குஹ்ய பாஷையில் (ரகசியமாக) வேதவியாசர் சொன்னது என்ன? / சிறப்பு கட்டுரை
மஹாபாரதத்தில் வேதவியாசர் மேலே குறிபிட்ட ஐந்தையும் பவித்திரமான வஸ்துக்கள் என்று சொல்லியிருக்கிறார்.
உச்சிஷ்டம் சிவநிர்மால்யம் வமனம் ஸவகர்படம்
காகவிஷ்டாதே பஞ்சைதே பவித்ராதி மனோஹரா
அதாவது, ஐந்து பவித்திரமான வஸ்துக்கள்:
1. எச்சில்
2. சிவநிர்மால்யம்
3. வாந்தி
4. சவத்தின் மேல் விரிக்கும் போர்வை
5. காக்கையின் மலத்தினாலே விளைந்த ஒன்று
இந்த ஸ்லோகத்திற்கு இப்படி ஒரு பொருளா..?
அபவித்திரமான பொருட்கள்:
நிஷித்தமான (சேர்க்ககூடாத) இந்த பொருட்களை வேதவியாசர் எப்படி பவித்திரமான பொருட்கள் என்று சொல்லியிருப்பார்? சொல்லப்பட்ட இந்த ஐந்து வஸ்துக்களும் அனைவரும் ஒதுக்கி வைத்துள்ளவை. சமஸ்கிருதத்தில் அப்படியே மொழி பெயர்த்தால், இவை விரோதத்திற்கு உண்டான பொருட்கள். நாம் சொல்வதற்கும் இதன் அர்த்தத்தையும் பார்த்தால் துளிக்கூட சம்பந்தம் இல்லை..!
வேதவியாசர், சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம்.
``வியாஸாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே’’
18 புராணங்களையும் உபபுராணங்களையும் ஸ்ரீமத் பாகவதம் முதலியானவைகளையும் ரசனை செய்து பாமரர்களுக்கும், ஸ்திரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க, ஐந்தாவது வேதமாக மஹாபாரதத்தை ரசனை செய்கிறார்.
வேதங்களில் இருக்கும் சப்தங்களுக்கு குறைந்த பட்சம் மூன்று அர்த்தங்கள் உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள ஸ்லோகத்திற்கு குறைந்த பட்சம் பத்து அர்த்தங்கள் உண்டு. அந்த மஹாபாரதத்தில் அங்கம் வகிக்கின்ற விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ஒவ்வொரு நாமத்திற்கும் குறைந்தபட்சம் நூறு அர்த்தம் உண்டு.
ஆனந்த தீர்த்த பகவத் பாதாச்சாரியார் விஸ்வ என்ற நாமத்திற்கு 100 அர்த்தங்களை காண்பித்து இருக்கிறார் என்பதை அவருடைய சரித்திரத்தில் காண்கிறோம்.
தான் எழுதும் வேகத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்ற விக்னேஸ்வரரின் வேண்டுதல் படி., வேதவியாசர் சொல்லச்சொல்ல விக்னேஸ்வரர் தன் கொம்பை உடைத்து மஹாபாரதத்தை அவருடைய வேகத்திற்கு எழுதினார்.
அப்போது வேதவியாசர் ஒரு நிர்பந்தம் வைக்கிறார். அதாவது அர்த்தம் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்பதே. ஆனால் விக்னேஸ்வரனுக்கு சில இடங்களில் அர்த்தங்கள் புரியவில்லை. ஏனென்றால் அது சில இடங்களில் குஹ்ய பாஷைகளில் சொல்லப் சொல்லப்பட்டிருந்தது. அதாவது மறைமுகமாக சிலவற்றை வைத்து சொல்லப்பட்டது தான் இந்த ஸ்லோகம்.
அப்போது விக்னேஸ்வரர் பிரார்த்தித்ததன் பேரில் வேதவ்யாசர் அவருக்கு அந்த அர்த்தத்தை தெளிவுபடுத்துகிறார்..!
ஐந்து பவித்ரமான வஸ்துக்களை பார்க்கலாம்..!
முதலாவதாக எச்சில்:
எச்சில் வஸ்துவான ஒன்று ஸ்ரீமந் நாராயணனுக்கும்., மஹாலக்ஷ்மிக்கும்., தேவதைகளுக்கும்., முக்ய பிராணருக்கும் அபிஷேகம் ஆக பயன்படுகிறது. அதுதான் பசுவினுடைய பால்., அதாவது க்ஷீரம். அபிஷேகத்திற்கு எப்படி இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அது பசுவினுடைய பால் ஆக இருக்க வேண்டும்.
அதுவும் உயிருடன் உள்ள கன்றுடன் கூடிய பசு ஆக இருக்க வேண்டும். (கோபூஜை கூட கன்றுடன் கூடிய பசுவுக்கு செய்வதே சிரேஷ்டம்) மேலும் கன்று பால் குடித்தவுடன் தான் பாலைக் கறக்க வேண்டும்.
அதாவது கன்று குடித்தவுடன்., பசுவின் மடியை அலம்பாமல் அந்த எச்சிலை (உச்சிஷ்டத்தை) துடைக்காமல் அப்படியே பால் கறக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த எச்சிலை அலம்பாமல் கறக்கும் பாலைத் தான் ஸ்ரீமன் நாராயணன்., மஹாலக்ஷ்மி., தேவதைகள் எல்லோரும் ஸ்வீகாரம் செய்கிறார்கள். அந்தக் கன்று எச்சில் செய்த பால்தான் தேவதைகளுக்கு அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது. அதையேதான் வேதவியாசர் உச்சிஷ்டம் என்று எச்சிலை பவித்திரமான வஸ்துவாக சொல்லியுள்ளார்.
இரண்டாவது சிவ நிர்மால்யம்:
பொதுவாக வைஷ்ணவர்கள் சிவ நிர்மால்யத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அனைவருமே பவித்திரமாக தலையில் தெளித்துக் கொள்ளும் ஒரு சிவ நிர்மால்யம் உள்ளது. அது என்னவென்றால்., சகலலோக பாவங்களையும் தீர்க்கக்கூடிய கங்காஜலம். எந்த ஒரு ஜீவோத்தமரான பிரம்மதேவர் தன் கமண்டலத்தில் இருந்து ஸர்வோத்தமனான விஷ்ணுவின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்தாரோ அந்த தீர்த்தம் .
அதை சிவன் தன் சிரமேற்கொண்டு தரிக்கிறார். அவருடைய சிரஸிலிருந்து வரும் அந்த கங்கா ஜலத்தை அனைத்து வைஷ்ணவர்களும் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த தீர்த்தத்தை (கங்காஜலம்) பவித்ரமான வஸ்துவாக ஸ்வீகாரம் செய்கிறார்கள்.
மூன்றாவதாக பவித்திரமான வஸ்துவாக சொல்லப்பட்டது வாந்தி:
அது எப்படி பவித்திரம் ஆகும்.? தேவதைகள் அபிஷேகத்திற்கு., ஆயுர்வேதங்களில் ஔஷதமாக சொல்லப்பட்டிருக்கும் மது., அதாவது தேன். தேனீக்கள் மகரந்த மலர்களில் உள்ள தேனை தன் வாயினால் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வந்து தன்னுடைய கூட்டிற்கு வந்து வாயில் உள்ளதை கக்கி வாந்தி எடுத்து சேகரிக்கிறது.
அப்படி தேனீக்கள் வாந்தி எடுத்த தேன்தான் தேவதைகளின் அபிஷேகத்திற்கு பவித்திரமான வஸ்துவாக உள்ளது.
நான்காவதாக சொல்லப்படும் பவித்ரமான வஸ்து ஸவகர்படம்:
அதாவது சவத்தின் மேல் போர்த்திருக்கும் போர்வை. அது எப்படி சவத்தை தொட்டாலே தீட்டு அது எப்படி மடி ஆகும்.? எப்பேர்ப்பட்ட பாந்தவ்யமானவர் இறந்தாலும் ஒரே நாள், மூன்று நாள், பத்து நாள் என்று சூதகம் உண்டு. அது என்னவென்று பார்த்தால் பட்டு வஸ்திரம் என்கிறார் வேதவியாசர். அதாவது பட்டுப் பூச்சிகள் கூடுகளில் உள்ள போதே அதை எடுத்துக் கொண்டு வந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு அதிலிருந்து எடுக்கப்படும் நூலை வைத்து தயாரிக்கப்படுவது பட்டு வஸ்திரம்.
அதாவது சவதத்தின் மேலிருந்து எடுத்த போர்வை ஆன இது மடி என்பது மட்டுமல்ல மஹாவிஷ்ணுவுக்கும் பிடித்த பீதாம்பரம். மேலும், மான் தோல் கிருஷ்ணாஞ்சனமும்கூட சவத்தின் மேல் போர்த்திய போர்வை. ஜப தப அனுஷ்டானங்கள் மேற்கொள்பவர்களுக்கு மான் தோல் ஆஸனம் மிகச் சிறந்தது. இதுவே நான்காவதாக சொல்லப்பட்ட ஸவகர்படம் என்னும் பவித்திரமான வஸ்து.
ஐந்தாவதாக பவித்திரமான வஸ்து என்று சொல்லப்பட்டது காகவிஷ்டா:
அதாவது காக்கையின் மலத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வஸ்து. அதாவது காக்கையின் மலத்தினால் வளர்ந்த, கோவில் கோபுரங்களில் மேலே உள்ள அஸ்வத்த செடி. அதாவது காக்கையானது பழங்களை தின்று அந்த விதைகளை மலமாக கழிக்கும்போது மண்ணிலும்., கோபுரங்களிலும் அது விழும் போது அவை அஸ்வத்த செடியாக வளர்கிறது. அதாவது அரச மரமாக வளர்கிறது .
அரச மரமானது பகவானின் விபூதிகளில் முக்கியமானது. பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார், மரங்களிலே அஸ்வத்த மரம் தன்னுடைய விபூதிகளில் முக்கியமானது என்று. ஏனென்றால் அந்த அஸ்வத்த மரத்திலே மும்மூர்த்திகளின் சொரூபம் உள்ளது என்று பிரார்த்தனை செய்கிறோம். அதுவே மும்மூர்த்திகளின் சன்னிதானமான விருக்ஷ ராஜா.
ஸ்ரீமுஷ்ணத்தில் வராக ரூபி பரமாத்மா அந்த அஸ்வத்த மர ரூபத்திலே இருக்கிறார். அந்த அஸ்வத்த மரமே காகத்தின் மலத்தில் இருந்து உருவானது., பவித்ரமானது என்று வேதவியாசர் கூறுகிறார். காக்கையினுடைய மலத்திலிருந்து வளர்ந்ததானாலும் அஸ்வத்த விருக்ஷம் பவித்ரம் ஆனது என்று சொல்கிறார்.
இவை ஐந்தையும் வேதவியாசர் பவித்ரமான வஸ்துக்கள் என்று சொல்கிறார். இவைகளை மேலோட்டமாகப் பார்த்தால் நமக்கு அர்த்தம் புரியாது. குஹ்ய பாஷையில் (ரகசியமாக) வேதவியாசர் சொல்லியுள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால் விருத்தமாக., எதிர்மறையாகத் தோன்றுகிறது. ஆனால் உள்நோக்கி அறிந்து பார்த்தால் விசேஷமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறார் மஹாவிஷ்ணுவின் அவதாரமான வேதவியாசர்.
இப்பேர்ப்பட்ட விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் குருவின் அனுகிரஹத்தால்., வேத வியாசர் மற்றும் ஸ்ரீஹரியின் அனுகிரஹத்தினால் மட்டுமே சாத்தியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக