கோதூளி முகூர்த்தத்திற்கு இத்தனை சிறப்பா! / கேள்வி - பதில்

கோதூளி முகூர்த்தம் என்றால் என்ன? தெளிவுபடுத்துங்கள்

 - ப.வெங்கட்ராமன், சேலம்.

தோஷங்கள் ஏதுமில்லாத எந்தக் குறையுமில்லாத முழுமையான நல்ல நேரத்தினை ``கோதூளி முகூர்த்தம்’’ என்பார்கள். இந்த நேரம் ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு முறை சம்பவிக்கும். கோ என்றால் பசு. பசுமாடுகள் கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும்போது அவற்றின் பாதம் பட்டு தூசு பறக்கும். இந்த தூசு ஆனது சகல தோஷங்களையும் போக்கவல்லது. பூமியின் மீது விழும் நவகிரஹங்களின் பார்வைக்கேற்ப முகூர்த்த லக்னத்தின் நிறை குறைகள் கணக்கிடப்படுகின்றன. 

 அசுபகிரஹங்களின் சேர்க்கை மற்றும் பார்வை விழும் நேரமாக இருந்தாலும் அந்த கிரஹங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினை பசுமாட்டின் குளம்பில் இருந்து புறப்படும் தூசு ஆனது கிரஹித்துக் கொள்ளும். 


எனவே கோதூளி முகூர்த்த நேரத்தில் செய்யப்படும் நிகழ்ச்சியானது கிரஹங்களின் தாக்கம் ஏதுமின்றி நல்லபடியான முறையில் நடந்தேறுவதோடு நற்பலனையும் பெற்றுத் தரும். ஆக, காலை நேரத்தில் பசுமாடுகள் கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும்போதும் சரி, மாலை நேரத்தில் மேய்ச்சல் முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போதும் சரி, அவற்றின் கால் குளம்புகள் பட்டு உண்டாகும் தூசு அந்தப்பகுதியை கிரஹங்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுவதோடு அந்த இடத்தினையும் புனிதப்படுத்துகிறது, அந்த குறிப்பிட்ட நேரத்தினை கோதூளி லக்னம் அல்லது கோதூளி முகூர்த்தம் என்று சொல்வார்கள். 

தோராயமாக காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளாகவும் மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள்ளாகவும் என்று நாம் குறித்துக் கொள்ளலாம்.


ஆனால், இந்த விதியானது உண்மையாகவே மாடுகள் கூட்டமாக மேய்ச்சலுக்கு செல்லும் மண்ணால் ஆன சாலை உள்ள இடத்திற்கு மட்டுமே பொருந்தும். மாறாக மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லாத நகர்ப்புறங்களுக்கும் தூசு கிளம்பாத தார் சாலை, சிமெண்ட் சாலை உள்ள பகுதிகளுக்கும் பொருந்தாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 17.05.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்