ஆதி ஜெகந்நாதரை வழிபட்ட ராமச்சந்திரபிரபு! / பிதுர் வழிபாடுக்கு சிறந்த ஸ்தலம்...

ம்மண்ணுலகில் சத்தியத்தையும், தர்மத்தையும் நிலைநாட்டிட, அந்தப் பரந்தாமனே எடுத்த அற்புத அவதாரம்தான் ஸ்ரீ ராமச்சந்திர பிரபு. ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்ய இலங்கைக்குச் செல்லும் முன்பு தென்நாட்டின் பல இடங்களில் தெய்வ வழிபாடுகளை செய்துள்ளார். அதோடு, பல அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அப்படியாக தென்னாடு வந்த ஸ்ரீ ராமபிரான், முதலில் உப்பூரிலே கணபதியை ஸ்தாபித்து வழிபடுகின்றார்.

அதன்பின்னர், குல குரு வசிஷ்ட மகரிஷியின் ஆலோசனைப்படி பிதுர் கடன்களை செய்ய உசிதமான, பராசக்தியின் தோல்பட்டையின் அடிப் பகுதி விழுந்த வீரசக்தி பீடமாகத் திகழும் தேவிப்பட்டிணத்தை அடைந்து, அன்னை உலகநாயகியை வணங்கி, வழிபட்டு, அன்னையின் திருவருளைப் பெற்று, பின்னர் கடற்கரையில் முறையாக பிதுர் கடன்களையும் செய்தார். கடலில் நவபாஷாணத்தால் ஆன நவக்கிரகங்களை ஸ்தாபிக்க எண்ணம் கொண்டார்.

னால், அங்கோ சமுத்திரத்தின் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதைக் கண்டு தயங்கி நின்றார். பின்னர் அங்கே கரையில் ஆதியாக வீற்றிருந்து அருளும் ஸ்ரீஆதி ஜெகந்நாத பெருமாளை மனதில் நினைத்து வழிபடுகின்றார். பரந்தாமனின் மறு உருவமே ஸ்ரீராமர் என்றபோதிலும், மனிதனாகப் பிறப்பெடுத்தால் மகாவிஷ்ணுவை சரணடைய வேண்டும் என்கிற உயர்ந்த தத்துவத்தை உலகோருக்கு உணர்த்திக் காட்டினார்.

பின், ஆதி ஜெகந்நாதரின் பேரருளால் முன்னம் எழும்பியப் பேரலைகள் கடலுக்குள் பின்வாங்கிச் சென்றன. கள்ளழகனின் கருணையால் கடலில் இறங்கிய கோதண்டராமர, முறைப்படி நவபாஷாண நவகிரகங்களை நிறுவி, நயம்பட பூஜைகளைப் புரிந்தார். நம்பிக்கையோடு இலங்கையை நோக்கி நடைப் போட்டார்.

பொங்கிப் பெருகி வந்த அலைகளை அடைத்தருளியதால், இங்கு ஸ்ரீமந்நாராயணர், ``கடலடைத்த ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள்’’ என்று போற்றப்படுகின்றார்.

தேவிபட்டிணம் கடற்கரையில் ஸ்ரீ ராமபிரானின் கரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட நவக்கிரகங்களை வணங்கி, வழிபட்டு, பின்னர் சற்று தூரம் நடந்தால், விமானத்துடன் கூடிய பெருமாள் கோவில் காணப்படுகின்றது. முதலில் முன்மண்டபத்தில் பலிபீடம் மற்றும் ஸ்ரீ கருடனை தரிசிக்கலாம்.

மகாமண்டபத்தின் வெளிப்புற சுவற்றில் ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் பாலிக்கின்றார். பின், நேராக அர்த்தமண்டபம் அடைந்து, ஸ்ரீ தேவி  - பூதேவி உடனான கடலடைத்த ஸ்ரீ ஆதி ஜெகந்நாத பெருமாளைக் கண்டு பரவசம் அடைகின்றோம். 

தனது மேலிருகரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய - வரதம் காட்டி, பெரியதொரு திருமேனியராக, அமர்ந்தவண்ணம் அருட்சேவை செய்கிறார்.

ற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ சுதர்சனமூர்த்தி உள்ளனர். நடுவே அன்னை சீதா மற்றம் இளவல் லட்சுமணரோடு திவ்ய தரிசனம் அளிக்கிறார், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திகள். அற்புத தரிசனம். ஆனந்தப் பரவசம். ஆலய வலம் வருகையில், ஆண்டாளைத் தனிச் சந்நதியில் தரிசிக்கின்றோம். ஒரே திருச்சுற்றினைக் கொண்டுள்ளது ஆலயம். ஸ்ரீ விமானம் காண்போரைக் கவர்ந்திழுக்கிறது. பாண்டிய மன்னர்களின் கலைநயம் ஆலயமெங்கும் பிரதிபலிக்கின்றது.

தல தீர்த்தமான சக்கர தீர்த்தம் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ளது. பாஞ்சராத்ர ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகின்றது. அனேக வைஷ்ணவ சம்பிரதாயங்களும், விசேஷங்களும் சிறப்புற நடத்தப்படுகின்றன.

தமிழக அரசின், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

ந்த தேவிபட்டிணத்தில் கடலடைத்த பெருமாளோடு, நவபாஷாண நவகாரகங்கள், ஸ்ரீ திலக்கேஸ்வரர் ஆலயம் மற்றும் சக்தி பீடமான ஸ்ரீ உலகநாயகி அம்மன் ஆலயம் ஆகியன மிகவும் பிரசித்தம்.

ஆடி அமாவாசையில் இங்கு லட்சக்கணக்கானோர் வந்து பிதுர் வழிபாடுகள் செய்வது மிகவும் பிரபலமாகும்.

புதுக்கோட்டை -  ராமேஸ்வரம் பேருந்து சாலையில் சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், ராமநாதபுரம் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது தேவிபட்டிணம்.


தேதி: 27.06.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்