அகத்திக் கீரைக்கும் துவாதசிக்கும் என்ன தொடர்பு? / கேள்வி - பதில்

 

துவாதசி அன்று அகத்திக்கீரை உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன்படி, துவாதசி அன்று அகத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் சிலரையும் பார்த்து இருக்கிறேன். அகத்திக் கீரைக்கும் துவாதசிக்கும் என்ன தொடர்பு?

 - மத்வ பிரசாத், சென்னை.

ஆரோக்கியம்! ஆரோக்கியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தகவல் இது. ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு ஓய்வு கொடுத்து, மெயின்டனன்ஸ் -பராமரிப்பு என்ற பெயரில் அந்த இயந்திரங்களைத் தூய்மை செய்து, அந்த இயந்திரங்களை நல்லமுறையில் செயல்பட வைக்கும் வழக்கம், இன்றும் பல பெரும்பெரும் ஆலைகளில் உண்டு. 

அதுபோல, நாக்கு ருசிக்கு வசப்பட்டு கண்டதை கண்ட இடங்களில் தின்றுதின்று வயிறு கெட்டுப்போய், உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போன நம்மைக் காப்பாற்றவே, அந்த துவாதசி அகத்திக் கீரை விஷயம். 

ஏகாதசி அன்று முழுமையாக உபவாசம் (உண்ணாமல்) இருந்து, ஏகாதசி விரதத்தில் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கிறோம். வயிற்றில் எதுவும் இருக்காது. மறுநாள் துவாதசி அன்று உணவில் அகத்திக் கீரையைச் சேர்த்துக் கொள்வோம். காலியான வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொன்று, அவற்றை வெளியேற்றும் சக்தி அகத்திக் கீரைக்கு உண்டு. 


மேலும், குடல் புண்ணை ஆற்றி, ரத்தத்தைத் தூய்மை செய்யும் சக்தியும் அகத்திக் கீரைக்கு உண்டு. ஏகாதசி அன்று உபவாசம் இருந்ததால், காலியாக இருக்கும் வயிற்றுக் குடல் புண்ணை ஆற்றி, ரத்த சுத்தியையும் அதிவிரைவாகத் தரும் சக்தி அகத்திக்கீரைக்கு உண்டு. அதன் காரணமாகவே துவாதசி அன்று அகத்திக்கீரை சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ADVT


-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மிகத்துடன் ஆரோக்கியமும் கலந்தது இது. மாதம் இருமுறை வரும் இரு ஏகாதசியிலும் விரதம் இருந்து, மறுநாள் துவாதசி அன்று இவ்வாறு அகத்திக்கீரை சேர்த்துக் கொண்டால் போதும். அதைவிட்டு, உடல் நலத்திற்காகத் தினந்தோறும் அகத்திக்கீரை சேர்த்துக் கொள்கிறேன் என்று செய்யக்கூடாது. 

ரத்தத்தைத் தூய்மை செய்யும் அகத்திக்கீரையே, அளவிற்கு அதிகமாகப் போனால், ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து பலம் இழக்க வைத்து விடும். அளவோடு இருப்போம். வளமோடு வாழ்வோம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 21.05.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்