``துளசி... துளசி.. எந்து ஸ்மரணெயாதரு மாடி'' துன்பங்களை போக்குவாள் துளசி - பகுதி - 2

கவானின் பூஜைகளுக்கு மட்டும் துளசி பயன்படுத்தாது, நாம் தினமும் செய்யும் ஸ்நானம், ஹோமங்கள், தான - தர்மங்கள், பித்ரு காரியங்கள் என அனைத்துலையும், துளசியினை இட்டு ஸ்மரனை செய்வது அவசியம் என சாஸ்திரம் குறிப்பிட்டுள்ளது. இதனை நம் புரந்தரதாஸர், 

``ஸ்னான தானக்கே துளசி ப்ரயோஜன
துளசி புரந்தர விட்டலகெ அதிப்ரிய துளசி’’

 - என மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.

துளசியினைக் கொண்டு செய்யப்படும் ஸ்ராத்தத்தை பித்துருக்கள் மிக மகிழ்ச்சியோடு திருப்தியாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதனை;

``துளசி சாயாயாம் பித்ரு திருப்தி:''

 - என்ற தர்ம சிந்து வாக்கியத்தின் மூலமாக அறியலாம்.

அதே போல், துளசி மஞ்சரினால் செய்யும் அர்ச்சனை, நம்முடைய அனைத்து துன்பங்களையும் நிவர்த்தி செய்து, மோக்ஷத்தை அளிக்கக் கூடியது என்பதனை;

``துளஸீ மஞ்ஜரீபி: ஹரிஹரார்ச்சனே முக்தி: பலம்''

 - என்ற வாக்கியத்தினால் அறியலாம்.


 மக்கெல்லாம் தெரிந்த ஒரு அற்புதமான கதைதான். இருந்தும் இங்கு குறிப்பிட வேண்டிய கதை.. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு லீலைதான் ``துலாபாரம்''. கிருஷ்ணர், தராசு தட்டில் அமர்கிறார். அவருக்கு இணையாக பொன்னும், பொருளும், வைர - வைடூரியங்களை வைக்கிறார்கள். தராசு சமமாகவில்லை. ஏதேதோ.. செய்து பார்க்கிறார்கள், சமமாகவில்லை. 

பின்னர், ருக்மணி தேவி பக்தியுடன் ஒரே ஒரு துளசி இலையை எடுத்து ஸ்மரணம் செய்து, அந்த துளசியினை தராசின் அடுத்த பாகத்தில் வைக்கிறாள். என்ன ஆச்சரியம்! பொன்னும் - பொருளுக்கும் ஈடுக்கொடுக்காத, சமமாகாத தராசு, ருக்மணி, ஒரே ஒரு துளசி தளத்தை வைத்தவுடன் சமமாயிற்று. அத்தகைய பெரும் மகத்தும் துளசிக்கு உண்டு என்பது நன்கு தெரிகிறது.


துளசிசெடியை ஆர்வத்தோடு, பூச்சிகள் ஏதும் அண்டவிடாமல் பாதுகாத்து, நமஸ்கரித்து நன்கு வளர்த்தோமேயானால், எத்தகைய பாவங்களும் பரிகாரம் ஆகிவிடுகின்றன. இதனை;

``ரோபன, பாலன, ஸ்பர்ஸை: பாபக்ஷய:''

 - என்ற வாக்கியம் விளக்குகிறது.

எவர் வீட்டில் துளசி பிருந்தாவனம் இருக்கின்றதோ, அவர்கள் வீட்டில் யம பயம், திருட்டு பயம் போன்றவை இருக்காது. இதனை;

``துளஸீ ஷோபித க்ருஹே யமகிங்கரா: ந ஆயாந்தி''

 - என்ற வாக்கியங்கள் அருமையாக விளக்குகின்றது.

புருஷர்களுக்கு சந்தியாவந்தனம் மற்றும் துளசியுடன் கூடிய ஸ்ரீ ஹரியின் பூஜை ஆகியவை எவ்வளவு முக்கியமானதாக கூறப்பட்டுள்ளதோ, அதே போல், ஸ்திரீகளுக்கு (பெண்களுக்கு) ஸ்ரீ துளசி பூஜையானது மிகவும் முக்கியமானதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

துளசி பிருந்தாவனத்திற்கு, தினமும் கோலமிட்டு, ஜலம்விட்டு, மஞ்சள், குங்குமம், புஷ்பத்தினால் பூஜைகள் செய்து, பிரதக்ஷணம் மற்றும் நமஸ்காரம் செய்வதாலேயே சகலவிதமான நன்மைகளையும் அடையும் வகையில் சாஸ்திரங்கள் வழிகாட்டுகின்றன. 

ஸ்ரீமன் மத்வாச்சாரியார், தமது ``கிருஷ்ணாம்ருத மஹார்ணவத்தில்" நிர்மால்ய தீர்த்தம், நைவேத்யம் முதலானவற்றை துளசியுடன் ஸ்ரீ ஹரிக்கு சமர்ப்பணம் செய்து ஸ்வீகரிக்க, மகாபாவங்கள் அனைத்தும் நாசம் ஆகுகின்றன. இதனை;

``துலஸ்யாஸ்து ரஜோஜுஷ்ட நைவேத்யஸ்ய ச பக்ஷணம் 
நிர்மால்யம் ஸிரஸா தார்யம் மஹா பாதக நாஸனம்"

 - போன்ற ஸ்லோகங்கள் விளக்குகிறது.


தே போல், ஸ்ரீ விஜயதாசரும், நிர்மால்ய துளசியினை கர்ணத்தில் (காதில்) எப்போதும் தரித்தவர்களுக்கும், எம பயம் இருக்காது அல்லது அண்டாது என்பதை;

``நிர்மால்யவனு ஸதத கர்ணதலி தரிஸித மனுஜ காலனாளிகெ ஸிலுகனைய்யா''

எனக்குறிப்பிடுகிறார்.

``நோடித மாத்ரகெ தோஷ ஸம்ஹாரிகெ''
``கனவாத பாபகளன்ன மாடித்தரு தன்னதள 
ஒந்தன்ன கர்ண தல்லிட்டரெ தன்யராகி 
மாடுவ தயவந்தெகெ''

 - என ஸ்ரீ புரந்தரதாசரும் இதனையே விளக்கியுள்ளார்.

ம் மத்வ சம்பிரதாயத்தில், ``உத்தான துவாதசி" வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்று மாலை, சாளக்கிராமத்திலும், நெல்லி மரத்திலும் சாநித்தியமாக சந்நிதானம் கொண்டுள்ள கார்த்திக தாமோதரனுக்கு ஸ்ரீ துளசியை விவாகம் செய்யும் பூஜைகள் நடைபெறும்.

துளசியினை பறிக்கும் போதும்சரி, அதனை பயன்படுத்தும்போதும்சரி அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. துளசியை நகம் படாதவாறு, ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் ஆகிய இரு விரல்களினால் மட்டுமே பறிக்க வேண்டும். அதே போல், குளிக்காமலும், இரவு நேரங்களிலும், உணவை உட்கொண்ட பின்னரும் பறிக்கக்கூடாது.


குறிப்பாக, பெண்கள் பறிக்கவேக் கூடாது என்று சாஸ்திரங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் போன்ற தினங்களிலும், பௌர்ணமி, அமாவாசை, கிரகண காலங்கள், பித்ரு சிரார்த்த தினம் போன்ற காலங்களில் அறவே பறிக்கக் கூடாது என்பதனை ஸ்ரீ விஜய தாசர்;

``ரவி மங்களவார வைத்ருதி வ்யதிபாத
ரவி ஸஸி ஸங்கம பர்வணி புண்ய கால 
திவஸ த்வாதஸி ஸ்ரேஷ்ட மொதலாத 
உபராக பித்ரு ஸிரார்த்ததிவுகளலி தெகெயதிரி 
நவவஸனவ பொத்து ஊடவமாடி தாம்பூல
ஸவியுத்த முட்டதிரி யுவதி ஸுத்ரரிம் தரிஸுவுது
உசிதவல்ல வெந்து திளிது கொண்டாடு"

என மிக அருமையான பதங்கள் மூலமாக நமக்கு விளக்குகிறார்.


த்வ பரம்பரையில் வந்த ஸ்ரீ ஸுரேந்திர தீர்த்தர் என்னும் மஹான், மிக பெரிய நந்தவனத்தில் அழகாக துளசி செடி படர்ந்து இருப்பதை கண்டிருக்கிறார். இவைகள் அத்தனையும், ஸ்ரீ ஹரிக்கு சமர்ப்பணம் செய்தால் எப்படியிருக்கும் என்று மானசீகமாக எண்ணியிருக்கிறார்.

அவர் மானசீகமாக நினைத்த அடுத்த நொடி, துளசிகள்  அனைத்தும் நிர்மால்யம் ஆகின. பகவானுக்கு பக்தியுடன் மானசீகமாக சமர்ப்பிக்கப்படும் துளசிக்கு மகத்துவம் அதிகம் என்பதையே மிக அழகாக காட்டுகிறது. 

இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை பக்தியுடன் ஆராதித்து, ஸ்ரீ ஹரியின் அருளை பெறுவோம்..!

✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


தேதி: 15.06.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்