30 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் ஜாதகம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம் என்கிறார்களே, இது சரியா? / கேள்வி - பதில்
30 வயதிற்கு மேல் அல்ல, எப்போதுமே ஜாதகம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம். சற்றே யோசித்து பாருங்களேன், நம் தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் ஜாதகத்தைப் பார்த்தா திருமணத்தை நடத்தினார்கள். அவர்கள் எல்லோரும் நல்லபடியாக குடும்பம் நடத்தவில்லையா? நமக்கு என்ன நடக்க வேண்டும், எந்த மாதிரியான வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அப்படித்தானே அமையப் போகிறது? இதில் ஜாதகம் பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன? எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும் தெரியுமா? நம்முடைய ஜாதகத்தின் அடிப்படையில் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் நம்முடைய மனதினை தயார் செய்துகொள்வதற்காகத்தான்.
ஜாதகத்தைப் பார்த்து பலன் அறிந்து கொள்ளும்போது அதற்கு ஏற்றார் போல் நம்மால் திட்டமிட்டுச் செயல்பட முடியும். ஜோதிடர்கள் என்பவர்கள் கடவுள் அல்ல, ஆலோசகர்கள். அவர்களின் ஆலோசனையின் படி செயல்படும்போது வரவிருக்கும் பிரச்சினையில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் எந்த வயதிலும் நீங்கள் ஜாதகம் பார்த்து திருமணத்தை நடத்த வேண்டியது இல்லை. மணமக்கள் இருவருக்கும் மனதிற்கு பிடித்திருந்தாலே போதுமானது. இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள கிரஹ நிலைகள் பொருந்தியிருந்தால் மட்டும்தான் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் போது பிடிப்பு என்பது வந்து சேரும். கிரஹங்கள் பொருந்தவில்லை என்றால் பார்க்கும்போதே பிடிக்காமல் போய்விடும்.
பெண்ணும் ஆணும் பார்த்துக்கொள்ளும்போது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்துகொள்ளாமல் உண்மையிலேயே பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் திருமணங்கள் நிச்சயமாக நல்வாழ்வினைத் தரும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 28.03.2025
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக