பகுதி - 2 / கல்யாண வைபோகமே! / விவாஹ விசேஷங்களை பற்றி விவரிக்கிறார் பிரஸங்க பூஷணம் S. லக்ஷ்மிபதிராஜா
வரனும், மணப்பெண்ணும் மணமேடைக்கு வர, அவர்களிடையே ஒரு திரை (அந்தர்படம்) பிடிக்கப்பட்டு புரோஹிதரர்கள் மந்திரங்கள், மங்களாஷ்டகம் மணியை அடித்துக் கொண்டு உரைக்க, முடிவில் திரை விலக்கப்படும் வேளையில் வதுவரர்கள் பரஸ்பரம் சீரகம் வெல்லத்தூள்களை தூவுவர், ஒருவரை ஒருவர் முதன்முறையாக நன்கு பார்ப்பதான இந்த சம்ப்ரதாயத்திற்கு 'நிரீக்ஷணெ' எனப் பெயர்.
இதன் பிறகு 'மஹா சங்கல்பம்' என்னும் முக்கியமான நிகழ்வு நடைபெறும். ஸாலங்க்ருத கன்யா தானத்தை மத்ஸ்ய புராணோக்த ப்ரகாரம் செய்வதாக ஆச்சாரியர் மந்திரம் உரைக்க, பெண்ணின் கைகளில் வைத்து பெண்ணின் கையைப் பிடித்து, வரன் கைகளில் வைத்து கங்கை ஜலம் அக்ஷதையுடன் தாரை வார்த்து பெண்ணின் பெற்றோர் 'கன்யா தானம்' செய்ய வேண்டும்.
வரனும் மந்திரங்களைக் கூறி நன்மக்களை அடையும் பொருட்டு பெண்ணை ஏற்பதாகச் சொல்ல வேண்டும்.
![]() |
| நன்றி: Megha Upadya |
எந்தவொரு சுபகாரியம் செய்யும் பொழுதும் கங்கணம் அவசியம். இந்த சுபகாரியம் செய்வதற்கு நாம் உடபட்டவர்கள், இந்த காரியத்தை முனைந்து சிரத்தையுடன் செய்வோமாக என ஊறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கங்கண பந்தனம் செய்யப் படுகிறது. மண்டபத்தில் ஐந்து உத்தமமான தம்பதி சத்வைஷ்ணவ தம்பதிகளை அழைத்து அவர்கள் மனையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் வதூவரர்களைச் சுற்றி நின்று சொண்டு, ஆச்சாரியர் மந்திரங்களை உச்சரிக்க, தம்பதிகள் கங்கண நூலை சுற்றிப் பிடித்துக் கொள்ள அவர்களின் ஸ்பர்ஸத்தாலும், மந்திரசக்தியினாலும் பவத்திரமாகிய கங்கண தாரம் (கயிரு) வரன் மற்றும் மணப்பெண்ணின் பரஸ்தம் வலது மணிகட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி 'கங்கண பந்தனம்' நடைபெறுகிறது.
விவாஹ காரியம் முடிந்து, கங்கணம் விஸர்ஜனம் செய்யும் வரை மணமக்கள் வெளியே செல்லக் கூடாது, விரதானுஷ்டானம் முக்கியம். இதைத் தொடர்ந்து பால், நெய் இவைகளால் நனைக்கப்பட்ட அரிசியை (அக்ஷதையை) தம்பதிகள் பரஸ்பரம் தலைமேல் (ஒருவர் மற்றொவர் மேல்) போட வேண்டும். இதுவே 'அக்ஷதாரோபணம்' என்பதாகும்.
இது ஆயுள் வ்ருத்திக்காகச் செய்யப்படுகிறது. பிறகு மணப்பெண், மாப்பிள்ளை பரஸ்பரம் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். தம்பதிகளிடையே நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்காக நடைபெறும் காரியம் இது. ஆயுள் அபிவ்ருத்திக்காகவே இதுவும் செய்யப்படுகிறது.
பின்னர் தம்பதிகளிருவரும், தாம்பூலம் மஞ்சள், குங்குமம் அக்ஷதை முதலிய மங்கள திரவியங்களால் திருமாங்கல்யத்தை பூஜித்து, பெரியோர்களின் ஆசிபெற்று, சுமங்கலிப் பெண்கள் மங்கள இசைபாட, மங்கள வாத்ய இசை முழங்க வேதம் ஓதிய அந்தணர்கள் மந்திர கோஷங்கள் எழுப்பி ஆசீர்வதிக்க, வரன் திருமாங்கல்யத்தை எடுத்து, தன் குலதேவதை, இஷ்ட தேவதைகளை ப்ரார்த்தனை செய்து பெண்ணின் கழுத்தில் மந்திர உச்சாடத்துடன் மூன்று முடிச்சு போட்டு கட்டும் நிகழ்ச்சியான 'மாங்கல்ய தாரணம்' நடைபெறும்.
"வாழ்நாள் முழுவதும் உன்னை கைவிடாது காப்பாற்றுகிறேன்" எனக்கூறி மணப்பெண்ணின் வலது கைவிரல்களை மேல் நோக்கிப் பிடித்து பற்றிக் கொள்வதே 'பாணிக்ரஹணம்' என்பதாகும். விவாஹ வைபவங்களில் பாணிக்ரஹணம்தான் மிக முக்கியம். இதுவும் முஹுர்த்த காலத்தில் முடிக்க முக்கியமாக கவனம் கொள்ள வேண்டியதாகும்.
மணப்பெண் கல்யாணம் ஆனவுடன் யாருடைய கையை முதலில் பற்றுகிறாளோ, அவன்தான் கணவன் என்றாகிவிடும். ஆதலால்தான் மணமக்களை வாழ்த்தும் விதத்தில் அவர்களின் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மணமகனுக்கு நீண்ட ஆயுளையும், மணமகளுக்கு தீர்க்க சௌமாங்கல்யமும் சித்திக்க நெல்பொறியினால் செய்யப்படும் ஹோமம் 'லாஜ ஹோமம்' என்பதாகும். மனைவியான பிறகு மணமகள் முதன் முதலில் பங்குபெறும் ஹோமம் இது. இதில் பெண்ணின் சகோதரன் ஒரு பிடி அவல் பொரியை மணமகளான தன் சகோதரியின் கையில் கொடுக்க அவள் கணவன் கையில் கொடுத்து இருவரும் கைகளைச் சேர்த்து பிடித்து ஹோமாக்னியில் போடுவார்கள்.
இதுமட்டுமின்றி பிரதான ஹோமம், ஜயாதி ஹோமம், ப்ரவேஸ ஹோமம், சேஷ ஹோமம் முதலியன குறிப்பிடத்தக்கவை. விவாஹ காரியங்களில் மிக முக்கியமானதொன்று 'ஸப்தபதி' என்பதாகும்.
ஸப்தபதி நடக்கும் போது ஸ்ரீமந்நாராயணன் பிரஸன்னமாகி அவ்விடத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.
அதன் சாட்சியாக பாணிக்ரஹணம் செய்தபின், மாப்பிள்ளை கிழக்கு நோக்கி நின்று, தன் பத்னியின் வலது பாதத்தை பிடித்து சற்று தூக்கி மணமகள் காலை ஒவ்வொரு அடியாக ஏழு அடிகளை மந்திரங்களுடன் எடுத்து வைத்து அக்னியின் வடக்கு மூலையில் அரிசியால் வைக்கப்பட்ட ஏழு குவியல்களின் மீது நடக்க வேண்டும்.
இந்த ஸப்தபதி முடிந்த பின்னர்தான் திருமண தம்பதிகள் ஸதி-பதி ஆகின்றனர். அன்ன சமிருத்தியுண்டாவதற்கும், பல விருத்தியுண்டாவதற்கும், சத்கர்மங்கள் சித்திபெறுவதற்காகவும், சுகத்தை உண்டு பண்ணுவதற்கும், ஆறு ருதுக்களிலும் க்ஷேமம் உண்டாவதற்கும், ஸோமயாகம் முதலிய சத்கர்மங்களை அனுஷ்டிப்பதற்கும் இந்த ஏழு அடிகளை வைப்பதாக, மந்திரங்களின் முலம் பிரார்த்தனை செய்வதாக அமைகின்றது.
இதனை தொடர்ந்து 'அம்மி மிதித்தல்' என்னும் சம்ப்ரதாயம் நடைபெறுகிறது. பெண்களின் கற்பு கல் போன்றது.
மகளிர் மனதிடம், கல்போன்று இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக, அம்மி மிதித்தல் நடைபெறுகிறது. அம்மிக் கல்லின்மேல் குழவி எத்தனை முறை உருண்டு உருண்டு ஆடினாலும், அம்மி அசையாது இருப்பது போல் மகளிர் மன உறுதி தளராது இருக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
இதன் பிறகு, இரவில் நக்ஷத்திரங்கள் உதயமான பின் (இப்போது பகலிலேயே செய்யப்படுகிறது) கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கிச் சென்று, 'துருவன்', 'அருந்ததி' என்ற நக்ஷத்திரங்களை கணவன் மனைவிக்கு காட்டி, துருவனிடம் சத்ருக்களிடமிருந்து காக்கும்படியும், ஸப்த ரிஷிகளில், வசிஷ்டரின் பத்னியாகிய பதிவிரதையான அருந்ததியின் மகத்துவத்தால் தனது மனைவி சப்தரிஷகளின் பத்னிகளைப்போல எட்டாவதாக விளங்கலாம் என்று பிரார்த்திப்பதே 'அருந்ததி காணல்' என்பதாகும்.
இதன் பிறகு 'நாகவல்லி' (நாகபலி) என்னும் நிகழ்வு, மணப் பெண்ணுடன் மாப்பிள்ளைத் தன் ஊர் திரும்பிச் செல்லுமுன் (அக்காலத்தில் வண்டிகளில்/ நடந்து செல்வதாக இருந்ததினால்) பூதம், பிசாசு, கருப்பு இவைகளின் பாதிப்பு ஏற்டாமல் இருக்க, அவைகளைச் சாந்தப்படுத்த செய்யும் சடங்கு ஆகும்.
தற்காப்புக்கு கத்தி, திருஷ்டி கழிக்க எலுமிச்சை, வெளிச்சம் தர விளக்குகள் போன்றவை தரப்படுகின்றன. 'நீலமணி (கருகமணி) தாரணம்' இந்த சந்தர்ப்பத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து முறத பாயணம், ரங்காவிருக்ஷம், நலங்கு, அரிசி யானை, உப்பு யானை, செண்டாடுதல், மரப்பாச்சி பொம்மைகளை தொட்டிலில் போட்டு ஆட்டுவது, வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுப்பது முதலியன செய்வது யாவற்றுமே கணவன் மனைவி பரஸ்பர ப்ரேமையை வளர்க்க வேண்டியதாகும். இதன் பிறகு நுனி வாழை இலைகள் பரப்பி போட்டு விருந்துக்கு உண்டான பதார்த்தங்கள் பரிமாறி பாட்டுக்கள் பாடி கொண்டாட தம்பதிகள் விருந்துண்ணும் 'பூமா சாப்பாடு (ஹரிபூமா)' என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சாப்பிட்டு முடித்ததும் கேள்வி எதிரில் சில சமையல் பாத்திரங்களை இலை முன்னால் கவிழ்த்து வைத்து, தம்பதிகள் தான் உண்ட பதார்த்தங்களை கொஞ்சம் எடுத்து பெண்ணின் பெற்றோரின் பாதங்களில் எறிவது பகவானே விவாதத்தை காண பிரசன்னராகியுள்ள தேவதைகளுக்காக பாத்திரத்தில் உள்ள சில பருக்கைகளை தாம் உண்டு தேவதைகளை திருப்தி அடையச் செய்வதற்காகவேயாகும்.
இதனைத் தொடர்ந்து பெண் ஒப்புவித்த பிறகு நடைபெறும் 'கிரகப்பிரவேசம்' பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வீட்டார் மரியாதை செய்யும் தருணம் இது.
விவாஹ நாளில் கடைசியாக நடைபெறுவது 'நிஷேகமுகூர்த்தம்'. இது மற்றொரு சுபதினத்தில் முகூர்த்த நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டில் செய்யப்பட வேண்டிய நிகழ்ச்சி. இப்போது மண்டபத்திலேயே நடத்தப்படுகிறது. விவாக நிகழ்ச்சிகளில் இறுதியாக மாப்பிள்ளை வீட்டார் தங்கள் ஊருக்கு பெண்ணுடன் திரும்பி செல்லும் போது வழியில் சாப்பிட பதார்த்தங்களை (காய்கறிகள், கட்டுசாதம்) கொடுக்கும் 'க்ஷேமதண்டலு' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இவ்வாறாக நம்முடைய எந்த ஒரு நற்காரியமும் பகவானை முன்னிட்டே நடைபெறுகிறது. கல்யாணமே ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் நாராயண ஸ்வரூபமாக தம்பதிகள் உள்ளனர் என்ற பாவனையில்தான் செய்யப்படுகிறது. ஆகவே நாமும் பக்தி சிரத்தையுடன் இவற்றில் பங்கு கொண்டு புரோகிதர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து விவாஹம் என்னும் புண்ணிய காரியம் செவ்வனே நடத்துவதன் மூலம் பகவத் ப்ரீத்திக்கு பாத்திரராகி வீடு பேற்றை அடைவோமாக.
✎ பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா
S. லக்ஷ்மிபதிராஜா
தேதி: 16.12.2024












கருத்துகள்
கருத்துரையிடுக