மத்வ சித்தாந்தத்தில் மிக முக்கியம் ரத சப்தமி - 04.02.2025
காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தை நோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் ‘ரத சப்தமி’. இன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. சூரிய நாராயணப் பெருமாளை வழிபடும் விதமாக பெருமாள் கோயில்களில் சிறப்பாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் இந்த நாளில் சூரியனை வணங்குவதற்கு முன் காலையில் எருக்கம் இலையைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பது ஐதீகம். இதற்குக் காரணமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.
முன்பொரு காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் எனும் முனிவர் வசித்து வந்தார். அவர் மூன்று காலத்தையும் உணர்ந்தவர். அவரிடம் பலரும் சென்று தங்கள் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும்படிக் கேட்பார்கள். அவரும் கணித்துச் சொல்வார். அவர் சொல்வது அப்படியே நடப்பதால், அவருடைய புகழ் பல இடங்களுக்கும் பரவியது.
ஒருமுறை, சந்நியாசி ஒருவர் காலவ முனிவரைப் பார்க்க வந்தார். அவர் காலவ முனிவரிடம், ‘எல்லோருடைய எதிர்காலத்தைப் பற்றியும் சொல்லும் நீங்கள், உங்கள் எதிர்காலம் பற்றி அறிந்ததுண்டா?’’ என்று கேட்டார். காலவ முனிவருக்குத் தூக்கி வாரிப்போட்டது.
காலவ முனிவரும் கண்களை மூடியபடியே தியானிக்கிறார். அவருக்கு எதிர்காலத்தில் தொழு நோய் ஏற்படும் என்பது அப்போதுதான் அவருக்குப் புலப்பட்டது. கண் திறந்து பார்த்தப்போது எதிரே இருந்த அந்த சந்நியாசியைக் காணவில்லை. சந்நியாசியாக வந்தவர், யமதர்மராஜன்.
நாட்கள் செல்லச்செல்ல காலவ முனிவருக்கு என்னவோ போலிருந்தது. அவர் நவகிரகங்களை நோக்கி தவம் இருக்கத் தமக்குத் தொழுநோய் வராமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவர்களும் அவருக்கு வரம் கொடுத்தனர். ஆனால், பிரச்னை வேறு விதமாக திசை மாறியது.
நவகிரகங்கள் என்பவை இறைவனின் ஏவலுக்குக் கட்டுப்படும் கருவிகள் மட்டுமே. வரம் அளிக்கும் அளவு வல்லமை பெற்றவர்கள் அல்ல.
இவர்களது இந்தச் செயல், படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தெரிய வந்தது. நவகிரகங்களின் செயலில் கோபம் கொண்ட பிரம்மதேவர், ‘காலச் சக்கரத்தை இப்படி ஆளாளுக்கு இயக்கினால் எப்படி? காலவ முனிவருக்கு, வரவேண்டிய தொழுநோய் உங்களுக்கு வரட்டும் என்று சாபம் கொடுத்து விட்டார்.
அழுது அரற்றிய நவகிரகங்களிடம் ‘இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது’ எனவும் கூறிச் சென்றார். ஆனால், ஓர் உபாயத்தை நவகிரகங்களுக்குக் கூறியருளினார்.
‘நீங்கள் பூமிக்குச் சென்று, அங்கே அர்க்கவனம் என்னும் இடத்தில் தங்கி, கார்த்திகை மாதம் தொடங்கி 78 நாட்கள் விரதம் இருங்கள்’’ என்று கூறினார்.
நவகிரகங்களும் அவர் சொல்லியபடியே அர்க்கவனத்துக்கு வரும் வழியில், அகத்திய முனிவரைச் சந்தித்தனர். அவர் நவகிரகங்களுக்கு சில வழிபாட்டு முறைகளைக் கூறினார். ‘திங்கட்கிழமைதோறும் எருக்க இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாட்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்’ என்றார் அவர்.
அவரே தொடர்ந்து, ‘ரத சப்தமி நாளில் ஏழு எருக்க இலைகள், எள், மஞ்சள் அட்சதை ஆகியவற்றைத் தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும்’ என்றும் கூறினார்.
இன்றும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ரத சப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது’’ என்று கூறினார். மேலும், மத்வ சித்தாந்தத்தில் மிக முக்கிய தினமாகவும் பார்க்கப்படுகிறது.
சூரிய பகவானை ஆராதிக்கும் ரதசப்தமித் திருநாளில், அவரது அதிதேவதையான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் ‘ஒரு நாள் பிரமோற்சவ விழா’ நடத்தப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ரத சப்தமியையொட்டி ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெறும்… அதை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். புரட்டாசி மாதத்தில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது ஒவ்வொருநாளும் சேஷ வாகனம், கருட வாகனம், சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் ஸ்ரீனிவாசப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்வார். அதே போல் ரதசப்தமியன்றும் வெங்கடேசப் பெருமாள் 7 வாகனங்களில் திருமலையில் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 7 நாள் வைபவத்தை ஒரே நாளில் தரிசித்து மகிழலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 03.02.2025
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பீஷ்மர் படத்திற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் கன அறிய ஆவல்
பதிலளிநீக்குசுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி... தவறுதலாக பீஷ்மரின் புகைப்படம் பதிவேற்றம் ஆகிவிட்டது. தற்போது சரி செய்து விட்டோம். இனி அது போல் தவறுகள், நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்கிறோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி 🙏
நீக்கு