிய சரஸ்வதி மற்றும் பாரதிதேவியாரின் அனுக்ரஹத்தைப் பெற்றார். மேலும், சேஷதேவரும் நேரில் பிரத்தக்ஷணமாகி, ஜெயதீர்த்தரின் நாக்கில் எழுதி அனுக்ரஹம் செய்தார். அதனால்தான், ஸ்ரீஜெயதீர்த்தருக்குள்ளும் சேஷதேவரின் ஆவேசம் இருக்கிறது என்கிறார்கள், அவருக்கு பின்னால் வந்த மகான்கள்.

                                                                                                                          ✏ ரா.ரெங்கராஜன்.

(ஸ்ரீஜெயதீர்த்தரின் அனுகிரஹம், கோனேரி பிரணேஷா, முஸ்லீம் மன்னர் ஃபிரூஸ்ஷாதுக்ளக்விற்கு அனுகிரஹம் ஆகியவை பகுதி - 3...)

மகத்துவம் வளரும்...

தேதி: 14.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்