கும்பகோணம்!
ஏராளமான கோயில்களும், கல்விமான்களும், அன்பு மயமான மனிதர்களாலும்
நிறைந்திருந்தது. அனைவரும் அவரவர் ஆலயங்களுக்குச் சென்று, பக்தி மயமான
வழிபாடு செய்து, அடுத்தவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியைப் பரிவோடு
செய்து வந்தார்கள். கல்விமான்களோ, தங்களுக்குத் தெரிந்ததை
அடுத்தவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து, அவர்களையும் தெளிவு பெறச் செய்து
உயர்த்தி வந்தார்கள்.
அமைதி, அன்பு, உற்சாகம் என எல்லோரும் வாழ்ந்து
கொண்டிருந்த வேளையில், தொலைதூர நாட்டிலிருந்து பெரும்புலவர் ஒருவர்,
கும்பகோணத்திற்கு வந்தார்.
வந்தவர், புலமையில் மட்டுமல்ல; விசித்திரமான
மந்திர சக்திகளிலும் தேர்ச்சி பெற்றவர். அதன் காரணமாக மற்ற கல்விமான்களை
வலுவில் வாதுக்கழைத்து, அவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி, அவர்களின்
உடைமைகளையும் கவர்ந்து கொள்வார்.
அப்படிப்பட்ட பண்டிதர்
கும்பகோணத்திற்கு வந்து, அங்கும் தன் கை வரிசையைக் காண்பிக்கத்
தொடங்கினார். கும்பகோணத்தில் இருந்த கல்விமான்கள் அனைவரும் அந்தப்
புலவரிடம் தோற்று அவமானப்பட்டு, தங்கள் உடைமைகளையெல்லாம் இழந்தார்கள்.
அவர்களை எல்லாம் வெற்றிகொண்ட புலவரோ, அனைவரையும் அடக்கி - ஒடுக்கி,
கும்பகோணத்தில் இருக்கும் கோயில்கள் அனைத்தின் அதிகாரங்களையும் தன்
வசப்படுத்திக் கொண்டார். கும்பகோணமே தத்தளித்தது.
அனைவர் மனங்களிலும்
இருள் சூழ்ந்திருந்த அவ்வேளை, ஒரு சிலர் ஒன்று சேர்ந்து தஞ்சைக்குச்
சென்றார்கள். காரணம்? அப்போது தஞ்சையில், ஸ்ரீ விஜயீந்திர ஸ்வாமிகள் என்ற
மகான், தம் குருநாதருடன் தங்கியிருந்தார்.
அவர்களைப் பார்த்து
முறையிடுவதற்காகவே, கும்பகோணத்தில் இருந்து ஒரு சிலர் தஞ்சைக்குச்
சென்றார்கள். போனவர்கள் ஸ்ரீ விஜயீந்திர ஸ்வாமிகளைத் தரிசித்து வணங்கிக்
கும்பகோணத்தில் நிலவி வந்த அசாதாரணமான நிலையை விவரித்து,
‘‘சுவாமி!
தாங்கள் தயவுசெய்து கும்பகோணத்திற்கு வந்து, அந்தப் பண்டிதரை வென்று
நற்புத்தி புகட்டி, கும்பகோணத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என வேண்டினார்கள்.
(இனி ஸ்ரீ விஜயீந்திர சுவாமிகளை ‘சுவாமிகள்' என்ற பொதுப் பெயரிலேயே
பார்க்கலாம்) வந்தவர்கள் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த
சுவாமிகள், பதிலேதும் சொல்லவில்லை. மௌனமாகவே இருந்தார். ஏதோ சிந்தனையில்
ஆழ்ந்தார். முறையிட்டவர்களும், என்ன செய்வதென்று தோன்றாமல் குழம்பினார்கள்.
அப்போது குருநாதர், ‘‘உத்தம சிஷ்யரே! என்ன யோஜனை செய்கிறீர்கள்?
புறப்படுங்கள் கும்பகோணத்திற்கு. வெற்றி உம்முடையதே’’ என்று உற்சாகத்துடன்
சொல்லி ஆசி கூறினார். சுவாமிகள் மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது
ஸ்ரீ மூலராமர், ஸ்ரீமத்வாசாரியார், ஸ்ரீ வியாசராஜர், ஆகியோர்
சுவாமிகளுக்குத் தரிசனம் தந்து, பயம் போக்கி உற்சாகப் படுத்தினார்கள்.
அன்றிரவு சுவாமிகளின் கனவில், கும்பகோணத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை
ஸ்ரீ மங்களாம்பிகை காட்சி தந்து,
‘‘குழந்தாய்! கவலைப்படாதே! உனக்கு
நான் பின் பலமாக இருப்பேன். வாதத்தில் உனக்கே வெற்றி கிட்டும்’’ என்று
ஆசீர்வதித்துத் தன் கழுத்தில் இருந்த சண்பகப் பூமாலையைக் கழற்றி
சுவாமிகளின் கழுத்தில் அணிவித்தாள். கனவு கலைந்தது. மெய் மறந்த
நிலையிலிருந்த சுவாமிகள், மேலும் ஆச்சரியமும் ஆனந்தமும் அலைமோதும் விதமாகத்
தன் கழுத்தில் உண்மையாகவே மாலை இருப்பதைக் கண்டார். வெகு வேகமாகக்
குருநாதர் இருந்த இடத்திற்கு ஓடினார். அதற்காகவே காத்திருந்ததைப் போலக்
குருநாதர்,
‘‘பிரிய சீடரே! ஸ்ரீ மங்களாம்பாள் அருள் பாலித்திருக்கிறாள்
என்பதைச் சொல்ல வந்தீர்களோ! அந்தக் காட்சியை நானே பார்த்து ஆனந்தப் பட்டுக்
கொண்டிருந்தேன். நல்லது! இனிமேல் என்ன தயக்கம்? சென்று வாருங்கள்
கும்பகோணத்திற்கு!’’ என்றார். குருநாதர் ஆசியுடன் புறப்பட்ட சுவாமிகள்,
கும்பகோணம் அடைந்தார். சுவாமிகளுக்குச் சகல மரியாதைகளுடன் மிகுந்த
விமரிசையாகப் பட்டணப் பிரவேசம் எனும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வு
முடிந்ததும் சுவாமிகளைத் தகுந்ததோர் இடத்தில் தங்க வைத்தார்கள்.
அதையெல்லாம் பார்த்துப் பொருமிக் கொண்டிருந்த - பொறாமை கொண்டிருந்த
(வாதத்தில் வல்ல) புலவர், தாமே சுவாமிகளைத் தேடிவந்து,
‘‘நீர் வாதம்
செய்ய வந்திருக்கிறீர் என்பது தெரியும். நாளைக்கே வாதம் நடக்க வேண்டும்’’
என்றார். சுவாமிகள் ஒப்புக் கொண்டார். மறுநாள்... குறிப்பிட்ட நேரத்திற்கு
முன்பே சுவாமிகள் பல்லக்கில் புறப்பட்டார். வழியில், வாதம் செய்ய வந்த
புலவர் பல்லக்கில் எதிர்ப் பட்டார். சுவாமிகளைப் பார்த்ததும் பல்லக்கில்
இருந்தபடியே அலட்சியமாக உற்றுப்பார்த்த புலவர், பல்லக்கில் இருந்து
பக்கத்தில் இருந்த சுவர்மேல் தாவிக்குதித்தார். அதே விநாடியில் சுவர் நகர
ஆரம்பித்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். கூடவே பயப்படவும்
செய்தார்கள். ஆனால் சுவாமிகளோ, பல்லக்கைக் கீழே வைக்கச் சொன்னார். பல்லக்கு
கீழே வைக்கப்பட்டதும்,
‘‘சற்று தள்ளி நில்லுங்கள்!’’ என்று பல்லக்கு
சுமந்து வந்தவர்களைச் சற்று தள்ளி நிற்கச் சொன்னார். அதை ஏற்று, பல்லக்கு
சுமந்து வந்தவர்கள் விலகி நின்றார்கள். அதே விநாடியில், சுவாமிகள் இருந்த
பல்லக்கு விமானம் போல் ஆகாயத்தில் பறந்தது. நேரே கும்பேசுவர சுவாமி ஆலய
வாசலில் இறங்கியது. அதைக் கண்ட மக்களோ, மேலும் வியந்து பயம் தெளிந்து,
‘‘அப்பாடா!
இவர், அந்த வம்பு பிடித்த புலவனை வென்று விடுவார். நமக்கெல்லாம்
விடிவுகாலம் பிறக்கத் தொடங்கி விட்டது’’ என்று வாய்விட்டுச் சொல்லவும்
செய்தார்கள்.போட்டிக்கான சபை தயாரானது. பண்டிதர்கள், பாமரர்கள்,
அதிகாரிகள், ஊர்ப் பெரியவர்கள் எனப்பலரும் மிகுந்த உற்சாகத்துடன்
குவிந்திருந்தார்கள். புலவர், ஆணவத்தோடு அனைவரையும் அலட்சியமாகப்
பார்த்தபடி, கம்பீரமாக நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்தார்.
சுவாமிகளோ அமைதியாக ஆலயத்திற்குள் நுழைந்து ஸ்ரீ ஆதி கும்பேசுவரர் - அன்னை
ஸ்ரீ மங்களாம்பிகை சந்நதிகளுக்குச் சென்று, அத்திவ்ய தம்பதிகளைத் துதித்து,
ஆழ்ந்த தியானத்தில் நின்று பிரார்த்தனை செய்து அருள் பெற்று, சபையில்
மிகுந்த வினயமாகப் புன்முறுவலுடன் நுழைந்தார். பார்த்தவர்கள் எல்லாம்,
சுவாமிகளின் தோற்றத்தைப் பாராட்டினார்கள். நடுவர்கள் யார்யார் என்று
தீர்மானித்து, ஒன்பது நாட்கள் விவாதம் நடக்க வேண்டும் என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
தோற்றவர் தன் உடைமைகளையெல்லாம் வென்றவரிடம்
ஒப்படைத்து விட்டு, அவரிடம் சீடராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும்
போடப்பட்டது. இப்படிப்பட்ட நிபந்தனைகளுடன் போட்டி ஏற்பாடானது. இரு
சிங்கங்களைப் போலப் புலவரும் சுவாமிகளும் விவாதங்களைத் தொடங்கினார்கள்.
இருவரும் இணையில்லாத பண்டிதர்கள்.
ஆகவே வேதம், இதிகாசம், புராணங்கள்
முதலான உயர்ந்த நூல்களில் இருந்தும் இதர சாஸ்திரங்களில் இருந்தும்
ஆதாரங்களுடன், ஆணித்தரமாக விவாதம் நடந்தது. சில சமயங்களில் வேடிக்கையாகக்
கூட விவாதம் நடந்தது. நாள்தோறும் சுவாமிகளே வெற்றி பெற்று வந்தார்கள்.
ஒன்பது நாட்கள் முடிந்தன. சுவாமிகளே வெற்றி பெற்றார். கும்பகோண வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். தோற்றுப் போன புலவர்,
‘‘மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் தேவை!’’ என்றார். அவர் ஏதோ, மந்திர - தந்திரங்களைக் கையாளத் தீர்மானித்து விட்டார் போலும். சுவாமிகள்
மறுக்க வில்லை; புலவரின் கோரிக்கையை ஏற்றார். தகவலறிந்து தஞ்சையிலிருந்து,
சுவாமிகளின் குருவான ஸ்ரீ சுரேந்திர தீர்த்தரும், தஞ்சை மன்னர் சிவப்ப
நாயகரும், கும்பகோணத்திற்கு வந்தார்கள். கடைசி நாள் வாதம் தொடங்கும் முன்,
தம் குருநாதருடனும் தஞ்சை மன்னருடனும், அன்னை ஸ்ரீ மங்களாம்பிகை முன்னால்,
சுவாமிகள் நின்று ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். திடீரென்று சுவாமிகளின்
கழுத்தில் மல்லிகைப் பூமாலை காணப்பட்டது. அந்த அதிசயத்தைக் கண்டு, அனைவரும்
வியந்தார்கள். யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை. அப்போது ஸ்ரீ சுரேந்திரர்
தம் சீடரிடம்,
‘‘குழந்தாய்! அன்னை ஸ்ரீமங்களாம்பிகை உன் கண் முன்னால்
தோன்றி, தன் கழுத்தில் அணிந்திருந்த புது மல்லிகை மாலையைக் கழற்றி, உன்
கழுத்தில் அணிவித்ததை நான் கண்ணாரக் கண்டேன்; மகிழ்ந்தேன்.
இனி என்ன
சந்தேகம்? வெற்றி உனக்கே. வா! போகலாம்’’ என்று சொல்ல, மக்கள் மங்கல
முழக்கம் இட்டார்கள். அனைவரும் விவாத அரங்கத்தை அடைந்தார்கள். அன்றைய
விவாதத்தின் முடிவில் சுவாமிகளே வெற்றி பெற்றார். அதை நடுவர் குழு
அறிவித்தார்கள். மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். மன்னர், எல்லை
கடந்த மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் வடித்துக் கைகளைக் கூப்பினார்.
தோற்றுப் போன புலவரோ, ஸ்வாமிகளை வணங்கி, ‘‘சுவாமி! சூரியனுடன் போட்டி
போட்ட மின்மினிப் பூச்சியைப் போல இருக்கிறேன் நான்! எந்த விதத்திலும்
என்னால் உங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. என்னை மன்னியுங்கள்!
மன்னியுங்கள்! நான் பெற்ற வெற்றிகளின் மூலம் அடைந்த செல்வங்கள்,
அதிகாரங்கள், உடைமைப் பொருட்கள் என அனைத்தையும் தங்கள் திருவடிகளில்
சமர்ப்பிக்கிறேன் இப்போதே!’’ என்றார். அதைக் கேட்ட சுவாமிகள், புலவரைப்
பக்கத்தில் அழைத்து, அவருடைய இரு கரங்களையும் அன்போடு பிடித்துக் கொண்டு,
‘‘புலவரே!
நீங்கள் பெரும் பண்டிதர். உங்கள் வாதத்திறமையும் அபாரமானது. நான் உங்களைப்
பெரிதும் மதிக்கிறேன். நீங்கள் கைப்பற்றி வைத்திருக்கிற எங்கள்
கோயில்களின் நிர்வாகத்தையும் அவற்றின் மற்ற உரிமைகளையும் எங்களிடம் தந்தால்
போதும். மற்றபடி, உங்கள் செல்வங்களோ உடைமைகளோ எங்களுக்குத் தேவையில்லை.
மேலும், உங்கள் கொள்கையைக் கை விட்டு, நீங்கள் எனக்குச் சீடராக ஆக
வேண்டியதும் இல்லை’’ என்றார் சுவாமிகள். அதைக் கேட்ட புலவரின் கண்களில்
இருந்து கண்ணீர் பெருகியது;
‘‘சுவாமி! நீங்கள் இமயமலையைப் போல உயர்ந்த
மகான். ஆகாயம்போலப் பரந்து - விரிந்த ஞான பண்டிதர். உங்களிடம் தோற்றுப்
போனதற்காக, நான் வெட்கப்படவில்லை; வெற்றியாகவே கருதுகிறேன். என் உடைமைகள்
ஏதும் வேண்டாம் எனக்கு. என் பூஜைப் பெட்டியை மட்டும் எடுத்துச் செல்ல
அனுமதி கொடுங்கள் எனக்கு! இனி யாரிடமும் வாதம் செய்து அவமானப்படுத்த
மாட்டேன். தங்கள் அனுமதியோடு ஊர் திரும்புகிறேன்’’ என்று வணங்கினார். உடனே
மடத்தைச் சேர்ந்த திவான், ஒரு பெரிய வெள்ளித் தட்டில் விலை உயர்ந்த இரு
சால்வைகள், நினைய சன்மானங்கள் ஆகியவற்றை வைத்து, சுவாமிகள் முன்னால்
வைத்தார்.
முன்னால் வைக்கப் பட்டவற்றிலிருந்து இரு சால்வைகளையும்
எடுத்த சுவாமிகள், மிகுந்த பரிவோடு புலவருக்குப் போர்த்தினார்.
சன்மானங்களையும் வழங்கிப் புலவரை வழியனுப்பி வைத்தார், சுவாமிகள். இறையருள்
பெற்ற மகான்கள், தாங்கள் பெற்ற தெய்வ ஆற்றலைப் பொது நன்மைக்காகவே
உபயோகிப்பார்கள் என்பதை விளக்கும் இந்த வரலாறு, 16-ம் நூற்றாண்டில்
நடந்தது.
நன்றி:பி.என்.பரசுராமன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 23.06.2025

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக