வாழ்வில் உயரங்களை எட்ட உதவும் உயரமான ஆஞ்சநேயர் / அனுமன் ஜெயந்தி - 30.12.2024
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37 அடி உயரத்தில் மிக பெரிய ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட நாம், ஆஞ்சநேயர் சுவாமியை தரிசிக்க சென்றோம்.
ஸ்ரீரங்கமே அழகிய ஊராக காணப்பட்டது. அங்கிருந்து, ஆஞ்சநேயர் கோயில் எங்குள்ளது என கேட்டவாறு பயணித்தோம். வழி நெடுக்க
மரங்களும், செடிகளும் சூழ்ந்து அழகாக காணப்பட்டது. எங்களை போலவே பலரும் கோவிலுக்கு செல்ல வழி கேட்டார்கள். அவர்களுடன் நாமும் நம் பயணத்தை தொடர்ந்தோம். கோயிலுக்கு செல்லும் வழியில், மணித்தோப்பு என்னும் இடத்தை கண்டோம். பச்சை பசேலாக காட்சியளித்தது. சில பறவைகள் பறந்துக் கொண்டிருந்தன.
ஆங்காங்கே, மயில்கள் சுற்றித்திரிந்தன. பின்புறம், கதிரவனின் அழகான தோற்றம். வயலின் நடுவில், வயதான முதியவர் ஒருவர் வேலை செய்துக்கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்று கோவிலுக்கு செல்ல வழிக் கேட்டோம்.
அவர் கூறியபடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றடைந்தோம். கோவிலின் தூரத்தில் இருந்தே, 37அடி ஆஞ்சநேயர் கம்பீரமாக வீற்றியிருப்பதை கண்டோம். கோவிலின் உள்ளே சென்றதும், மரங்கள் காற்றில் அசைந்து ஆடி நம்மை வரவேற்றது போல் இருந்தது. எங்களை, கோவில் நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர்களில், ஒருவர் நமக்கு கோவிலை சுற்றிக்காட்டினார்.
முதலில், கோவில் சுற்றி உள்ள நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கல்யாணக்கோலத்தில் உள்ள ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் ஆகிய சுவாமிகளை தரிசித்தோம். மரங்களின் நடுவில், கூரைகளை அமைத்து, கீழே கால்களை மண்கள், சூழ்ந்து கொண்டும். என முழுமையடையாத,கட்டடங்கள் இல்லாத சந்நதிகளாக இருந்தன.
இவைகளை காணும் போது இப்படியே இயற்கையோடு, கட்டடம் இல்லாத சந்நதிகளாக இருந்துவிடலாம் என தோன்றியது. பக்தர்கள், இந்த சந்நதிகளின் முன்பாக விளக்கேற்றி வழிபடுகின்றார்கள். ஆஞ்சநேயரின் பின்புறம், மிக பெரிய "கோ" சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இதில், கறக்கும் பாலினை சுவாமிகளுக்கு அபிஷேகத்திற்கும், நைவேதியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும், குழந்தைகள் படிக்க வேத பாடசாலை கட்டப்பட்டு வருகின்றன. இவைகளை பார்த்துவிட்டு, ஆஞ்சநேயரை தரிசிக்க சென்றோம். நாம் ஆஞ்சநேயரின் முன்பு நின்றதும், கிளிகள் கூட்டம் கோவிலின் மேலே பறந்துக் கொண்டிருந்தது. இந்த காட்சி மிக அழகாக இருந்தது.
கோவில் உருவான விதங்கள், ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துக்கொண்டார் கோவில் நிர்வாகியும், ஆஞ்சநேயர் உபாசகருமான வாசுதேவன். எனக்கு ராம ஜெயந்தியை கின்னஸ் ரெக்கார்ட் செய்யவேண்டும் என்பது ஆசை. அதனால், வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி 21 நாட்கள் இடைவிடாது ராம ஜபம் செய்தேன்.
அதில், அனுமாரே நேரடியாக பிரசன்னம் ஆகி "இப்படி கடுமையாக தவம் இருக்கிறாயே உனது ஆசை என்ன" என்று கேட்டார். "எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும். சுபிக்ஷமாக இருக்க வேண்டும். நீ என்னுள் வரவேண்டும்''. என நான் கூறிய அந்த நொடியே, "இந்த தருணத்தில் இருந்து, உன் மனசில் நான் இருப்பேன். இந்த கிரகத்தில் நான் இருப்பேன். பக்தர்களின் நியாயமான குறைகளை என்னிடம் நீ தெரிவித்தால், அதனை நான் நிவர்த்தி செய்வேன். இன்று முதல் அது நடக்கும்'' என்று ஆஞ்சநேயர் சொன்னார். அடுத்த மூன்றாவது நாட்கள், முக்கால் அடி ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒன்றை என் மகன் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தான்.
"நான்தான் வந்துருக்கேன், உன் வீட்டிலேயே பிரதிக்ஷ்டை செய்" என்றார் அனுமார். அதன் பின் பத்தர்கள், அனுமாரை தரிசிக்க வரத் தொடங்கினர். பக்தர்கள் தெரிவிக்கும் குறைகளை, அனுமாரிடம் தெரிவிப்பேன். பல பக்தர்களின் குறைகளை அனுமார் நிவர்த்தி செய்திருக்கிறார்.
ஒரு பக்தருக்கு, கடும் நோய் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் மனைவி என்னிடம் வந்து, "என் கணவருக்கு இந்த நோய் எப்போது குணமாகும்" என்று கேட்டார். "உன் குலதெய்வமான திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, கீழிருந்து மேலே நடந்து சென்று வா.. சரியாகிவிடும்" என்றேன். அவர் சென்று வர, பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்.
இதுபோல், ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டுள்ள பலருக்கும் வாழ்வில் எட்ட முடியாத உயரங்களை அடைய செய்துள்ளார், இந்த உயரமான ஆஞ்சநேயர்.
சனிக்கிழமைகளில், இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வருகை தந்து சிறப்பு செய்வார்கள். அன்று நாள் முழுவதும், பக்தர்களை பார்த்த மகிழ்ச்சியில் ஆஞ்சநேயர் காணப்படுபவார்.
இந்த 37அடி உயரமுள்ள "சஞ்ஜீவன ஆஞ்சநேயர் கோயிலின்" பூமி பூஜை செய்ய இவர்கள்தான், பணஉதவிகளை செய்தார்கள்.
இப்படியாக, பலரும் உதவிசெய்ய கோயிலை கட்ட மேலூரில் உள்ள தோப்பை விலைக்கு வாங்கினேன். "தெற்கு பார்த்து நான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறேன், விஸ்வரூபமாக நான் வரப்போகிறேன். எனக்கு 33 அடியில் கோயிலை கட்டு" என எனக்கு உத்தரவிட்டார் ஆஞ்சநேயர்.
எங்கெங்கோ தேடிப்பார்த்தோம், 33அடியில் கற்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்திற்கு, 6 அடி அளவில் ராமர் விக்ரஹம் செய்ய ஆரம்பிதோம். ராமர் உற்சவர் அதாவது ராமர் விக்ரஹம்தான் முதலில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டை செய்த மறுநாளே, ஆஞ்சநேயரின் தீவிர பக்தர் ஒருவர் போன் செய்து. ``அனுமாருக்கு தேவயான கற்களை தேடி எடுத்து விட்டோம்'' என்று சொன்னதும் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆஞ்சநேயரின், தலை முதல் பாதம் வரை 37 அடியும், பீடம் 4 அடியும் ஆகமொத்தம் 41 அடியில் கட்சிதமாக, சிற்பிகள் செய்து கொடுத்தார்கள். ஆஞ்சநேயர் கையில், ஜெப மாலை உள்ளது. சதா.. ராமரை நினைத்து ராமஸ்மரணம் செய்துக்கொண்டிருக்கிறார்.
ஆஞ்சநேயர் தெற்கு நோக்கி இருப்பதால், லோகம் சுபிக்ஷமாக இருக்கும். ஆஞ்சநேயரின் மொத்தம் எடை 108 டன். எப்படி எடுத்து செல்வது என்பதில், குழப்பம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், "முதல் முதலில் லாரி வாங்கி உள்ளோம் ஆஞ்சநேயரை நாங்கள் கொண்டு வருகின்றோம்"என சென்னையில் இருந்து ஒருவர் தேடிவந்தனர்.
ஓட்டுனர்கள், ராம மந்திரங்கள், சுந்தர காண்டம், அனுமான் சாலிசா போன்றவற்றை பாராயணம் செய்தவாரே லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார்கள். வண்டியின், டயர்கள் ஓட..ஓட...ராம்...ராம்...ராம் என்று சொல்லக்கூடிய ஒலிக்கருவிகளை பொருத்தினார்கள்.
அதை கேட்டுக்கொண்டே வந்தோம். எங்கும் தடையில்லாமல் ஸ்ரீரங்கம் அருகில், மாம்பழச்சாலை என்னும் இடத்தில் நள்ளிரவு 1மணிக்கு வந்தடைந்தோம். எப்படி ராமாயணத்தில் தன் உடலை சுருக்கிக்கொண்டு காரியங்களை சாதித்துக்கொண்டாரோ, அப்படி ஒரு ஆச்சரியம் இங்கும் நடந்தது.
ஆம்! மேலூர் சாலையின் அகலம் 11 அடி, அனுமாருடன் வண்டியின் அகலம் 10.45 அடி, எந்த ஒரு இடையூறும் இல்லாம், தன் 37அடி உருவத்தை சுருக்கிக்கொண்டு, இந்த கிராமத்திற்கு ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக வந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
லாரியில் இருந்து தூக்கி, பிரதிக்ஷ்டை செய்ய உதவுவதற்காக எல்&டி(L&T) கம்பெனியை நாடினோம். உடனடியாக, மறுக்காமல் செய்து கொடுத்தார்கள். எனக்கும் சந்தோஷம், அனுமாருக்கும் சந்தோஷம்.
“யஸ்து விஷ்ணு க்ருஹம் குர்யாத் வைகுண்டே தஸ்ய மந்திரம்
யஸ்து பிம்பம் ஹரே: குர்யாத் ஸது விஷ்ணோ லயம் வ்ரஜேத்
ஸபாம் ச மண்டபம் ரம்யம் சர்வம் தஸ்ய வ்ரஜேத் பரேஅம்பரே
ஸ பவேதமலே தாம்னி பரஸ்மிந்நேவ லீயதே''
இன்னும் முழுமையான திருப்பணிகள் முடியவில்லை. நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ராமர் போன்றவர்களுக்கு கிழக்கு பார்த்து சந்நதிகள் அமைக்க வேண்டும். வேத பாடசாலை, அமைக்கப்பட்டு வருகிறது. "கோ" சாலைகளை விரிவுப்படுத்தி வருகிறோம். இவைகள் எல்லாம் நல்லபடியாக நிறைவடைய வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயரை சேவித்து, துன்பம் விலகி நன்மை பெறவேண்டும். மேன் மேலும், இந்த மேலூர் கிராமம் பல நன்மைகளை பெற்று வளம் பெறவேண்டும். எனக்கேட்டுக்கொண்டார்.
எப்படி செல்வது:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து, மேலூர் கிராமத்திற்கு செல்ல மினி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்வதால், ஆட்டோ அல்லது தனி வாகனம் மூலமாக செல்வது சிறப்பாகும்.சந்திப்பு: ரா.ரெங்கராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 29.12.2024
கருத்துகள்
கருத்துரையிடுக