பாக்யத லக்ஷ்மி பாரம்மா / வரலக்ஷ்மி விரதம் - 16.08.2024 & 17.08.2024

ஸ்ரீ மஹாலக்ஷ்மி விஷ்ணுவின் பத்னியாவாள். அவளுக்குப் பல ரூபங்கள் உண்டு. அவள் பிரக்ருதிக்கும் (Matter) அவ்யாக்குத ஆகாயத்திற்கும் (Space), வேதங்களுக்கும், அனைவரின் மனது மற்றும் வாக்குகளுக்கும், செல்வங்களுக்கும், ஸத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் முதலான மூவகை குணங்களுக்கும் அபிமானி தேவதையாயிருப்பவள். பகவான், ஸ்ரீமன் நாராயணன் அவதரிக்கும்போதெல்லாம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் அவதரிக்கிறாள்.  ராமாவதாரத்தில் சீதையாகவும், கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணி, ஸத்யபாமா என இருவர்களாகவும், அவதாரம் புரிந்துள்ளாள்.

வ்வாறு எல்லா தேசங்களிலும், எல்லா காலங்களிலும் பகவானை விட்டுப் பிரியாமல் சேர்ந்தேயிருப்பவள். ஞானானந்தமய தேகமுடையவள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அருளால் எல்லா உலகங்களையும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் முதலான அனைத்தையும் செய்யும் சக்தி வாய்ந்தவள். அவளுடைய கடாக்ஷம் எந்தெந்த திசையில் திரும்புகிறதோ அந்தந்த திசையில் செல்வங்கள் அனைத்தும் 'நான் முன்னே' என்று போட்டி போடுகின்றன. 

ரலக்ஷ்மி விரதம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெறுவதற்கான விசேஷமான விரதமாகும்.  அது ஆவணி  (சிராவண) மாதத்தில், பௌர்ணமிக்கு முந்தின வெள்ளிக் கிழமை தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும், சௌபாக்யத்தையும் தரத்தக்கது. இந்த வரலக்ஷ்மியின் பூஜையைச் செய்வதால், செல்வத்தையும் பலவிதமான நன்மைகளையும் அடையலாம். 

ந்த விரதத்தின் விபரம்,  பவிஷ்யோத்தர புராணத்தில், சிவபெருமான், பார்வதிதேவிக்கு உபதேசம் செய்யும் வகையில் விளக்கப்பட்டுள்ளது. பூஜையின் விவரங்களை, ஸூத பௌராணிகர், நைமிசாரண்யத்தில் வசித்து வந்த ரிஷிகளுக்கு உபதேசித்தார்.


 ந்த விரதத்தின் மகிமையை விளக்கும் வகையில், கதை ஒன்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டின நகரத்தில் சாருமதி என்ற பிராம்மண ஸ்திரீ இருந்தாள். அவளுடைய பதிபக்தியையும், மாமனார், மாமியார் முதலியவர்களிடமுள்ள பக்தியையும் கண்டு சந்தோஷமடைந்த மஹாலக்ஷ்மி, அவளுடைய கனவில் தோன்றி, வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறி மறைந்தாள். 

சாருமதி விழித்தெழுந்து, அந்தக் கனவைத் தன் உறவினர்களிடம் தெரிவித்தாள். அனைவரும் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து, வரலக்ஷ்மி பூஜையைச் செய்து, ஒன்பது முடிச்சுகளுடைய நோன்புக் கயிற்றை சுமங்கலிகளுக்குத் தானம் செய்து, தங்கள் வலது கைகளில் கட்டிக் கொண்டனர். இந்த பூஜையின் பலனால் சாருமதி ஸகல சௌபாக்கியங்களையும் அடைந்து,  தினமும் அன்னதானம் முதலான நற்காரியங்களில் ஈடுபட்டு, சிறந்து விளங்கினாள்.

கவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலக்ஷ்மி விரதத்தைச் செய்து, லக்ஷ்மி கடாக்ஷத்திற்குப் பாத்திரர்களாகி, பகவத் அனுக்ரஹத்திற்குப் பாத்திரமாகுவோமாக! இந்தாண்டு, 16.08.2024 வெள்ளி அன்று  வரலக்ஷ்மி விரதம் வருகிறது. அன்றைய தினம் ஏகாதசி வருவதால், மறுநாளும் அதாவது, 17.08.2024 அன்றும்  வரலக்ஷ்மி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

                                                                                                                               

                                              ✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


தேதி: 13.08.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்