துக்கம் விசாரிக்க செல்வதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா? / கேள்வி - பதில்

 

கேள்வி:  தர்மம் எப்போது போய்விடும்?
  - நாகேந்திரன், பழனி.

பதில்: இதற்கு விதுர நீதியில் பலன் இருக்கிறது. பொறாமை வந்தால் தர்மம் போய்விடும் என்கிறார். எப்படி? நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம். எப்போது பொறாமை வருகிறதோ, உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அவ்வாறு இருக்க குறுக்கு வழிகளை உபயோகிப்போம். எனவே பொறாமை தர்ம மார்க்கத்தைப் பறித்துவிடும். அதனால்தான் பொறா (ஆமை) புகுந்த வீடு (மனம்) உருப்படாது என்றார்கள்.

கேள்வி: வெற்றிகரமான வாழ்க்கையா? திருப்திகரமான வாழ்க்கையா?
  - சுபாஷ், விக்ரவாண்டி.

பதில்: வெற்றிகரமான வாழ்க்கையைவிட, திருப்திகரமான வாழ்க்கையே உயர்ந்தது. வெற்றி, பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. திருப்தி தன்னால் தீர்மானிக்கப்படுகிறது.


கேள்வி:  துக்கம் விசாரிக்க செல்வதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கிறதா?
  - விக்ரம் பிரசாத், பெங்களூர்.

பதில்: இருக்கின்றது. ஆனால், சில குடும்பங்களில் இவை வித்தியாசமாக இருக்கும். அதை அந்தந்த பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும். இருந்தாலும், கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உண்டு. ஒரு வீட்டில் துக்கம் கேட்கப் போகும் பொழுது நாம் கோயிலுக்கு போய் விட்டோ, வேறு சுபகாரியங்களுக்குப் போய் விட்டோ போவது நல்லதல்ல. அதைப் போலவே, போகும் வழியில் தானே என்று துக்கம் விசாரித்துவிட்டு சுபகாரியங்களுக்குச் செல்வதும் சரியான முறை அல்ல. ஒரு வீட்டில் துக்கம் விசாரிக்க போகும் பொழுது, நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக் கூடாது. அதைப் போலவே இறந்து போனவர் வீட்டில் பிரேதம் இருக்கும் பொழுது செல்பவர்கள் கர்மா துவங்குவதற்கு முன்னாலேயே கிளம்பிவிட வேண்டும். கர்மா துவங்கிவிட்டால், ரதம் புறப்பட்ட பிறகுதான் கிளம்ப வேண்டும். பத்து நாட்களுக்குள் ஒன்பதாவது நாள் தவிர எந்த நாளிலும் நாள் பார்க்காமல் துக்கம் விசாரிக்கலாம் என்கின்ற அபிப்ராயம் உண்டு. ஆயினும் சிலர் வெள்ளிக் கிழமை, சனிக் கிழமை போன்ற கிழமைகளை தவிர்த்து விடுவார்கள்.

நன்றி: திரு. ஹரிபிரசாத் சர்மா

தேதி: 18.06.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்