விசேஷ வித்தைகளுக்கு வித்யாதிராஜ தீர்த்தர் / மகத்துவமிக்க மத்வ மஹான்கள்!


வித்யாதிராஜ தீர்த்தர்..! இவரின் காலம்  1388 – 1392, இவரின் பூர்வாஷ்ரம பெயர் - கிருஷ்ண பட் என்றும் சிலர் நரசிம்ம சாஸ்திரி என்றும் கூறுகிறார்கள்.  ஸ்ரீ ஜெயதீர்த்தரின் நேரடி சீடர், வித்யாதிராஜ தீர்த்தர்.  
ஒருமுறை, வட இந்தியாவில் சஞ்சாரத்தை மேற்கொள்ளும்போது, பீமா நதி என்னும் இடத்தில் வந்தார். மேலும்,கங்கை நதியில் நீராட, காசிக்குச் செல்ல நினைத்தார், வித்யாதிராஜ தீர்த்தர்.

ஆனால், தனது சீடர்களுக்கும் துவைத மக்களுக்கும், துவைத சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்வதற்கே நேரம் சரியாக இருந்திருக்கிறது. திடீர் என்று ஒரு நாள், வித்யாதிராஜ தீர்த்தரின் கனவில் தோன்றிய கங்கை தேவி, ``உனது சேவையை நான் மெச்சுகிறேன். நீ காசி வரை பயணிக்க வேண்டாம். நானே, இங்கு தோன்றுகிறேன்". என்று கூறினாள். 

அடுத்த நாள், பீமா நதியில் கங்கை தேவி, பெருக் கெடுத்து ஓடத் தொடங்கினார். ஆனந்தமடைந்தார், ஸ்ரீவித்யாதிராஜ தீர்த்தர். உடனே.. கங்கா தேவிக்கு பூஜைகளை செய்து, தனது சீடர்களுடன் பீமா நதிக்கரையில் புனித நீராடினார். 

அன்று முதல் இந்தியா முழுவதிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று துவைத வேதாந்தத்தைப் பரப்பினார்.

ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் காலத்தில்தான் மத்வ மடத்தின் முதல் முதலில் பல பிரிவுகள் வரத் தொடங்கின (அதை பற்றி கீழே பார்க்கலாம்). இப்படியாக காலங்கள் உருண்டோட, ஒரு நாள் திடீர் என்று ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அந்த சமயத்தில்,  அவருடைய சீடர்களில் ஒருவரான ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தருக்கு பட்டம் கொடுத்து, தனக்கு பின் இந்த அரியணையில் அமரபோவது இவர்தான் என அறிவித்தார். 

அதன்படி, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் பூஜைகளையும், மடத்தையும் நிர்வகித்து வந்தார்.

இங்குதான் நாம் நம் பரமாத்மாவின் தெய்வீக விளையாடல்களை கவனிக்க வேண்டும். ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர், விரைவிலேயே குணமடைந்தார். ஆகையால், மீண்டும் மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்த கவனிக்க தொடங்கினார். எனவே, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர், துவைத  தத்துவத்தைப் பரப்புவதற்காக சஞ்சாரம் மேற்கொண்டார். 

பரமாத்மாவின் தெய்வீக விளையாடல் நிற்கவில்லை. சிறிது நாட்களில், மீண்டும் ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் நோய்வாய்ப் பட்டார். தனக்கு பிருந்தாவன பிரவேஷ காலம் வந்துவிட்டது. உடனடியாக, ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரை அழைத்து வாருங்கள் என்று கூறினர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர். 

இப்போது உள்ளது போல், அப்போதெல்லாம் தொலைத் தொடர்பு கிடையாது. திக்கு திக்குக்கு பண்டிதர்கள், சிஷ்யர்கள் என ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரை தேடத் தொடங்கினர். பல நாட்கள் கடந்தும், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், செய்வது அறியாது தவித்தனர். வேறு வழியின்றி, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் மற்றொரு சீடரான ஸ்ரீ கவிந்திர தீர்த்தரை, ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரின் அடுத்த வாரிசாக நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  ஸ்ரீ கவிந்திர தீர்த்தருக்கு பட்டம் கொடுத்து, முழு சமஸ்தானத்தையும் ஒப்படைத்தார், வித்யாதிராஜ தீர்த்தர்.

ஆக, வித்யாதிராஜ தீர்த்தருக்கு பின்னர்தான் எண்ணற்ற பல மடங்கள் உருவாகினர். அதாவது, ஸ்ரீ மத்வாச்சாரியார் அஷ்ட மடங்களை (8 மடங்களை) நிறுவினார். அதன் பின்னர் வந்த ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ மாதவ தீர்த்தர்,  ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தர், ஸ்ரீ ஜெய தீர்த்தர், ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தர் வரையில், அஷ்ட மடங்கள் மட்டுமே இருந்தன.

ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தருக்கு இரண்டு மடாதிபதிகள் உருவான காரணத்தினால், ஸ்ரீ ராஜேந்திர தீர்த்தர் வியாசராஜ மடம் என்னும் புதிய மடத்தை நிர்ணயித்தார். அதே போல்,  ஸ்ரீ கவிந்திர தீர்த்தர், ராகவேந்திர மடம் என்னும் புதிய மடத்தை நிர்ணயித்தார். (இந்த மடத்தின் பெயர்கள் சற்று குழப்பம் வரலாம், மகான் ஸ்ரீ வியாசராஜர் வந்த பின்னர்தான் வியாசராஜ மடம் வந்தது என்றும், மகான் ஸ்ரீ ராகவேந்திரர் வந்த பின்னர்தான் ராகவேந்திர மடம் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் உண்மை என்னவென்று மகான்களுக்கு மட்டுமே தெரியும்)

மகான் ஸ்ரீ வித்யாதிராஜ தீர்த்தரை தியானித்தால், விசேஷ வித்தைகளை அருள்வதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

இவரின் மூல பிருந்தாவனம், ஒரிசா மாநிலம் பூரியில் இருக்கிறது.

வித்யாதிராஜம் ஸ்வகுரும் த்யாயாமி கருந் அகாரம்

✒ ரா.ரெங்கராஜன்

தேதி: 12.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்