நான் கடவுளை எப்போதும் வணங்குகிறேன் ஆனால்..... / கேள்வி - பதில்

கேள்வி: நான் கடவுளை எப்போதும் நினைக்கிறேன்! ஆனால், என் பிரார்த்தனைகள் நிறைவேறவில்லையே, ஏன்?

பதில்: எப்போதும் நினைக்கிறீர்கள் என்பதைவிட இறைவனை எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். இந்தப் புராணக் கதையைக் கேளுங்கள்...
 
திருமாலிடம் தனக்குதான் பெரும் பக்தி இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தார் நாரதர்.  அதைப் பெருமையுடன் விஷ்ணுவிடமும் சொன்னார். மனசுக்குள் புன்னகைத்தபடி, நாரதரை பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார் விஷ்ணு. “உன்னைவிட பெரிய பக்தன் ஒருவன் எனக்கு இருக்கிறான், போய் அவனை சந்தித்துவிட்டு வா” என்றார்.
நாரதருக்கு மனசுக்குள் வருத்தம். 

அதையும் மீறி, தன்னைவிட பெரிய விஷ்ணு பக்தன் இருக்கவே முடியாது என்ற வீம்பு எண்ணம். பூலோகத்துக்கு வந்தார். விஷ்ணு குறிப்பிட்ட பக்தன் ஓர் ஏழை விவசாயியாக இருந்தான். 

காலையில் தூங்கி எழுந்த அவன் வாய்விட்டு, ‘நாராயணா, நாராயணா...’ என்று மூன்று முறை உச்சரித்தான். பிறகு தன் வேலைகளில் ஆழ்ந்தான். காலைக் கடன்களை முடித்தான். ஏர் தூக்கிக்கொண்டு நிலத்துக்குப் போனான், உழுதான். மதியம் மனைவி கொண்டு வந்த உணவை  உண்டான். மீண்டும்  வயலில்  விவசாயப் பணியில் ஈடுபட்டான். மாலை மயங்கி இருள் வந்தபோது வீட்டிற்குத் திரும்பினான். 

இரவு உணவை முடித்தான். படுக்கப் போகுமுன் ‘நாராயணா, நாராயணா...’ என்று வாய்விட்டு உச்சரித்தான். உறங்கிப்போனான்.



வனா தன்னைவிட சிறந்த பக்தன்? நாரதருக்குப் பொறுக்கவில்லை. நேராக மகாவிஷ்ணுவிடம் வந்தார். “ஒருநாளைக்கு அதிகபட்சமாக இரண்டு பொழுதுகள் உங்கள் பெயரை உச்சரித்த அவனுடன் என்னை ஒப்பிட்டீர்களே, என்னை விடவும் பக்திமான் என்றும் சொல்லி விட்டீர்களே!” என்று அரற்றினார்.
 
திருமால் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு கிண்ணம் நிறைய எண்ணெயை விட்டு அதை நாரதரிடம் கொடுத்தார். ‘‘இந்த எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துச் செல். அந்த மண்டபத்தை அடைந்து மீண்டும் திரும்பி வா. ஒரு சொட்டுகூட எண்ணெய் கீழே சிந்தக்கூடாது” என்றார். நாரதர் உடனே அப்பணியை மேற்கொண்டார். நாராயணன் அறிவுறுத்தியபடியே போய் வந்தார். 

எண்ணெய் ஒரு சொட்டுகூட சிந்தவில்லை. திரும்பி வந்த நாரதரிடம் நாராயணன், “இப்போது கிண்ணத்தை எடுத்துச் சென்றாயே, அப்போது என்னை எத்தனை முறை நினைத்துக்கொண்டாய்?” என்று கேட்டார்.

அதானே! தனக்கு நாராயணன் சிந்தனையே இல்லையே! எண்ணெய் சிந்திவிடக்கூடாது என்ற கருத்தோடு போய் வந்ததில் விஷ்ணுவைத் தான் ஒரு கணம்கூட நினைக்கவேயில்லையே....!


ந்த விவசாயியும் உன்னைப் போலத்தான்,” விஷ்ணு சொன்னார். “தன்னுடைய கடமையில் ஆழ்ந்துவிட்ட அவனுக்கு என்னை நினைக்க எப்படித் தோன்றும். தன் பணி ஆரம்பிக்கு முன்னால் என்னைத் துதித்து என் ஆசியைக் கோரிய அவன், அன்றைய தன் பணி செவ்வனே முடிந்ததும் நன்றி சொல்லும் வகையில் மீண்டும் என்னை நினைத்துக் கொண்டான். 

தன் கடமையிலிருந்தும் தவறாமல், என் சிந்தனையிலிருந்தும் வழுவாமல் வாழ்க்கை நடத்துகிறானே, அவன்தான் உண்மையான பக்தன்!”
நாரதர் புரிந்துகொண்டார். நீங்களும் புரிந்துகொண்டீர்களா!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தேதி: 27.11.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்