எது நம்முடையது? / கீதையில் கிருஷ்ணரின் உபதேசம்!
``யுக்த கர்மபலம் த்யக்த்வா சாந்திமாப்னோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண பலே ஸக்தோ நிபத்யதே’’ (5:12)
‘‘பலனில்
சற்றும் பற்றில்லாத ஒரு யோகி, அனைத்தும் பரந்தாமனாலேயே இயங்குகின்றன என்ற
சரணாகதி தத்துவத்தைப் பூரணமாக உணர்ந்த யோகி, மேன்மையடைகிறான். மாறாக தன்
ஒவ்வொரு செயலுக்கும் அதற்கான பலனில் ஆர்வம் செலுத்துபவன், மோகத்துடனேயே
செயல்படுபவனாகிறான்.’’
‘என்னுடையது’ என்று, தான் கருதியது எத்தனை
அபத்தம் என்பதை ஒவ்வொருவரும் தமது மரணத் தறுவாயில்தான் உணர்கிறார்கள்.
என்னுடையது என்று இவர்கள் கருதிய எதைத்தான் ஆன்மாவால் தன்னுடன் கொண்டு
செல்ல முடிகிறது? எடுத்துச் செல்ல முடியாத எதுவும் எப்படி ‘என்னுடையது’
ஆகும்? ‘என்னுடையது’ என்று நாம் நினைத்துக் கொள்ளும் எதுவும் நம்மால்
உருவாக்கப்பட்டதல்ல. ஏற்கெனவே இருந்தது, கொஞ்ச காலத்துக்கு
நம்மிடம் வந்திருக்கிறது, நமக்குப் பிறகு வேறு யாரையாவது சென்றடையப்
போகிறது, அவ்வளவுதான்.
நம்மால் சிருஷ்டிக்கப்படாத, இறப்புக்குப்
பின்னாலும், நாம் சொந்தம் கொண்டாட முடியாத, நமக்குப் பின்னால் யாரோ சொந்தம்
கொண்டாடப் போகிற விஷயம் எப்படி ‘என்னுடையது’ ஆகும்?
இரண்டு
கிரவுண்டு நிலத்தில் 1500 சதுர அடியில் ஒரு வீடு. அதற்கு ஒரு குடும்பம்
சொந்தக்காரராக இருக்கிறது. ஒரு கட்டத்தில் குடும்பத்தாரிடையே கருத்து
வேறுபாடு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் பேராசை கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
விளைவு, அந்த வீடு பல குடியிருப்புகள் கொண்ட ஒரு அபார்ட்மென்டாக
உருவாகிறது. இப்போது இந்த நிலத்துக்கு, அந்தக் குடும்பத்தார் தவிர, பத்து
புது சொந்தக்காரர்கள் வந்து விட்டார்கள்!
முதல் சொந்தக்காரர் குடும்பத்தை
மட்டுமல்லாமல், இப்போதைய சொந்தக்காரர்களையும் பார்த்து அந்த நிலம்
சிரிக்கிறது. ஒரு சொத்து பங்கிடப்பட்டு, பலருக்கு எனப் பிரிவது
மட்டுமல்லாமல், அந்த ஒவ்வொருவருக்குமே அவர்கள் இறப்புக்குப் பின்னால்
அந்தப் பங்கு அவர்களுக்குச் சொந்தமில்லையே என்ற உண்மையை எண்ணி நகைக்கிறது.
இதில்
வேடிக்கை என்னவென்றால், அந்த அபார்ட்மென்டில் ஒரு ஃப்ளாட்டில்
வசிப்பவருக்கு பக்கத்து சுவர்கள் முழுமையாக சொந்தமில்லை - அவை இரு பக்கத்து
ஃப்ளாட்காரர்களுக்கும் உரியது; மேலே விதானம் சொந்தமில்லை - அது மேல்
ஃப்ளாட்காரரின் தரைப் பகுதி; கீழே தரை சொந்தமில்லை - அது கீழ்
ஃப்ளாட்காரரின் விதானம்! இது எப்படி இருக்கு? நமக்கு அந்த ஃப்ளாட்டின்
எந்தப் பகுதியும் முற்றிலுமாக சொந்தமில்லை, ஆனாலும் நாம் ஒரு விலை கொடுத்து
நமக்கு என்று, நம் பெயரில் பத்திரம் பதிந்து கொண்டு அந்த ஃப்ளாட்டை
வாங்கியிருக்கிறோம்!
பிறப்பிலிருந்து ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி
ஏற்பட்டு, நிறைவாக மரணத்தில் ஒரு வாழ்க்கை முடிகிறது. ஆனால், அந்த வளர்ச்சி
காலத்தில் சேமிக்கப்பட்ட சொத்து மட்டும் அப்படியே நிற்கிறது! அதாவது,
சொத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல சொந்தங்கள் உண்டு, ஆனால், எந்த சொத்தும்
எந்த சொந்தத்துக்கும் சொந்தமானதில்லை; அது நிரந்தரமுமில்லை.
இதை, ஒரு
யோகி, ஒரு ஞானி நன்கு உணர்ந்திருக்கிறான். அதனாலேயே செயல்களின் விளைவுகளில்
அவன் ஆர்வம் காட்டாதவனாக இருக்கிறான்! ஆனால், எல்லோருமே தாங்கள்
யோகிகள்தான், ஞானிகள்தான் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதில் பேரார்வம்
காட்டுகிறார்கள்! இப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது, அந்த உண்மைக்குதான்
எத்தனை புறம்பானது! ஒரு சொத்தை தியாகம் செய்வது ஞானியின் இயல்பாக
இருக்கலாம்.
ஆனால் அவ்வாறு தியாகம் செய்துவிட்டேன் என்று அவன் சொல்லிக்
கொள்வானானால் அது உண்மையான யோகியின் குணமல்லவே!
தான் ஞானவான் அல்ல என்று நினைத்துக் கொள்பவன்தான், சொல்லிக் கொள்பவன்தான், ஞானத்தைப் பயில்பவனாக இருக்கிறான்!
தான் ஞானவான் அல்ல என்று நினைத்துக் கொள்பவன்தான், சொல்லிக் கொள்பவன்தான், ஞானத்தைப் பயில்பவனாக இருக்கிறான்!
தனக்கு எதுவும் சொந்தமில்லை, தன் இயக்கமே தனக்குச் சொந்தமில்லை என்று கருதுபவன்தான் உண்மையான ஞானியாக முடியும். அதாவது, எதையும் சொந்தம் கொண்டாடுவதை விட்டுவிட்டுச் செயலாற்றினால், புலன்களால், உடலால் கர்மங்களைச் செய்தால், முந்தைய ஜன்மங்களில் சேர்த்து வைத்திருந்த, வேண்டாத காம மூட்டையின் எடை குறைந்து கொண்டே வரும்; ஞான பாதைக்கு நல்வழி தெரியும்.
ஒருவனுடைய வாழ்க்கையை எதிர்காலம் இழுத்துச் செல்கிறது; கடந்த
காலம் உந்தித் தள்ளுகிறது. இத்தகைய இயக்கத்தில் மேற்கொள்ளப்படும் செயல்கள்
எல்லாம் ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற உணர்வோடு நிறைவேற்றப்படுமானால்,
இழுப்பதாலும், தள்ளப்படுவதாலும் உண்டாகும் உபாதைகள் ஒரு ஞானியை அண்டாது.
ஆனால்,
நம்மால் அப்படி இருக்க முடியவில்லை. கடவுளுக்கு நாம் படைக்கும்
பிரசாதங்களைக் கடவுள் வந்து உண்ண மாட்டார் என்பதில் நாம் மிகவும்
நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஆனால், அவரால் நம்மை, நம் பிரச்னைகளிலிருந்து விடுபட வைக்க முடியும் என்பதில் மட்டும் நம்பிக்கை வைப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? பிரார்த்தனைகளை நாம் இதயபூர்வமாகச் செய்வதில்லை, எதிர்பார்ப்புடன் செய்கிறோமே, அதனால்தான். எதிலும் பற்றில்லாத மனப்பக்குவத்தை நாம் நம் பிரார்த்தனையிலிருந்து ஆரம்பிக்கலாம். வீட்டிலோ, கோயிலிலோ, பொதுவான பஜனை மண்டலியிலோ எங்கே நாம் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டாலும், சாதனை புரிந்த நம் நல்ல நண்பரை உளமாறப் பாராட்டுவது போல, இறைவனைப் போற்றுவதுதான் உண்மையான பிரார்த்தனை.
தனக்குப்
பணம் கொடுக்கவில்லை, பதவி கொடுக்கவில்லை, தன்னை முன்னிலைப்படுத்தி
முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
வீட்டிலும், உறவுகளிடமும் ‘பிழைக்கத் தெரியாதவன், இளிச்சவாயன்’ என்றெல்லாம் பட்டம் வேறு…. ஆனாலும், அவன் பிடிவாதமாக இருக்கிறான். தான் எந்த காரணத்துக்காகவோ போற்றி மகிழும் தலைவனுக்குத் தான் இறுதிவரை விஸ்வாசமாக இருப்பதால், இந்தத் தொண்டனையும் ஒருவகையில் ஞானி என்று சொல்லலாமா?
கோயிலுக்குச் செல்வது என்பதே
ஏதேனும் வேண்டுதலை இறைவன் முன் வைக்கத்தான். இல்லாவிட்டால் கோயிலுக்கே
செல்வதில்லை என்பதுதான் இன்றைய பாமர பக்தனின் நிலை. எதையாவது பலனாக அடைய
வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோயிலுக்குச் செல்பவன், கோயில் கட்டடத்துக்குத்தான் செல்கிறானே தவிர, ‘கோயிலு’க்குள் செல்வதில்லை
என்பதுதான் உண்மை. அவனால் இறைவனை நெருங்க முடிவதில்லை என்பதுதான்
யதார்த்தம்.
இதற்குக் காரணம், எதையேனும் எதிர்பார்த்தே பிறரிடம் பழகுவது
என்று நாம் நம் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டதுதான்.
சாதாரணமாகப்
பேசிக்கொண்டிருந்தால்கூட, இவனால் நமக்கு ஆக வேண்டியது என்ன என்று கணக்குப்
போட்டுக் கொண்டிருக்கிறோம். உடனேயே ஏதேனும் உதவியைக் கோருகிறோம். அப்படிப்
பலருடனும் நாம் பழகும்போது, நாளடைவில் நம்மைப் பார்க்கும் அவர்கள்
முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்கள். ஆக, நாம் நல்ல நட்பையும்
இழக்கிறோம். நமக்கு ஒருவர் உதவி செய்கிறார் என்றால், நாம் அவருக்கு நன்றி
சொல்கிறோம்.
இது குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தை ஒட்டிய சம்பந்தம். அடுத்த
நாளும் நாம் அவருக்கு நன்றி சொல்லப் போவதில்லை. (ஆனால் நண்பர் அதை தினம்
தினம் எதிர்பார்க்கக் கூடும்!) இந்த ஒரே ஒரு சந்தர்ப்பத்துக்காக நண்பருக்கு
நன்றி செலுத்தும் நாம், இந்த வயதுவரை வாழ்வதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு
ஒவ்வொரு விநாடியிலும் நன்றி சொல்ல வேண்டுமல்லவா?
எப்படி இவ்வாறு நன்றி தெரிவிப்பது?நம் ஒவ்வொரு
செயலிலும் ‘அர்ப்பணிப்பு’ உணர்வோடு ஈடுபடுவதன் மூலம்தான். எல்லாமே
பரந்தாமனுக்கே என்று கருதியபடி கர்மாக்களை ஆற்றும்போது அதுவே அந்தப்
பரம்பொருளுக்கு நன்றி சொல்வதாக ஆகிவிடும்!
அதாவது பிரார்த்தனை, வெளிநோக்கம் கொண்டவர்களின் சாதனையாகவும், தியானம் உள்நோக்கம் கொண்டவர்களின் சாதனையாகவும் ஆகிவிடுகிறது! செக்கு
மாடு செக்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதைப் பொறுத்தவரை
அதன் பயணப்பாதை வட்டமானதுதான். அது அந்த வட்டத்தை விட்டு வெளியே
வரமுடியாது, வரத்தெரியாது, நாளாவட்டத்தில், பழக்கம் காரணமாக அப்படி
வெளியேவர, அது முயற்சிக்கவும் செய்யாது.
தன் கழுத்தில் செக்குத் தண்டு
பூட்டப்பட்டு விட்டால், உடனே அது தானாகவே சுற்றிச் சுற்றி வர
ஆரம்பிக்கும். வேடிக்கையாகச் சொல்வார்கள்: ஒரு செக்கு மாட்டை
ஒரு வண்டியில் பூட்டி சாலையில் பயணம் செய்ய விரும்பினார், ஒருவர். ஆனால்,
அந்த மாடோ ஏதோ ஒரு புள்ளியை மையமாக வைத்துக் கொண்டு, சுற்றிச் சுற்றிதான்
வந்ததே தவிர, பயணியின் பாதையில் செல்லவில்லை! இந்த செக்கு மாட்டு மனோபாவம் கொண்டவன்தான் ஞானி!
ஆனால்
அதையும் அவன் பொருட்படுத்துவதில்லை, அதில் அக்கறை செலுத்துவதில்லை,
அடுத்தப் பணிக்குத் தயாராகி விடுகிறான். ஒருவேளை முந்தைய தன் பணியின்
பூரணத்துவத்தில் அவன் நிறைவு கொள்வானானால், அடுத்த பணியின்போது
அவனுக்குள்ளேயே சந்தேகம் எழுந்துவிடும். ‘இதுவும் பூரணத்துவம் பெறும்…
ஒருவேளை பூரணத்துவம் பெறாவிட்டால்…’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து
விடுவான்.
அதனால்தான், தன் செயலின் பலன் எப்படிப்பட்டதாக அமைந்தாலும்,
அதற்கு முக்கியத்துவம் தராமல் அடுத்த கர்மாவைக் கையிலெடுக்கிறான் ஞானி. தன்
ஒவ்வொரு கர்மாவிலும் அவன் அவற்றை ஆற்றும் கடமையைத்தான் செய்கிறானே தவிர,
பலனை எதிர்பார்ப்பதில்லை.
நன்றி: பிரபு சங்கர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 21.11.2024
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அருமை. Shri Krishna ya Namaha
பதிலளிநீக்கு