ராமேஸ்வரம் சென்றால் குழந்தை வரம் கிடைக்குமா? / கேள்வி - பதில்கள்
ராமேஸ்வரம் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள், ராமேஸ்வரத்தில் வசிக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே, இது பற்றி?
- அரிமளம் இரா. தளவாய் நாராயணசாமி.உடம்பு
சரியில்லை என்று டாக்டரிடம் செல்கிறோம், அந்த டாக்டருக்குக்கூட உடம்பு
சரியில்லாமல் போகிறதே என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.
டாக்டரும் ஒரு மனிதர்தானே. ராமேஸ்வரத்தில் வசிப்பவர்களும் மனிதப்
பிறவிதானே. மனிதப்பிறவி என்பதே பூர்வ ஜென்ம கர்மாவினை
அனுபவிப்பதற்காகத்தான். கர்மாவின் அடிப்படையில் அவரவருக்கான வாழ்க்கை
என்பது அமைகிறது.
இதில் பாவ புண்ணியத்தின் விகிதாச்சாரம் முக்கியத்துவம்
பெறும். புண்ணியத்தின் அளவு கூடுதலாகவும், பாவத்தின் அளவு குறைவாகவும்
இருக்கும்போது பரிகாரம் செய்வதால், அதற்குரிய பலன் கிடைக்கிறது.
சாபத்திற்கு விமோசனம் என்பது உண்டு என்பது போல் செய்த பாவத்திற்கு
பிராயச்சித்தம் என்பதும் உண்டு. அவ்வாறு பிராயச்சித்தம் செய்வதற்காக
ராமேஸ்வரத்திற்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
ராமேஸ்வரத்திற்குச்
சென்றால் மட்டும் குழந்தை வரம் கிடைத்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை.
அங்கு சென்று செய்ய வேண்டிய கிரியைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்று
அறிவுறுத்துகிறார்கள். எங்கு வேண்டுமானாலும் அந்த பிராயச்சித்த பரிகாரத்தை
செய்யலாமே, அதற்கு ஏன் ராமேஸ்வரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி
எழலாம். இதயமாற்று அறுவை சிகிச்சை என்பதை எல்லா மருத்துவமனைகளிலும்
செய்துவிட முடியாது. அதற்கென்று இருக்கும் சிறப்பு மருத்துவமனைகளில்
மட்டுமே செய்ய இயலும். அதேபோல சிறப்பு பரிகாரம் என்பதை எல்லா ஊர்களிலும்
செய்ய இயலாது. எந்தவிதமான பிராயச்சித்தம் தேவைப்படுகிறதோ, அதற்கேற்றார்போல்
ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
இதயமாற்று
அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை
செய்வதில்லை. அதேபோல் ராமேஸ்வரத்தில் வசிப்பவருக்கு குழந்தை பாக்கியம்
இல்லை என்றால் அவருக்குத் தேவைப்படுகின்ற பிராயச்சித்தம் வேறொரு இடத்தில்
செய்ய வேண்டியதாய் இருக்கலாம். அதனைத் தெரிந்துகொண்டு அவர் அந்தப்
பிராயச்சித்தத்தை செய்து முடிக்கும் பட்சத்தில் அவருக்கு சந்தானப்ராப்தி
கிடைக்கலாம். அவரது ஜாதகத்தில் நிச்சயமாக குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு
இல்லை என்று உறுதியாகத் தெரியும்போது பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள்
சொல்வதில்லை. நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்யும்போது அதில் குறைகண்டு
விதண்டாவாதம் செய்யாமல் அவரது நம்பிக்கைக்குத் துணை செய்யும் விதமாகப் பேசி
நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதே சான்றோர்களின் செயல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 08.01.2025
தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக