வாராரு வாராரு... அழகர் வாராரு... சப்பரம் ஏறி வாராரு.. நம்ம சங்கடம் தீர்க்க போறாரு.... / திவ்யமாக காட்சிதரும் 108 திவ்ய தேசங்கள்

* தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் ஒன்று. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் அற்புதமானவை. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா”.

* ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர், ‘‘வைகை ஆற்றில் இறங்குதல்’’ அழகர் ஆற்றில் இறங்குவதைக் காணுவதற்கு உலகமெங்கும் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

* வைகை எப்படித் தோன்றியது? என்பதற்கு புராணக்கதை ஒன்று உண்டு. மீனாட்சி அம்மனின் திருமணத்திற்கு வந்த குண்டோதரன் என்ற அசுரன், தாகத்தால் சிவனை வேண்டினான். அப்போது சிவபெருமான், ‘வை...கை' என்று குண்டோதரனுக்கு உத்தரவிட, வைகை பிறந்ததாக புராணங்கள் சொல்லுகின்றன. ஸ்வாரஸ்யமாக இன்னொரு செய்தி. திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் ‘வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் ‘கை'யும் இணைந்து சங்கர நாராயணர்களின் தீர்த்தமாக இருப்பதால் ‘வைகை' என்று பெயர்.

* அழகர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு வைணவத்தில் திருமாலிருஞ்சோலை என்கின்ற திருநாமம் உண்டு. சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகி கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டும் இம்மலையைப் பற்றிய செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களில் மிகுதியாக உண்டு.

* அழகரின் திருமேனி அபரஞ்சி தங்கம் என்கின்ற சுத்தமான தங்கத்தால் ஆன திருமேனி. இங்கு மூலவரும் உற்சவரும் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி தருகின்றார்கள். இங்குள்ள பெருமாள் கையில் உள்ள சக்கரம் பிரயோக சக்கரம். இங்குள்ள தாயார் சுந்தரவல்லி என்ற திருநாமத்தோடு காட்சி தருகின்றார்.


* மதுரையைச் சுற்றி 3 அழகர்கள் இருக்கிறார்கள். ஒன்று மாலிருஞ்சோலை அழகர். இன்னொன்று திருமோகூர் அழகர். மதுரையிலேயே இருக்கக்கூடிய கூடல் அழகர். திருமாலிருஞ்சோலை அழகருக்கு கள்ளழகர் என்று பெயர். 

* அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன்கோயில் உள்ளது.

* பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து 1 கி. மீ தொலைவில் அமைந்த ராக்காயி அம்மன் நூபுரகங்கை நீரூற்று உள்ளது. எம்பெருமான் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தான். நான்முகன், தன்னுடைய கமண்டல நீரால் எம்பெருமானின் திருவடிகளை அபிஷேகம் செய்தான். அந்தக் கமண்டல நீரானது எம்பெருமானின் திருவடியில் அணிந்திருந்த பொற்சிலம்புகளின்மீது பட்டு சிதறி பெருகி ஜீவநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

* திருமாலிருஞ்சோலையில் ஆயிரக்கணக்கான தீர்த்தங்கள் இருந்தாலும் அழகர் நீராட்டம் காண நூபுர கங்கை தீர்த்தம்தான் வேண்டும். சகலநோய்களையும் தீர்க்கக்கூடிய அற்புதமான மூலிகைத் தீர்த்தம் இது.

* கற்கண்டு போன்ற சுவையுடன் இருக்கக்கூடிய இந்த தீர்த்தம் தவிர வேறு தீர்த்தத்தால் அழகருக்குத் திருமஞ்சனம் செய்தால், அவருடைய மேனி கறுத்து விடுகிறது.


* அழகர்மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்புத் தோசை தயாரிக்கப்படும்.

* சித்திரைத் திருவிழாவில், கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலை தடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார்.

* திருமலை மன்னர் செய்த ஏற்பாடு, சித்திரை உற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி அம்மனின் உற்சவம் மாசி மாதத்திலும் நடைபெற்றது மீனாட்சி அம்மன் உற்சவத்தின் மிக முக்கியமான நிகழ்வு திருத்தேர் மாசிமாதத்தில் நடைபெற்றது. வெவ்வேறு மாதங்களில் நடைபெறும் இந்த விழா ஒரே மாதத்தில் நடைபெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று திருமலை நாயக்கர் சித்திரை விழாவாக இரண்டு ஆலயங்களில் விழாக்களையும் ஒன்றாக ஆக்கினார்.

* அழகர்மலையில் இருந்து கள்ளழகர், கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கிச் சேலை கட்டி மதுரைக்கு பல்லாக்கில் புறப்படுகிறார். அதிர்வேட்டு முழங்க அழகர் கிளம்புவார். இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறும்.

* கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அழகர் ஆற்றுக்குச் செல்லும்பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். தல்லாகுளத்தை விட்டு தங்கக்குதிரை கள்ளழகர் கிளம்பியதுமே வைகை ஆற்றில் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும்.


* வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் போது வரும் ``கோவிந்தா... கோவிந்தா..'' என்ற சரணகோஷமும் வேட்டுச்சத்தமும் விண்ணை பிளக்கும். அழகர் ஆற்றில் இறங்கும் போது மழை பெய்வது போல தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள்.

* வைகையில் இறங்கிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ADVT


-----------------------------------------------------------------------------------------------------------------------------
* வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் செய்துக் கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார்.

* தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கு தன் வருகைக்காக தவம் செய்து கொண்டிருக்கும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.

* பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். அங்கு தங்குகிறார்.


* இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். வழியெங்கும் மக்கள், சுக்கு வெல்லமும் படைப்பார்கள்.

* மோகனாவதாரத்திலும் இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அழகர் கோயிலுக்குத் திரும்புகிறார்.

* மலையை விட்டு இறங்கும் அழகரை, எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டிருப்பார்கள்.

* காரணம், மறுபடியும் தங்களைத் தேடிவரும் அழகரை காண இன்னொரு வருடம் காத்திருக்க வேண்டுமே... கண்ட காட்சிகள் கண்களை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாது.

 - நன்றி:கோகுலாச்சாரி
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 12.06.2025   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
----------------------------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்