நித்ய அனுஷ்டானங்கள் முக்கியமா? / ஆசிரியர் பகுதி

ஆசிரியர் பகுதி

அனைவரும் நலமா! நீண்ட இடைவெளிக்கு பின், ஆசிரியர் பகுதி மூலமாக நாம் உரையாடவிருக்கிறோம். மகிழ்ச்சியே! 

சில தினங்களுக்கு முன்பு, ஒரு வாட்சப் குரூப்பில் ஆரோக்கியமான விவாதம் ஒன்று பேசப்பட்டது. அதில், நித்ய அனுஷ்டானங்கள் முக்கியமா? அல்லது பக்தி மட்டும் போதுமா? என்று விவாதிக்கப்பட்டது. நமக்குத்தான் விவாதம் என்றால் பிடிக்குமே... ஆகையால் நானும் அதில் பங்குக் கொண்டேன். அவரவர் தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 

நானும் எனது கருத்துக்களை பதிவு செய்தேன், அந்த பதிவு அப்படியே கீழே.....

``நம் மத்வாச்சாரியார், நமக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த துவைத மார்க்கம். சுமார் 37 மதங்களை கண்டனம் செய்து, கடவுளை அடைய துவைத சித்தாந்தமே சரியான வழி என்று போதித்து, ஸ்ரீ நரஹரி தீர்த்தர், ஸ்ரீ அக்‌ஷோபிய தீர்த்தர், ஸ்ரீ ஜெய தீர்த்தர், ஸ்ரீ வியாசராஜர், ஸ்ரீ ரகோத்தம தீர்த்த, ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் போன்ற முத்தான பல மகான்கள் என்னும் முத்துக்களை நமக்கு கொடுத்திருக்கிறார்.

மேலும், நாமம் தரித்துக்கொள்வது முதல் சந்தியாவந்தனம், காயத்திரி ஜபம், சாளக்கிராம பூஜைகள், போன்ற சாஸ்திர சம்ரதாயங்களை செய்வதினால் ஒருவனுடைய வாழ்வில், முக்தி என்னும் உயரிய பதவியடைய உதவுகிறது, மத்வரின் துவைத மார்க்கம். அதை யாராலும் மறுப்பதற்கில்லை.

அதே சமயத்தில், காலையில் நாமம் தரித்துக்கொண்டு, சந்தியாவந்தனம் செய்துவிட்டு, ஜெப தபங்களை செய்துவிட்டு பெற்ற தாய், தந்தையினரை துன்புறுத்துவதில் நியாயம் இருக்கிறதா? வீட்டின் பூஜையின் அறைகள் பெரியபெரியதாக இருக்கின்றது. இருந்தும், என்ன பயன்? பெற்ற தாய் - தந்தையர்கள் முதியோர் இல்லத்தில் அல்லவா இருக்கின்றார்கள். பூஜை அறையினை வைத்தவர்களுக்கு, தாய் - தந்தைக்கு என்று தனி அறையினை ஒதுக்க முடியாதா? 

அதே போல், சுதாமங்களம் படித்துவிட்டு, அடுத்தவரை துன்புறுத்தல்களோ அல்லது அலுவலகத்தில் அடுத்தவரின் காலை வாரிவிடுவதோ சுதா மங்களம் படித்து என்ன பயன்? 

கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ சதா சர்வ காலமும் சண்டையிட்டுக்கொண்டு அந்த சண்டை குழந்தைகளை பாதித்து, ஸ்வாமி படங்களுக்கு பூக்களும், கற்பூரமும் காட்டுவதில் பயனுள்ளதா என்ன? 

அதனால், நித்ய அனுஷ்டானங்களை முற்றிலும் விட்டுவிடுங்கள் என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன். நம் பத்திரிக்கையின் பெயரே மத்வரின் பெயரில்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, ஒருவனுக்கு முதலில் மனத்தூய்மை வேண்டும். அதனுடன் நித்ய அனுஷ்டானங்களும் செய்ய வேண்டும். நித்ய அனுஷ்டானங்கள் செய்யாமல் இருந்தால் பாவம் வருமா? என்று பகவானுக்குத்தான் தெரியும்.

ஆனால், தாய் - தந்தையரை பாதுகாக்க தவறினால் நிச்சயம் அது பாவமே! மேலே சொன்னது போல், பிறருக்கு துன்பம் தரும் நோக்கில் செய்வது அனைத்தும் பாவமே! தாய் தந்தையர் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு அன்னமிட்டு பாதுகாக்குங்கள். இறந்த பின் காசியில் பிண்டமிட்டு என்ன பயன்? நித்ய கர்மாக்களை செய்யாமல் இருந்தாலும், தாய் - தந்தையினரை கவனித்தாலே ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும்.

கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் நல்லா தானே வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவன் நிறைய பணம் காசுகளை வாரிக் கொடுக்கின்றானே என்று நம் மனதில், நீண்ட நாள் ஒரு கேள்வி ஒன்று உள்ளது. காரணம் என்ன தெரியுமா... அவர்கள் தாய் - தந்தையரை உள்ளங்கையில் வைத்து தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் துடிதுடித்துவிடுவார்கள். ஆகையால், கடவுளே இல்லை என்று தன்னை நிந்தனை செய்தாலும் அவர்களை கடவுளுக்கு பிடிக்கிறது. நினைத்து பாருங்கள். கடவுள் இல்லை என்று சொன்ன ஒரு மறைந்த அரசியல் தலைவரின் வீட்டின் உள்ளே அவரின் தாயாரின் உருவ சிலை ஒன்று வைத்து தினமும் வழிபாடு செய்திருக்கிறார். 

ஆக, முதலில் மனத்தூய்மையே! பிறகே நித்ய அனுஷ்டானங்கள் நன்றி... இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!!!

 - ஆசிரியர் 

-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 01.01.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்