வாழ்வில் வெற்றியும், மன நிம்மதியும் தரும் ஸ்ரீ ராமர் / ஸ்ரீ ராம நவமி - 06.04.2025

ஸ்ரீராம நவமி பற்றியும், ஸ்ரீ ராமபிரானைப் பற்றியும் ஸ்ரீ ராமாயணம் தத்துவங்கள் பற்றியும் சில விஷயங்களை காண்போம்.

நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள்

கிருஷ்ணாவதாரத்தில் நால்வர் தவம்செய்து ஒரு பிள்ளையைப் பெற்றார்கள். ராமாவதாரத்தில் ஒருவர் தவம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார் என்று சுவாரஸ்யமாகச் சொல்லுவார்கள். யசோதை, நந்தகோபன், தேவகி, வசுதேவர் ஆகிய நால்வர் தவம்செய்து கண்ணன் அவதரித்தான். ஆனால் தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். ஆனால் அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

நான்கு வகை தர்மங்கள்

தர்மத்தை காப்பதற்காக பகவானே தசரதனுக்குப் பிள்ளைகளாக அவதரித்தான். தர்மம் நான்கு வகைப்படும்.

1. சாமானிய தர்மம்,

2. சேஷ தர்மம்,

3. விசேஷ தர்மம்,

4. விசேஷதர தர்மம்.

இதில் தாய் தந்தையிடமும் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற தர்மம் “சாமான்ய தர்மம்”. இதை ராமன் அனுஷ்டித்துக் காட்டினான்.

இரண்டாவதாக, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்கின்ற தொண்டுள்ளம் கொண்டவனாக, பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் (துஞ்சமில் நயனத்தான்) பகவானுக்குக் குற்றேவல் புரிந்தான் இலக்குவன். இது “சேஷ தர்மம்”.

எப்பொழுதும் பகவானையே நினைத்துக் கொண்டு, பகவான் சொல்லியதை செய்தான் பரதன். இது “விசேஷ தர்மம்”.

இறைவனுக்குத் தொண்டு செய்வதை விட இறை அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முதன்மையானது என்று பாகவத சேஷத்வத்தைக் காட்டினான் சத்ருக்கனன். இது “விஷேசதர” தர்மம்.

இது சைவத்திலும் உண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிட அன்றி வீடும் வேண்டா’’ என்று இருக்கும் நிலை அது. ‘‘உற்றதும் உன் அடியார்க்கு அடிமை’’ என்று இதை திருமங்கை ஆழ்வார் வலியுறுத்துவார்.

ராமாயணம் கதையா? தத்துவமா?

அறத்தின் நாயகனான ராமன் குணங்கள்தான் ராமாயணம் முழுக்க இருக்கிறது. அந்தப் பரம்பொருளை உணர்வதுதான் ராமாயணம் தெரிந்து கொள்வதன் நோக்கம். எனவே ராமாயணத்தை ஒரு கதையாகப் படிக்காமல், தத்துவத்தைப் படிப்பதன் மூலம்தான் முழுமையான பலன் பெற முடியும்.  அத னால் தான் நம்மாழ்வார், ‘‘கற்பார் ராமாயணத்தை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று சொல்லாமல், ‘‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ’’ என்று பாடினார்.

காயத்ரி மந்திரமும், ஸ்ரீ ராமாயணமும்

சகல வேதங்களின் சாரமான காயத்ரி மந்திரத்திற்கும், ஸ்ரீ ராமாயணத் திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. காயத்ரி மந்திரத்திற்கு 24 அட்சரங்கள். ராமாயணத்திற்கு 24,000 சுலோகங்கள். ஒவ்வொரு அட்சரத்துக்கு 1000 சுலோகங்கள் என்ற வகையில்   24 ஆயிரம் சுலோகங்களை வான்மீகி செய்தார். இதைப்போலவே, நம்மாழ்வாரின் திருவாய்மொழியும், ராமாயணசாரத்தைச் சொல்வதால், அதற்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை ராமாயணத்திற்கு நிகராக 24000 படி உரை எழுதினார்.

ராமாயணமும் மகாபாரதமும்

ராமாயணம் மகாபாரதம் இரண்டும் ஒரே கருத்தைத்தான் சொல்லுகின்றன. உலக சகோதரத்துவத்தின் ஒற்றுமையைச் சொல்வது ராமாயணம். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையின்றி பகைத்துக்   கொண்டால் என்ன மாதிரியான அழிவுகள் ஏற்படும் என்பதைச் சொல்வது மகாபாரதம். ராமாயணம் நேர்மறையாகச் சொல்கிறது. அதே கருத்தை எதிர்மறையாகச் சொல்லு கின்றது மகாபாரதம். அதனால் தான் “இதிகாசங்களில் சிரேஷ்டமானது ராமாயணம்” என்று பிள்ளை லோகாச்சாரியார் தம்முடைய ஸ்ரீ வசனபூஷணம் என்கின்ற நூலிலே சொல்லி வைத்தார்.

முத்தி நகரங்களில் தலை அயோத்தி

ஸ்ரீராமர், முத்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியில் அவதரித்தார். எனவே அயோத்தியையும் ஸ்ரீராமரையும் நினைத்தாலே புண்ணியம் வரும். முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும்கூட.

‘அயோத்யா மதுரா மாயா காசி 

காஞ்சி அவந்திகா புரி த்வாரவ 

திஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ 

என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்தி ஏன் புனிதத்தலம்?

பகவான் நித்ய வாசம் செய்யும் வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தி. (யுத்தங்களால் வெல்லப்படாத பூமி). மனு, இந்த ஊரை சரையூ நதியின் தென் கரையில் நிறுவினார், என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

ஸ்ரீராமபிரான் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களின் அடிச்சுவடுகளை இன்றும் நாம் அயோத்தியில் தரிசிக்க முடியும். அதனால் அயோத்தியை புனிதத் தலமாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். அயோத்தியில் தரிசிக்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அயோத்தியா ரயில்வே நிலையத்தினுள், சுவர்களில் ஶ்ரீ ராம்சரித் மானஸ் என்ற துளசிதாஸ் ராமாயணத் திலிருக்கும் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

ஏழும் ராமனும்

ராமபிரான் வாழ்வில் ஏழு என்கிற எண் மிகப் பொருந்தி வருவதைக் காணலாம்.

1.ஏழாவது அவதாரம் ராம அவதாரம்.

2.ஏழு மரா மரங்களைத் துளைத்தான்.

3.ராமன் எழுபது வெள்ளம் வாநர சேனைகளோடு இலங்கை மீது படையெடுத்தான்.

4.ஏழு உலகங்களிலும் அவன் பெருமை பேசப்படுகிறது.

5.ஏழு பிரகாரங்கள் உள்ள ஸ்ரீரங்கநாதரை அவன் குலதெய்வமாக அடைந்திருந்தான்.

6.ஆறு தம்பிகளோடு சேர்ந்து ஏழு பேராக இருந்தான். (நின்னோடும் எழுவரானோம்).

7.ஏழு காண்டங்களில் ராமகதை சொல்லப்பட்டிருக்கிறது. ஏழாவது காண்டம் உத்தர காண்டம்.

8.அனுமன் வீணையை வைத்து கொண்டு ஏழு ஸ்வரங்களால் இராமாயணம்   பாடிக்கொண்டிருக்கிறார்.

 ஏன் சித்திரையில் ஸ்ரீ ராமநவமி?

ஸ்ரீராமநவமி ஆனது சித்திரை மாதத்தில் வருகின்றது. இராமபிரான் அவதாரம் செய்தது மட்டுமல்ல பட்டாபிஷேகம் செய்த மாதம் சித்திரை மாதம்.  சித்திரை மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் கரந்து எங்கும் பரந்து உளன் என்பது போல் எல்லா இடத்திலும் வியாபித்து உள்ளவன் என்று பொருள். நிறைந்த ஒளியை உடையவன் என்று பொருள். தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். எனவே ராமபிரான், விஷ்ணு மாதத்தில், மேஷத்தில், நவகிரக தலைவன் சூரியன் அதி உச்சத்தில் இருந்த போது, அவதரித்தான்.

வசந்த ருதுவும் ராம நவமியும்

பகவான் கீதையில், 

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |

மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||

சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமமாகவும், சந்தஸ்களில் நான் காயத்ரியாகவும், மாதங்களில் நான் மார்கழியாகவும், பருவங்களில் நான் இளவேனில் எனப்படும் வசந்த காலமாகவும் இருக்கிறேன் என்கிறான். வசந்த ருது வருஷத்தில் முதல் ருது. அதில் முதல் மாதம் சித்திரை மாதம் என்பதால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு.

ஸ்ரீ ராம நவமியில் ராம நாமம் சொல்லுங்கள்

சித்திரை மாதத்தில் ஸ்ரீராமநவமி உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமி வேறு. ஸ்ரீ ராமாயணம் வேறு அல்ல. ஸ்ரீ ராமாயணத்தில் ஒரு சில சுலோகங்களையாவது நாம் அன்றைய தினம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீராம ஜெயத்தை தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். ராமநாமத்தை கோடிமுறை எழுதுவதற்கு ‘‘ராம கோடி’’ என்று பெயர். தினமும் நீராடியவுடன் பக்தியுடன் ராமநாமத்தை எழுத வேண்டும். தினமும் ஆயிரம் முறை இதை எழுதினால், 30 ஆண்டுகளில் இந்த எண்ணம் பூர்த்தியாகிவிடும். இப்படி எழுதிய நோட்டுக்களை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி ராமநாமம் எழுதி பூஜித்தால் அந்த குடும்பத்தின் இருபத்தி ஒரு தலை முறை புண்ணிய பலத்தோடு வாழும்.

மூன்று முறை சொன்னால் சகஸ்ர முறை சொன்ன பலனா?

அற்புத சக்தி பொருந்திய இந்த மந்திரத்தின் மேன்மையை பரமேஸ்வரனே பார்வதிதேவிக்குச் சொல்வதாக விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வருகிறது. ‘‘ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே’’ என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.  எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. ‘‘ர’’ என்ற எழுத் துக்கு எண் 2ம், ‘‘ம’’ என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே சுலோகத் தில் ‘‘ராம’’ என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

அதாவது 2X5 2x5 2x5. எறால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம். அதனால்தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும். இதை வேறு விதமாகச் சொல்லலாம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 04.04.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்