ராசி பலன்கள் சொல்வது என்ன? அதைனை நம்பலாமா? வேண்டாமா? / சிறப்பு கட்டுரை
ராசிபலன் என்பது சுவாரஸ்யமான விஷயம். அநேகமாக எல்லா தமிழ் பத்திரிகைகளும் அது வார இதழோ அல்லது தினசரியோ, ராசிபலன் வெளியிடாமல் இருப்பதில்லை. தமிழ் பத்திரிகைகள் மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பத்திரிகைகளிலும் ராசி பலன் பிரதானமாக இடம் பெறும். உலக அளவில் ஆங்கில பத்திரிகைகளிலும்கூட இந்த விஷயம் உண்டு. நான் பலமுறை இதை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன். ஒருவர், பத்திரிக்கையை வாங்கியவுடன் எந்தப் பகுதியை முதலில் வாசிக்கிறார் என்பதை, பல வருடங்களாக ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன். பெரும்பாலோர் முதலில் ராசிபலன் பகுதியைத்தான் படிக்கிறார்கள். இது தெரியாமலா பெரிய பெரிய முதலாளிகள்கூட ராசி பலன் பகுதிக்கு முக்கியத்துவம் தந்து வெளியிடுகின்றார்கள்.
என்னுடைய நண்பர்களில் சிலர், ஜோதிடத்தில் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் “சார், என் ராசிக்கு சனி பெயர்ச்சி எப்படி இருக்கிறது? குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்பார்கள். நானும் ஏதோ சில விஷயங்களை சொல்வேன். அவர்கள் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு சென்றுவிடுவார்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் மனிதர்களுக்கு உள்ள ஆர்வம் எந்த நாளிலும் குறையப் போவதில்லை.
ராசி பலன்களைக் குறித்து நம்முடைய வாசகர்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது. ராசி பலன்களின் காணப்படும் சில தீமையான பலன்களைப் பார்த்து, அப்படியே நடந்துவிடும் என்று பலர் அச்சப்படுவதும், குழப்பம் அடைவதும் உண்டு. அதேபோலவே, “சார், இனி எனக்கு நல்ல காலம்தான்” என்று ஆனந்தமாகச் சொல்லித் திரிபவர்களும் உண்டு. ஆனந்தமாக இருப்பதுகூட தவறு இல்லை. ஆனால் அச்சப்படுவதும் குழப்பம் அடைவதும் தேவையில்லாத விஷயங்கள்.
சென்ற வாரம் ஒரு நேயர், “சார், துலா ராசிக்கு எழுதியிருந்தது அப்படியே எனக்கு பலித்தது” என்றார். அதில் எதிர்பாராத தனவரவு என்று போட்டு இருக்கும். எப்பொழுதோ கொடுத்த கடன் அவருக்கு வசூல் ஆகி இருக்கும்.
அவர் ராசி பலன் படி நடந்துவிட்டது என்று ஆனந்தத்தோடு சொல்வார். இன்னொரு துலா ராசி நேயர், “சார், ராசிபலன்ல, கொடுத்த கடன் வசூல் ஆகிவிடும் அப்படின்னு போட்டு இருக்கு. ஒரு ஆள் கிட்ட பணத்தை கொடுத்துட்டு நடையா நடக்கிறேன், ஒன்னும் தேறவில்லை’’ என்று வருத்தத்தோடு சொல்வார். இரண்டு பேரும் துலா ராசி நேயர்கள்தான். ஏன் ஒருவருக்கு நடந்தது? அதுவும் அப்படியே நடந்தது? ஏன் ஒருவருக்கு நடக்கவில்லை? எழுதப்பட்ட ராசிபலன் தவறானதா? எதை வைத்து கொண்டு ராசிபலன் எழுதுகிறார்கள்? ஏன் எல்லோருக்கும் ராசி பலன் பொருந்துவதில்லை? இவைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் அல்லவா. ராசிபலன் என்பது அன்றைய அல்லது அந்த வார அல்லது அந்த மாத கோள்களின் நிலையை வைத்துக் கொண்டு கணிப்பது. ஒவ்வொரு கோள்களும் நொடிக்கு நொடி நகர்ந்து கொண்டே இருக்கின்றன. எந்த ராசியில் இருக்கின்றன, எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றன என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு, அந்த கிரகம் இருக்கின்ற ராசி, சம்பந்தப்பட்ட நபரின் ராசிக்கு, எத்தனையாவது ராசி அல்லது எத்தனையாவது நட்சத்திரம் என்பதைக் கொண்டு தீர்மானம் செய்யப்படுவதுதான் ராசிபலன். இங்கே சம்பந்தப்பட்ட ஜாதகரின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரம் மட்டுமே ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
அவருடைய ஜென்ம ஜாதகம் எந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது என்பதைப் பற்றி ராசிபலன் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. யார் ஒருவருக்கு ஜென்ம ஜாதக பலன் குறிப்பிட்ட காலத்தில் சாதகமாக இருந்து, தசாபுத்திகளும் யோகதசையாக நடந்து கிரகசாரமும் சரியாக அமைந்திருந்தால், அவருக்கு அந்த வார ராசிபலன் சிறப்பாகவே இருக்கும். ஆனால், ஜனன ஜாதகம் சரியாக இல்லாமல் இருந்து, நடக்கக்கூடிய தசாபுத்தியும் சாதகமாக இல்லாமல் இருந்தால், கிரக சாரமாகிய ராசிபலன் அவருக்கு முழுமையாக பொருந்தி வராது. மாறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, ஒரு குறிப்பிட்ட கிரகப் பெயர்ச்சியின் பலனை அந்த கிரகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாம் பார்க்க முடியாது.
காரணம், அந்த கிரகத்தின் தீய பலனையோ, நல்ல பலனையோ மற்றுமுள்ள எட்டு கிரகங்களும் ஏதாவது ஒரு விதத்தில் கட்டுப்படுத்தும். உதாரணமாக; இப்பொழுது கடகத்துக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருக்கிறது. அஷ்டமச்சனி பொதுவாகவே மோசமான விளைவுகளைத் தரும் என்பதற்காக, கடக ராசிக்காரர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. சனியின் இரண்டரை வருட காலமும் கடகத்துக்கு மோசமாக இருக்காது.
ஒரே ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும் என்பதால் அந்தந்த நட்சத்திரக்காரர்களுக்கு தகுந்தது போல் சனியின் பலாபலன்கள் இருக்கும். கடகத்தில் பூச நட்சத்திரக்காரர்கள், பெரிய அளவில் சனியால் பாதிக்கப்பட மாட்டார்கள். காரணம் பூசம், சனியின் நட்சத்திரம். இரண்டாவதாக சனி கும்பத்தில் ஆட்சியில் இருக்கிறார். அதுவும் பூசத்தின் மூன்றாம் பாதத்தில் உள்ளவர்களுக்கு சனி அம்சத்திலும் பலம் பெறுவார். இந்த விஷயங்களை எல்லாம் அனுசரித்துப் பார்க்கின்ற பொழுது, கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி என்பது பெரிய பாதிப்பைப் தராது.
இரண்டாவதாக எந்த ஜாதகமாக இருந்தாலும் தீமைகள் தரும் அமைப்பை போலவே, நன்மைகள் தரும் அமைப்பும் இருக்கும். உதாரணமாக; கடகத்திற்கு அஷ்டமச்சனி நடந்தாலும், அதன் பாதிப்பு குறைவாக இருக்கும். காரணம், ராகு ஒன்பதாம் வீட்டில் இருக்கின்றார்.
கேது மூன்றாம் வீட்டில் இருக்கின்றார். குரு லாபஸ்தானத்தில் ரிஷபத்தில் இருந்து கடக ராசியின் பஞ்சமஸ்தானத்தையும் சப்தம ஸ்தானத்தையும், ராஜ்ஜிய தைரிய ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார். இதையும்கணக்கில் கொண்டு, அஷ்டமச்சனியின் பலனை எடை போடுகின்ற பொழுது, அது மிகப் பெரிய அளவில் பாதிப்பை செய்யாது. இது தவிர, ஜனன ஜாதகத்தில் சனியினுடைய அமைப்பு சாதகமாகவும், நடக்கும் தசாபுக்தி யோக திசையாகவும் இருக்கும் பட்சத்தில், அஷ்டமச்சனியில் கஷ்ட பலனைவிட நல்ல பலனை சிலர் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இதைவிட இன்னும் ஒரு விஷயத்தையும் ராசி பலனில் கவனிக்க வேண்டும். பெரும்பாலும் நாம் சனி, ராகு, கேது, குரு இவற்றின் பெயர்ச்சியைத்தான் முக்கியமாகக் கருதி பலனை பார்க்கின்றோம். ஆனால், சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் முதலிய கோள்கள் அஷ்டமச்சனியின் தீய பலன்களைக் குறைக்கும்.
இவ்வளவு இல்லாவிட்டாலும் இரண்டரை நாளுக்கு ஒருமுறை ஒரு ராசி மாறும் சந்திரன் மிக முக்கிய பங்கினை ராசி பலனை தீர்மானிப்பதில் ஆற்றுவார். அதனால்தான் எத்தனை கஷ்டத்திலும் ஒரு நல்ல பலன் இருக்கும். அதைப் போலவே எத்தனை யோக திசையிலும் மற்ற கிரகங்கள் ஏறுக்கு மாறாக வரும் பொழுது, சில சறுக்கல்களும் இருக்கும். இதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் ராசி பலனைப் பார்க்க வேண்டும்.
அது நன்மையாக இருந்தால் சந்தோஷமாக உற்சாகமாக எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும். தீய பலனாக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமே தவிர, அப்படியே நடந்துவிடும் என்று பயப்படக்கூடாது. ராசிபலன் என்பது ஒருவருடைய ஜனன ஜாதக பலத்தை நிர்ணயிப்பதில் ஒரு துணைக் கருவியே தவிர, அதுவே பிரதானம் அல்ல.
- நன்றி:கோகுலாச்சாரி
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 27.02.2025
---------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக