ஹரிகதாம்ருதசாரம் என்னும் அறிய பொக்கிஷத்தை தந்தருளிய ஸ்ரீ ஜகந்நாததாசர்! / ஸ்ரீ ஜகந்நாததாசர் ஆராதனை - 12.09.2024

ஸ்ரீ ஜகந்நாததாசர்

ஸ்ரீ ஜகன்னாததாசரால் ரசனை செய்யப்பட்ட ‘கன்னட நியாய சுதா’ எனப் போற்றப்படும் மேரு க்ருதியே ‘ஹரிகதாம்ருத சாரம்’ ஆகும். விஜயதாசரின் ஆணைக் கிணங்க கோபால தாசர் மூலம் தானமாகப் பெறப்பட்ட 40 வருட ஆயுள் காலத்தை முழுவதுமாக தாசமார்க்கத்தில் அர்ப்பணித்து, ஜகன்னாத தாசரால் படைக்கப்பட்ட அற்புத படைப்பு இது. ஹரிகதாம்ருதசாரம் என்றால், பகவான் ஸ்ரீஹரியின் மகிமையை உரைக்கும் சார கிரந்தமாகும். பகவானிடம் வினயம், பக்தி, சலுகை, ஹாஸ்யம், சரணாகதி, த்ருட நம்பிக்கை முதலான நவரசங்களில் மூழ்கி, நிறைந்த மனத்தினராய், மெய் மறந்த நிலையில் தானாகவே தாசரின் மூலம் வெளிவந்த ஆசு கவிதையே இந்த ஹரிகதாம்ருதசாரம்.


பாற்கடலில் கிடைத்தது அமிர்தம் எனில், பக்திக் கடலில் கிடைத்தது ஹரிகதாம்ருதம். அந்த அமிருதத்தினால் ரோகம், மரண பயம் நீங்கும் எனில், இந்த அமிர்தத்தினால் பவரோகமே நீங்கி, மோட்ச மார்க்கம் சித்திக்கும். சாதாரணமாக ஒவ்வொரு கிரந்தத்திலும் ஒவ்வொரு விஷயம் கூறப்பட்டிருக்கும். 

இந்த ஹரிகதாம்ருத சாரத்தில், பகவத் விஷயமான சகல தத்வங்களும், ரகசியமான பிரமேயங்களும், பகவத் மகிமைகளும், மிகவும் ஸ்பஷ்டமாக ஸ்ருதி, ஸ்ம்ருதிகளுக்கு அனுகூலமாக கூறப்பட்டுள்ளது. 

சகல வேத, உபநிஷத்துக்கள், புராண, இதிகாசங்கள் முதலான மூல பிரமாண கிரந்தங்களை ஹரிகதா எனக்கொண்டால், சர்வமூல கிரந்தங்கள், டீகா, டிப்பணி, கிரந்தங்களை அதன் அர்த்தங்களை அளிக்கும் கிரந்தங்கள் எனக் கொண்டால், ‘ஹரிகதாம்ருத சாரம்’ மேற்கூறிய அனைத்து கிரந்தங்களின் சாரமாக திகழ்கிறது.


32 சந்திகளில், பாமினி ஷட்பதி அமைப்பில் இயற்றப்பட்ட கிரந்தம் இது. ஸ்ரீ பாதராஜர், ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ வாதிராஜர் மற்றும் ஸ்ரீ புரந்தரதாசர் ஆகியோர் இவரது கனவில் தோன்றி அளித்த ஆசிர்வாதத்தால், இயற்றப்பட்ட கன்னட மேரு கிருதி இது. ஜகன்னாததாசர் கிரந்தத்தை இயற்றியபோது, வர்ணா பிமானி தேவதைகள், இவர் முன்னே ‘நான், நீ’ என்று போட்டியிட்டு நர்த்தனமாடி, நின்று அருளிய கிரந்தம் இது. 

தாசரே ஓரிடத்தில் ஸ்பஷ்டமாக ‘லௌகிக வார்த்தை அல்ல, பரலோக நாதனின் வார்த்தை’ என்று பொருள்படும்படியாக ‘லோக வார்த்தெ இதல்ல, பரலோகைக நாதன வார்த்தெ’ என உரைத்துள்ளார். எனவே, இந்த கிரந்தம் ‘சகல வேத, புராண, இதிகாச, உபநிஷத் ஆகியவற்றின் சாரமாக ரகசிய பிரமேயங்களுடன் உள்ளது என்று தெரிகிறது.

ஸ்ரீ ஜகந்நாததாசர் பயன்படுத்திய தம்புரா

ளிமையான நடை, அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உதாரணங்கள், ஆழமான பகவத் விஷயங்கள் இதில் நிரம்பியுள்ளன. அங்கங்கு சம்ஸ்கிருத பதங்கள் இருப்பினும், அது கன்னடத்தில் நிழலில் அனுசரித்து இருக்கும்படி தாசர், தன் கவித்துவத்தையும் நிரூபணம் செய்துள்ளார். 

மனிதன் எப்படி இருக்க வேண்டும்? 

பகவானின் கருணைக்கு பாத்திரராவது எவ்விதம்? 

பகவானின் கருணை எத்தகையது? 

பித்ரு காரியங்களை செய்வது எப்படி? 

எதுவும் அறியாத பாம ரன் எவ்விதம் சாதனை செய்யவேண்டும்? 

எப்படி அனு சந்தானம் செய்வது? 

இவ்வளவு ஏன்? எப்படி போஜனம் செய்ய வேண்டும் என்பதுகூட இதில் விவரிக்கப்பட்டுள்ளது. 

32 சந்திகளில் முறையே, மங்களாசரண சந்தி, கருணா சந்தி, வியாப்தி சந்தி, போஜன ரசவிபாக சந்தி, விபூதி சந்தி, பஞ்ச மஹாயக்ஞ சந்தி, பஞ்ச தன்மாத்ர சந்தி, மாத்ருகா சந்தி, ஜீவப்ரகரண சந்தி, சர்வ ப்ரதீக சந்தி (அல்லது) சர்வ சமர்ப்பண சந்தி, தியான க்ரியா (அல்லது) தியான ப்ரக்ரியா சந்தி, நாடி பிரகரண சந்தி, நாமஸ்மரண சந்தி, பித்ருகண சந்தி, ஸ்வாஸ சந்தி, தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி, ஸ்வகத ஸ்வாதந்த்ர்ய சந்தி, க்ரீடா விலாச சந்தி, கர்ம விமோசன சந்தி, குணதாரதம்ய சந்தி, ப்ருஹத் தாரதம்ய சந்தி, பக்தாபராத சஹிஷ்ணு சந்தி, கல்ப சாதன சந்தி, பிம்பாபரோக்‌ஷ சந்தி, ஆரோகண தாரதம்ய சந்தி, அவரோகண தாரதம்ய சந்தி, அனுக்ரமணிகா சந்தி, கணபதி ஸ்தோத்திர சந்தி (அல்லது) விக்னேஷ்வர சந்தி, அணுதாரதம்ய சந்தி, தைத்ய தாரதம்ய சந்தி என பிரித்து, பகவத் விஷயங்களை கொடுத்துள்ளார் தாசர். கிரந்தத்தின் சந்தி விபாக கர்மங்களை, ஸ்ரீபீமேச தாசர், ‘சந்தி மாலா சந்தி’ என்ற கிருதியில் தனியாக விளக்கியுள்ளார்.

த்தகைய உயரிய கிரந்தத்தின் பலஸ்ருதியை, ஸ்ரீஜகன்னாத தாசரின் சிஷ்யர் ஸ்ரீதவிட்டல தாசர், விசேஷமாக 33-வது சந்தியாக கொடுத்துள்ளார். அதில், இந்த நூலின் ஒரு எழுத்தைக்கூட எழுதி படித்தாலும், ஒருவன் தேவதைகளால் வேண்டப்பட்டவனாய், ஸ்ரீஹரியின் பக்தி என்னும் உயர்வான செல்வத்தைப் பெறுவான். 

இதைப் படிப்பவர்களுக்கு அகால மரணம் இல்லை, யம பயம் விலகும், சர்வ மனோ பீஷ்டங்களும் நிறைவேறும் எனக்கூறி, மேலும், இந்த கிரந்தத்தின் ஒரு சந்தியாவது பாராயணம் செய்வதால்கூட, ஆயுள், ஆரோக்யம், புகழ், வலிமை, விசேஷ ஞானம், வீரம் மற்றும் நல்ல குணங்கள் சித்திக்கும் என விவரித்துள்ளார். 

ஸ்ரீதவிட்டல தாசர் மேலும் விவரிக்கும்படியான இந்த கிரந்தத்தை கேட்டாலே, குருடன் கண் பார்வை பெறுவான், செவிடனுக்கு காதுகள் கேட்கும், வளர்ச்சி குறைபாடு உள்ளவர்கள், மன்மதனைப் போல ரூப சௌந்தர்யம் அடைவார்கள், மலட்டுப் பசுக்கள்கூட ஈன்றெடுக்கும் பாக்கியம் பெறும், பட்டம் மரம்கூட துளிர்க்கும் என பலன்களை வரிசைப்படுத்துகிறார்.


ந்த கிரந்தத்தின் பாராயணத்தால் காம, க்ரோதங்கள் முதலான கெட்ட சிந்தனைகள் நீங்கும். நித்ய தீர்த்த ஸ்னானம் மற்றும் தானங்கள் அளிக்கும் பலன்கள் கிட்டும். பத்னியரிடம் பதிபக்தியும், கணவனிடத்தில் ஏகபத்னி விரதமும், தம்பதிகளிடையே அன்யோன்ய பாவமும் அதிகரித்து, சந்தோஷத்துடன் நல்வாழ்வு வாழ்வர். நற்கதியைப் பெறுவர் என தாசர் பலஸ்ருதியில் விளக்குகிறார். 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்ரீ ஜகன்னாததாசர், வைகுண்ட யாத்திரைக்குக் கிளம்ப எத்தனித்தபோது, சூக்‌ஷ்ம ரூபத்தில் தன்னை காண்பித்து, தன்னுடைய ஒரு அம்சம்தான் வாழ்ந்த மானவியில் உள்ள தன் கிருஹத்தில் ஒரு கம்பத்திலும், தான் மீட்டிவந்த வீணையிலும், விசேஷமாகதான் இயற்றிய ஹரிகதாம்ருத சாரத்திலும் இருப்பதாக உரைத்து, ஹரிவாயு மற்றும் குருகளின் அருள் இதில் பரிபூர்ணமாக உள்ளது என்பதை காட்டியுள்ளார்.

ன்னடத்தில் இயற்றப்பட்ட ஹரிகதாம்ருத சாரத்திற்கு, அனேக பண்டிதர்களும், தாசர்களும், ஸ்ரீசங்கர்ஷண ஒடெயரு போன்ற யதி ஸ்ரேஷ்டர்களும் வெவ்வேறு காலங்களில், அனேக வியாக்யானங்களை அளிப்பத்திருப்பதனாலேயே, இந்த கிரந்தத்தின் மகிமை மற்றும் கருத்துக்களின் ஆழம் புலப்படுகின்றது. 

இத்தகைய மேரு கிருதியான ஹரிகதாம்ருதசார கிரந்தத்தை படித்து, எழுதி, கேட்டு, பாராயணம் செய்து, பிறருக்கும் கற்பித்து ஸ்ரீஜகன்னாத விட்டலனின் அருளுக்கு பாத்திரர் ஆவோமாக என பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீ ஜகந்நாததாசரின் இந்த தூண் வடிவிலான கோயிலானது, கர்நாடக மாநிலம் மான்வி என்னும் இடத்தில் இருக்கிறது.

ராய்ச்சூர் என்னும் இடத்தில் இருந்து சுமார் 48கி.மீ., தூரத்தில் மான்வி இருக்கிறது

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.

                                                                                                                               

                                                  ✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


தேதி: 11.09.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்