அனைத்தும் கொடுத்த சூரிய பகவானுக்கு நன்றி / சிறப்பு கட்டுரை / மகர சங்கராந்தி - 14.01.2025
14.1.2025 தை மாதம் (மகர சங்கராந்தி) பிறக்கிறது. மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி என்பது சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இன்றிலிருந்து உத்தராயணகாலத் துவக்கம். இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாகும். இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும்கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
பூமி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு ராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தைத் திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. வடமொழியில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். சில திருமால் ஆலயங்களில் இரண்டு வாசல் இருக்கும்.ஒன்று தெற்கு வாசல். இன்னொன்று வடக்கு வாசல். இன்று முதல் ஆறு மாத காலத்திற்கு வடக்கு (உத்தராயன வாசல்) வழியாக பெருமாளை தரிசிக்க வேண்டும்.
வானியல் சிறப்பு
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. மகர ராசியின் முதல் பாகையில் அதாவது உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியன் காலை 11 மணி 46 நிமிடங்களுக்கு நுழைகின்றனர். இதே நேரத்தில் சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் இருக்கின்றார். மகரமும் கடகமும் நேர் ஏழாவது ராசி என்பதால் சூரியனும் சந்திரனும் சந்தித்துக் கொள்ளும் உத்திராயண கால மாதப்பிறப்பு என்பதால் காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சந்திரன் தனக்குரிய ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் அங்கே இருக்கக்கூடிய செவ்வாயின் நீசபலம் மாறி நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படுகின்றது. சந்திர மங்கள யோகம் என்று சொல்லக்கூடிய யோகம் ஏற்படும் நாளாக இந்த நாள் விளங்குகின்றது.
அதைவிட முக்கியமாக குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மகர ராசியைப் பார்வையிடுகின்றார். எனவே சூரியன் குருவின் இணைவு ஏற்பட்டு யோகமாக மாறுகின்றது. இந்த ஆண்டு தைப்பொங்கல் பிறக்கக்கூடிய நாள் ஜோதிட ரீதியாக மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக விளங்குகின்றது. இந்த நாளில் மகர லக்கனம் உள்ள வேலையில் அதாவது ஏழு முப்பது முதல் எட்டு முப்பது மணிக்குள் புது பானை வைத்து பொங்கலிட்டு குலதெய்வத்துக்கும் சூரிய னுக்கும் படையல் போட வேண்டும்.
இன்று காலை ஒன்பதரை மணி முதல் எமகண்டம் ஆரம்பிப்பதால் அதற்கு முன்னாலேயே இந்த பூஜையை செய்வது நல்லது மகர லக்கினத்தில் பூஜை செய்வதால் குருவினுடைய பார்வையால் அனைத்து தோஷங்களும் கழியும். புது வாழ்வு கிடைக்கும்.
புதுப்பானை, புது அரிசி
மகர ராசிக்குள் சூரியன் நுழையும் நாளான இந்த மகர சங்கராந்தி நாளில் தானம் செய்வது சிறப்பு. இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடி, அந்த நதிக்கரையில் கோதானம் செய்வது மிகச் சிறப்பான தாகும். பொங்கலுக்கு எல்லாமே புதியன இருக்க வேண்டும். புத்தாடை, புத்தரிசி, புது வெல்லம், புது கரும்பு, புதுப்பானை என புதியதாகவே இருக்க வேண்டும்.
இன்னும் சிலர் பொங்கலுக்கென்று தனியாக வெங்கலப் பொங்கல் பானை வைத்திருப்பார்கள். சிலர் வழிவழியாக வந்த வெண்கலப்பானை வைத் திருப்பார்கள்.
அவரவர்கள் குல ஆச்சாரம், வழிமுறைதான் முக்கியம். அந்த பானையைச் சுத்தப்படுத்தி, அதன் கழுத்தில் மஞ்சள் கொத்தைச் சுற்று வார்கள். அதற்குச் சந்தனம் குங்குமம் அணிவித்துத் திலகம் வைத்து அதில் பாலை நிரப்புவார்கள். அதை அடுப்பில் வைத்து, பால் பொங்குகின்ற வேளையில், பால் பொங்கி வருவது போல், நம் இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் "பொங்கலோ பொங்கல்." என்று முழங்கி அரிசியை இடுவார்கள்.
சூரியனுக்கு படையல்
பொங்கல் அன்று குல தெய்வ வழிபாடு,சூரிய வழிப்பாடு,இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியம்.தை மாதம் முதல் நாளன்று, புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புத்தரிசி, பால், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள். நமக்கு வாழ்வில் எல்லா நாள்களும் இனிதாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தித்து, இனிப்பான சர்க்கரைப் பொங்கலும், கரும்பும் சூரியனுக்குச் சமர்ப்பித்து, சூரிய பகவானை வழிபடுவார்கள்.
மேலும், வெண்பொங்கல், வடை, பல காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கூட்டு உள்ளிட்டவற்றையும் சூரியனுக்கு நிவேதனம் செய்து வழிபடுவார்கள். அன்று புதிய வெங்கலப் பாத்திரத்தோடு சர்க்கரைப் பொங்கலைத் தானம் செய்வதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாடு என்றாலே செல்வம். மாடுகள் இதிகாச புராண காலம் தொட்டே மனித ஜீவனத்திற்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்துள்ளன. பசுவை கோமாதா என்றும் குலமாதா என்றும் கொண்டாடுகின்றோம். பசுவின் உடம்பில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களும் குடி கொண்டுள்ளனர்.
பசுவைப் பூஜித்து வலம் வந்தால் எல்லாத் தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீமகாலக்ஷ்மியின் முழு சாந்நித்யமும் பசுவிடம் நிறைந்துள்ளது. எனவே மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை விதவிதமாக அலங்காரம் செய்து, பூஜைகளை நடத்தி, வீதியில் வலம் வருவர்.
இப்படி நமக்கு பல விதங்களில் உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக, தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது. அன்று மாடுகளை நீராட்டி, அவற்றுக்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் அணிவித்து அலங்காரம் செய்து, வாழைப்பழம், வெண்பொங்கல் மற்றும் பலவகை உணவுகளைத் தந்து வணங்குவார்கள்.
அவ்வாறே உழவுக் கருவிகளையும் சுத்தம் செய்து அவற்றுக்குச் சந்தனம் குங்குமம் அணிவிப்பார்கள்.
- நன்றி: கோகுலாச்சாரி
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 13.01.2025
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக