மூளை சம்பந்தமான நோய்களிலிருந்து காப்பவர் / குண்டு பெரும்பேடு அனுமன்

 

மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது எனும்படி சிறிய மூர்த்தமாக குண்டு பெரும்பேடு எனும் தலத்தில் அருள்பாலிக்கிறார் ஆஞ்சநேயர். புராணத்தோடு தொடர்புடைய பழமைத் தலம் இது. 

பாற்கடல், பரந்தாமனின் அழகு பார்த்து சப்தம் குறைத்து அலைந்து கொண்டிருந்தது. மெல்லிய அலைகள் அவ்வப்போது ஆதிசேஷனை தாலாட்டின. அலைமகள் பரந்தாமனின் பிரகாசத் திருமுகம்  பார்த்துக் கொண்டிருந்தாள். நாரத முனிவர் அவரைக் காண வந்தார். ''தனிமையில் வீற்றிருக்கும் தாங்கள் இருவருக்கும் இடையூறாக வந்ததற்கு மன்னிக்க வேண்டும்'' என்று சொல்லிப் பின் வாங்கினார். திருமகளோ, ''வைகுந்தம் வந்தே வெகுநாளாகிறதே... பரவாயில்லை வாருங்கள்'' என்றாள். 

''நாரணனே அனைத்தும் என அவர் புகழ் பரப்பவே பிரபஞ்ச மூலைகளுக் கெல்லாம் செல்கிறேன். வைகுந்தம் வரவே நேரம் இருப்பதில்லை. என்ன செய்வது? சத்தியத்தை நேரடியாகச் சொல்வதில் எனக்கு எந்த நாடகமும் தேவைப்படாது. அதுவும் வைகுந்த வாயிலில் சத்தியம் தவிர வேறெதுவும் எடுபடவும் செய்யாது'' என்று விவேகமாக பேசினார்.


நாரதரின் பதிலைக் கேட்ட நாயகி நகைத் தாள். ''லோகநாயகா உம் பெருமை, தன் மூலம்தான் வெளிப்படுகிறது என்கிறான், நாரதன்'' என்றாள். 

திருமகள் கூறியதை செவிமடுத்த திருமால், ''மற்றவர்களை கலகத்திற்குள்ளாக்கும் நீயே இன்று திருமகளிடம் மாட்டிக் கொண்டாயா'' என நாரதரைப் பார்த்துக் கேட்டார்.  

''ல்லை பெருமானே... இதுவரை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்கள் எடுத்திருக்கிறீர்கள். தாங்கள் அடுத்து எடுக்கப் போகும் அவதாரத்தை பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் வந்தேன். பேசத் தெரியாமல் அன்னையிடம் சிக்கிக் கொண்டேன். மன்னிக்க வேண்டும்'' என்றார், நாரதர். 

‘‘ன் பக்தனாக, பக்திக்கு இலக்கணமாகத் திகழப்போகும் அனுமனுடன், ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஒரு வில், ஓர் இல், ஒரு சொல் என்று வாழப்போகும் ராமனாக அதியற்புதமான அவதாரம் எடுக்க உள்ளேன். ராம அவதாரத்தில் தந்தையாக விளங்கப்போகும் தசரதன் குழந்தை வரம் வேண்டி தீர்த்த யாத்திரை சென்று, தடாக தீர்த்தத்தில் ஓய்வெடுக்கும்போது நாமே அசரீரியாக சில விஷயங்களை அவருக்கு வெளிப்படுத்துவோம். அதன்பின் அவதாரம் நிகழும்’’ என்றார்.

னால், ''அனுமன் என் வைகுந்த பிரயாணத்தைத் தாண்டி என் பக்தனாக பூவுலகில் சகல இடங்களிலும் விளங்க இருக்கிறான். வியாஸராயன் எனும் பக்தன் அனுமனுக்காக அந்த தீர்த்தத் தடாகத்தினருகே ஓர் கோயில் எழுப்புவான்'' என்றார். அதோடு, அந்த நாரதர் மூலமாகவே தாம் நிலைபெறப் போகும் கோயில்கள் பற்றியும், அனுமனுக்காகவென்றே பிரத்யேகமாக உருவாகப்போகும் தலங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

புராண காலம் கடந்து வரலாற்று மன்னர்களின் ஆட்சி உருவான சமயம் அது. விஜயநகர சாம்ராஜ்யத்தின்போது பிரகலாதனின் அம்சமாக மகான் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் தோன்றினார். இந்து தர்மத்தை திக் விஜயம் செய்து பரப்பினார் அவர். மக்களின் மனதில் ஸ்ரீராமனையும், ஆஞ்சநேயரையும் பதித்தார். தான் நித்தமும் சென்றுவர ராம சாந்நித்தியம் பொங்கும் அனுமனின் ஆலயத்தை எழுப்பினார். 

ருமுறை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வணங்கி பிறகு ஸ்ரீபெரும்புதூர் பெருமாளை தரிசிக்க வந்தார். மாலைநேர பூஜைக்காக ஏதேனும் நீர்நிலை இருக்குமா என்று தேடினார். தாமரைத் தடாகங்களும், சோலைகளும் நிறைந்த இடம். ஒன்றை அவர் அடைந்து பெருமகிழ்ச்சி கொண்டார். தாமரைத் தடாக நீரைக் கொணர்ந்து பூஜையை தொடங்கினார். அஞ்சனை மைந்தனை மனதில் இருத்தினார். வாயுமைந்தன் இடையறாத தியானக் கருவாக அவர் உள்ளத்தில் அமர்ந்தான். அதேசமயம், பால ஆஞ்சநேயர் அவர் முன்பு தோன்றினான். தளிர்க் கரங்களால் வியாசராஜரின் தலை வருடினான். வியாசராஜர் சிலிர்த்தார். கண் திறந்து நேரே பார்க்க அதி உற்சாகத்தோடு  வானரங்கள் மரக்கிளைகளில் விளையாடுவதும், ஆஞ்சநேயரின் தோற்றம் தடாகத்தின் மையத்தில் மறைவதும் பார்த்து அதிசயித்தார். 

வியாசராஜர் எனும் அந்த மகான், தான் கண்டு உளம் நெகிழ்ந்து அனுபவித்த பால ஆஞ்சநேயரை சிலாரூபமாக வடித்து, சிலகாலம் அங்கேயே தங்கி, அகமகிழ்ந்து பூஜைகள் புரிந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தார். அன்று நாரதரிடம் நாரணன் சொன்ன வண்ணம் சொல்லின் செல்வனுக்கு ஆலயம் எழுந்தது.

ராமன் பிறப்பதற்கு அசரீரி வாக்கு கேட்ட அந்தத் தாமரை தடாகத்தில் நீராடி, பாலவீர அனுமனுக்கு அபிஷேகம் செய்வித்து, தேன், செவ்வாழை, வேர்க்கடலை நிவேதித்தால் சந்தான வரத்தை அருள்கிறான் இந்த அனுமன்.

ல்லெண்ணெய் திருமஞ்சனம் செய்து திருமுடியில் செந்தூரம் சாற்றினால் மூளை சம்பந்தமான  நோய்களிலிருந்து காப்பவர் இவர் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. மேலும், 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே' என்பர். இங்கு தெய்வமே குழந்தையாக அருளுகிறது. இந்த மழலையின் ஆசி, பக்தர்களுக்கு குழந்தை வரம் தருகிறது. 

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில், குளத்தூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குண்டு பெரும்பேடு கிராமம்.

தேதி: 27.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்