நிமிஷத்தில் அருள் புரியும் நிமிஷாம்பா / கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டினம்.

ர்நாடக மாநிலம், மைசூரை அடுத்த ஸ்ரீரங்கப்பட்டினம் ஆலயம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் காவிரிக்கரையில் கஞ்சம் என்ற இடத்தில், ஸ்ரீநிமிஷாம்பா தேவி ஆலயம் உள்ளது. பக்தர்களின் கோரிக்கைகளை இந்த தேவி ஒரே நிமிஷத்தில் தீர்த்து வைப்பதால், ``நிமிஷாம்பா’’ என பக்தர்கள் இந்த அன்னையை போற்றுகின்றனர். 

கருவறையில் ஸ்ரீசக்ரத்துடன் நிமிஷாம்பா தேவி காட்சியளிக்கிறாள். இந்த ஸ்ரீசக்ரம் முக்தராஜா என்பவரின் ஆணைப்படி முதலில் இந்த ஆலய வளாகத்திற்குள் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாகவும், பின்பு வந்த மன்னர்கள், அதை எடுத்து கருவறையிலேயே பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

க்தர்கள், தாங்கள் கொண்டுவரும் எலுமிச்சம் பழத்தை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் அதைப் பெற்றுக் கொண்டு கருவறையில் உள்ள ஸ்ரீசக்ரத்தின் மேல் வைத்து பூஜித்துக் கொடுக்கிறார். அதனைக் கொண்டு வந்து வீட்டு பூஜையறையில் வைக்க, அனைத்து விதமான பிரச்னைகளும் தீருமென்று நம்பப்படுகிறது.

சிவபெருமான், ‘முக்திகேஸ்வரா’ என்ற பெயரில் லிங்கவடிவில் இங்கு அருள்பாலிக்கிறார். இந்த தேவி சந்நதியின் நுழைவாயிலின் முன்பு இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதி தேவியரின் சுதைச் சிற்பங்கள் தரிசனம் அளிக்கின்றன.


ந்த ஆலயத்தில் விநாயகர், சூரிய நாராயணர், அனுமன் போன்றோர் தனி சந்நதிகளில் அருள்கின்றனர். காவிரி மற்றும் லோகபவானி ஆறுகள் சங்கமிக்கும் சங்கமக்ஷேத்திரம் எனப்படும் இந்த ஆலயத்தில், பார்வதி தேவி நிமிஷாம்பாவாக அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண சம்பவம் கூறப்படுகிறது.

மைசூர் பகுதியை ஆண்ட ‘சுமனஸ்கா’ என்ற அரசன், தன் நாட்டு மக்கள் சுபிக்ஷமாக இருக்க வேண்டி, ஒரு பெரிய யாகம் செய்யத் தீர்மானித்தான். இந்த யாகத்தை முன்னின்று நடத்தித் தருமாறு அவன் முத்கல முனிவரை வேண்டியபோது, அவர் மைசூருக்கு அருகிலுள்ள கஞ்சம் என்ற இடத்தில் காவிரியும் லோகபவானியும் சங்கமிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ங்கு அவர் யாகத்தைத் துவக்கியபோது ஜானு, சுமந்தலா என்ற இரு அரக்கர்கள் யாகம் நடைபெறாதபடி இடையூறு செய்தனர். அப்போது, முத்கல முனிவர் ஆதிபராசக்தியை உளமாற வேண்டிக் கொள்ள, தேவியாக குண்டத்திலிருந்து அந்த கணத்திலேயே தோன்றி அந்த அசுரர்களை வதைத்தாள். 

பின்பு அவள், 48 அடிகள் பின்னோக்கி நகர்ந்து அந்த இடத்தில் நிமிஷாம்பாவாக நிலைகொண்டதாக தலபுராணம் கூறுகிறது.
இந்த நிமிஷாம்பா தேவியைக் குறித்து கீழ்க்கண்ட துதியை மனதாரக் கூறி வேண்டிட, ஒரே நிமிடத்தில் தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.



``காவேரி லோக பவாநீ சங்கம க்ஷேத்ரேசுஸ்திதே
ஸ்ரீசக்ரராஜ ஸஹிதே ஸ்ரீ நிமிஷாம்பா நமோஸ்துதே’’

இதன் பொருள்: காவிரி மற்றும் லோகபவானி ஆறுகள் சங்கமிக்கும் சங்கமக்ஷேத்திரத்தில் ஸ்ரீசக்ரத்துடன் அமர்ந்திருக்கும் நிமிஷாம்பா தேவியே, உன்னை வணங்குகிறேன், என்பதாகும்.

எப்படி செல்வது: மைசூரில் இருந்து 18கி.மீ., தூரத்தில் பயணித்தால் ஸ்ரீரங்கப்பட்டினத்தை அடைந்துவிடலாம். அங்கிருந்து இரண்டே கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் இருக்கிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:  காலை 8 முதல் மாலை 5 வரை சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் மாலை 6 முதல் 8:30 வரை.

தொடர்புக்கு: 08236297641.

தேதி: 24.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்