கல்யாண வைபோகமே! / விவாஹ விசேஷங்களை பற்றி விவரிக்கிறார் பிரஸங்க பூஷணம் S. லக்ஷ்மிபதிராஜா / பகுதி - 1

விவாஹத்திற்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் விவாஹம், பரிணயம், பாணிக்ரஹணம் மற்றும் கல்யாணம் என்பவை குறிப்பிடத்தக்கவை. விவாஹம் என்பது "விஸேஷேண வஹதி இதி" அதாவது தர்மத்தை ரக்ஷித்து அதன் முலம் வாழ்வை நல்வழி நடத்திச் செல்வது என்று பொருள். விவாஹம் என்பதற்கு அடைவது எனவும் பொருள் உண்டு. தர்மத்தின் வழியேதான் அர்த்தம் (பொருளீட்டல்), காமம் (விரும்புவதை அனுபவித்தல்) பெறமுடியும்.

ல்வாழ்க்கையின் பொறுப்பைத் தன் வாழ்நாள் முழுவதும் ஏற்பதால், விவாஹம் என்ற இந்த சம்ஸ்காரம் சொல்லப்படுகிறது. இது தேக சம்பந்த சுகத்திற்கு மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். விவாஹம் செய்விப்பதன் நோக்கமே பிரம்மசாரி கிருஹஸ்த ஆஸ்ரம தர்மங்களை மேற்கொள்வதற்கான தகுதியை (அதிகாரம்) பெறுவதற்கும், வேதத்தில் நியமித்த யாக யஜ்ஞங்கள் முதலான தர்ம சாதனங்களை மனைவியுடன்  செய்வதற்கும், பித்ரு  ருணத்தை தீர்த்துக் கொள்ள செய்ய வேண்டிய காரியங்களுக்கும் ஆகும். 

ம்பதிகள் நல்ல சந்ததியைப் பெறுவதனால் அவர்களுக்கு ஸத்கதி ஏற்படுகிறது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவாஹ சுபகாரிய விசேஷங்கள் (வைபவங்கள்) மத்வ சம்பிரதாயத்தை அடிபடையாகக் கொண்டிருப்பினும், பெரும்பான்மையான சடங்குகள் அனைவருக்குமே பொருந்தக் கூடியவையே.

விவாஹம் (கல்யாணம்) என்பது அதற்கேற்பச் செய்யும் முன்னேற்பாடுகளையும், உள்ளடக்கியது. விவாஹ மண்டபத்தின் நுழைவாயிலிலும், மணமேடையிலும் வாழை மரங்கள், பச்சை மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுவது, வாழையடி வாழையாகவும், வாடாத பசுமையாகவும் வம்ஸம் தழைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆகும். 

ங்கள வாத்யமான நாதஸ்வரம், தவில் ஏற்பாடு செய்வதன் தாத்பர்யம், நூதன சம்பந்தம் ஏற்பட உள்ளது என்பதை அறிவிக்கவும், மங்கள காரியங்கள் செவ்வனே நடக்கிறது என்பதைக் குறிப்பதற்காகவும் ஆகும். பலவித வண்ணக் கோலங்கள் போடுவதும் இந்த நோக்கத்தில்தான். குத்துவிளக்கை ஏற்றுவதன் நோக்கம், நம்முள்ளிருக்கும் அறியாமை எனும் இருட்டைப் போக்குவிக்கும் ஒரு அடையாளமே. 

ல்வேறு தேவதைகளைப் பிரார்த்தனை செய்வதும்கூட அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டியேயாகும். விவாஹம் என்பதே மணமக்களிடத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீமந் நாராயணனின் ஸன்னிதானம் உள்ளது என பாவித்து நடத்துவதாகும். தம்பதி என்ற சொல்லுக்கே "ஜாயாபதி" என்று பொருள். ஜாயா என்பது லக்ஷ்மியின் பெயர்.


வள் பதி - லக்ஷ்மிபதி - ஸ்ரீமன் நாராயணன், அவன் 'ஜகதாம்பதி'. அந்த திவ்ய தம்பதியே முதல் தம்பதி; என்றும் இணைபிரியாதவர்கள். எனவே முதல் தம்பதியான ஸ்ரீலக்ஷ்மி நாராயணரின் விவாஹம் என்றே பாவித்து, நமது இல்ல விவாஹங்களை நடத்துவதினால், விவாஹ தம்பதிகளுக்கும் மங்களம் உண்டாகிறது. 

விவாஹத்திற்கு பிறகு தம்பதிகள் பெற வேண்டியது, வருடம் முழுவதும் செய்ய வேண்டிய பூஜைகள், விரதங்கள், பண்டிகைகள் மற்றும் அதனால் கிடைக்கக்கூடிய 'தர்ம ஸம்பத்' மற்றும் நல்ல பிரஜைகளைப் பெற்று வம்ஸத்தை வளர்க்கும் விதத்தில் அமையும் 'ப்ரஜா ஸம்பத்து'.

விவாஹ காரியத்தின் விசேஷ அம்சங்களைக் காணும் போது அதை 'விவாஹத்தின் முதல் நாள் காலை', 'விவாஹத்தின் முதல் நாள் மாலை' மற்றும் 'விவாஹ தினத்தில்' செய்ய வேண்டிய காரியங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

விவாஹத்தின் முதல் நாள் காலையில், இரு வீட்டாரும் தனித் தனியே செய்ய வேண்டியது  குலதெய்வ பூஜை  (தேவர ஸமராதனை). இது முறையே 

(1) சங்கல்பம்,  (2) விநாயகர் பூஜை, (3) வருண பூஜை, (4) புண்யாகவசனம், (5) மாத்ருகா பூஜை, (6) நாந்தி சமாராதனம், (7) ஈஸான்ய முதலான  மண்டப தேவதா பூஜை, (8) குல தேவதா பூஜை ஸ்தாபனம், (9) மாதா பிதா போன்ற பெரியோர்களுக்கு பாத பூஜை போன்றவற்றை உள்ளடக்கியது. 

'நாந்தி பூஜை' அல்லது 'நாந்தி சமாராதனம்' மற்றும் 'அஷ்டவர்க்கம்' என்பது இரு வீட்டாரும் அவசியம் அந்தந்த வம்சத்தின் மூதாதையர்களை வந்தனம் செய்ய, அவர்களும் சூக்ஷ்ம வடிவில் மந்திரங்களின் பிரயோகத்திற்கு கட்டுப்பட்டு பிரசன்னம் ஆகின்றனர் என்பது ஐதீகம். இவ்வாறு நம் முன்னோர்களும் கல்யாண மண்டபத்தில் பிரசன்னம் ஆகின்றனர். 

இது லட்சுமி நாராயண விவாகமாக கொண்டதினால் பிரம்மாதி தேவர்களும் அங்கு எழுந்தருளுகிறார்கள். எனவே, மாவிலை தோரணம் வாழைக் கன்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மணமேடையில்தான் நாந்தி பூஜை மற்றும் அஷ்டவர்க்கம் நடைபெற வேண்டும். இந்த சமயத்தில் பெண் வீட்டார் மாப்பிள்ளையாகப் போகும் வரனுக்கு காசி யாத்திரை சமயம் அணிந்து கொள்ள வேண்டிய சகல திரவியங்களை கொடுக்க வேண்டும்.

விவாஹத்தின் முதல் நாள் மாலையில் பெண்ணின் தாயார் வெந்நீர் குடம், தீபம் ஏற்றாத குத்து விளக்கு, மஞ்சள் குங்குமத்தட்டு புஷ்பங்களுடன் பந்து ஜனங்களுடன் பெண் பார்க்க அழைப்பு விடுப்பதையும், பெண்ணுக்கு அலங்கார பொருட்கள் ஒவ்வொன்றாக அளித்து, மாலை அணிவித்து, நலங்கிட்டு மகிழ்வதையும் குறிக்கும் 'பெண் பார்த்தல்' வைபவம் நடைபெறும். 

ந்த நிகழ்விற்கு பின்னர், வரனின் பெற்றோர்கள் "இன்ன ப்ரவரம், இன்ன கோத்ரம், இன்னாருடைய கொள்ளு பேரன், இன்னார் இன்னவருடைய பேத்தியும், இன்னார் புத்திரியும், இன்ன பெயருடைய கன்யாவை (வரனின்) மனைவியாக ஏற்கிறோம்" எனச் சொல்ல பெண்ணின் தகப்பனார் வரன் வீட்டாரை "ஏற்றுக் கொள்ளுங்கள்" என மூன்று முறைக் கூறி சபையில் நடைபெறுவது 'வாக் நிச்சயம்' என்பதாகும்.  

தனைத் தொடர்ந்து, கன்யாவின் பிதா கன்யா ரூபத்தில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மியை வரனின் ரூபத்தில் உள்ள பகவானுக்கு கன்யா தானம் செய்வதாக வாக்களிக்கும் 'வாக் தானம்' நடைபெறும். வரனின் தந்தையும் இதை ஏற்பதாக வாக்களிப்பார். இரு சாராரும் தங்களிடமுள்ள மங்கள வஸ்துக்களை மாற்றிக் கொள்ள, அவ்வஸ்துக்களை அங்க வஸ்திரங்களின் நுனியில் வைத்து மூட்டை போல் கட்டி முடிச்சு போட்டு, பூஜையானது நடைபெறும். 

இது இரண்டு வம்சங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சி. மணப்பெண் இந்திராணி தேவியை பூஜை செய்து பிரார்த்தனை செய்ய, பிராம்மணோத்தமர்கள் கன்யாவை ஆசிர்வதிக்கின்றனர்.

தனைத் தொடர்ந்து மண மேடைக்கு அழைத்து வரப்பட்ட வரனை பெண்ணின் தந்தை 'நாராயண ஸ்வரூபி' என்ன பாவித்து அர்க்யம் பாத்யாதிகளினால் பூஜித்து, மதுபர்க்கம் அளித்து,  நான்கு திசைகளிலும் உள்ள தேவதைகளுக்கும் அளித்து, வரனுக்கு வஸ்திரங்கள், ஆபரணம், மாலை போன்றவற்றை அளித்து நடைபெறும் 'வரபூஜை' நிறைவேறுகிறது. 

இதன் பிறகு இரு தரப்பிலும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் வாசனை திரவியங்களைத் தூவி ஆலிங்கனம் செய்து கொள்ளும் 'க்ஷேமாலிங்கனம்' நடைபெறும். இதனைத் தொடர்ந்து வரனை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமர்த்தி ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துச் சென்று திரும்பும் நிகழ்ச்சியான 'ஜானவாச ஊர்வலம்' நடைபெறும். முதல் நாள் நிகழ்ச்சியின் இறுதியாக இரவில் மாப்பிள்ளையை கோலங்கள் போட்ட இடத்தில் அமர்த்தி விருந்து சமையலை செய்து பரிமாறும் 'பிஸலுஊட' என்னும் வைபவத்துடன் நிறைவு பெறுகிறது.

விவாஹ நாள் காலையில், வரன் அதிகாலையில் எண்ணை ஸ்நானம் முடித்து, நாம முத்திரைகள் அணிந்து சந்தியாவந்தனம் செய்து, பஞ்சகச்ச வேஷ்டி, உத்தரியத்துடன் கிரஹஸ்தாஸ்ரமத்திற்கு  அருகதை  கிடைக்க வேண்டி 'உபநிஷத்', 'கோதான', `ஸ்நாதக' மற்றும் 'ஸமாவர்த்தன' என்னும் நான்கு ஸம்ஸ்காரங்களை செய்து ஆச்சார்யர்களுக்கு தக்ஷிணை வழங்கி ஆசி பெறுகிறான். 

அக்னிக்கு எதிரில் அமர்ந்து பிரம்மசர்யத்தைவிட்டு கிரஹஸ்தாஸ்ரமத்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொள்கிறான். காதில், அணியும் குண்டலம் அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, சந்தனம் பூசிக் கொண்டு, புஷ்பமாலை, காலணி, குடை கைத்தடி இவையாவும் பெற்று, பெண்ணின் தந்தை அணிவிக்கும்  தங்க மாலையையும் ஏற்றுக் கொள்கிறான் வரன். 

காசி யாத்திரைக்கு முன்பாக நடக்கிற ஸமாவர்த்தனையின் போது வரன் அணிகிற தங்கமாலை, அவனை துர்தேவதைகளிடமிருந்து காக்கிறது. பல மந்திரங்களுடன் வரன் ஸமிதா ஹோமம் செய்ய, 'சமாவர்த்தனை' என்னும் இச்சடங்கு முடிவடைகிறது. இப்போது வரன் பிரம்மசர்யத்திற்கும், கிரஹஸ்தாஸ்ரமத்திற்கும் இடையிலான 'ஸ்நாதகன்' என்ற நிலை அடைந்துள்ளான். 

தன் பிறகு, 'காசியாத்திரை' நிகழ்ச்சி நடைபெரும். குருகுலவாஸம் முடித்து, காசியாத்திரைக்குச் செல்வதாகக் கருதி பெண்ணின் தகப்பனார் அவனை இடைமறித்து, தனது மகளை விவாஹம் செய்து கொள்ளும்படி வேண்டி, தன் பத்னி தண்ணீர் வார்க்க, வரனின் கால்களை அலம்பித் துடைத்து, மும்முறை வலம் வந்து பழம் கொடுத்து உள்ளே மண்டபத்தில் அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெறுகிறது. 

இங்கு மாப்பிள்ளையை நாராயண ஸ்வரூபியாக மாமனார் பாவிக்கிறார். இதற்கிடையில் மணப்பெண் ஸ்வாமி அறையில் 'கௌரி பூஜை' அதாவது அம்பாளை ஆராதித்து தனக்கு நல்ல மணவாளன் அமையவும், தீர்க்க சுமங்கலித்துவம் பெறவும் வேண்டி செய்து கொண்டிருப்பாள்.

(பகுதி - 2 தொடரும்...)

          

                                           ✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா

 S. லக்ஷ்மிபதிராஜா


தேதி: 07.12.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------                                                        

கருத்துகள்