குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்கிறார்களே, இது உண்மையா?

பதில்: மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய இந்த நான்கு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்று ஒரு விதி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஜோதிடவியல் ரீதியான ஒரு உண்மை என்னவென்றால், எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்பதே! நட்சத்திரப் பொருத்தம் என்பதைவிட ஜாதகப் பொருத்தம் என்பது அமைந்திருக்க வேண்டும். அதையும்கூட நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவருக்கு வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமைய வேண்டும் என்று விதி இருக்கிறதோ அப்படித்தானே அமையப்போகிறது. இதில் நாம் பொருத்தம் பார்த்து திருமணத்தை நடத்துவதால் விதி மாறிவிடுமா என்ன? வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமைகிறதோ, அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தவேண்டும்.


அப்படித்தானே நமது தாத்தாவும் பாட்டியும் அதற்கு முன்னர் இருந்த தலைமுறைகளும் குடும்பத்தை நடத்தினார்கள். அவர்கள் எல்லோரும் பொருத்தம் பார்த்தா திருமணம் செய்தார்கள்? மனப் பொருத்தம் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்திருக்கிறதா என்பதை அறிந்துகொண்டு திருமணத்தை நடத்துங்கள். அவர்களுடைய ஜாதகங்களில் உள்ள கிரஹ நிலைகள் பொருந்தியிருந்தால் மட்டுமே அவர்களுக்குள் மனப் பொருத்தம் என்பது வந்து சேரும். இந்த உண்மையை புரிந்துகொண்டு, நட்சத்திரங்களை கணக்கில் கொள்ளாமல் திருமணத்தை நடத்துங்கள். வாழ்க்கை நல்லபடியாகவே அமையும்.

நன்றி: திருக்கோவிலூர் H.B.ஹரிபிரசாத் சர்மா


தேதி: 09.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்