பகவானை வேண்டுவது வீண்போகாது! / சிறப்பு கட்டுரை
விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திரபந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாகக் கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று, அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள்.
தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன்
திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத்
தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது.
ஆனால், காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை.
காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும்
துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த
முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராடச் சென்றார். அப்போது ஈரமாக
இருந்த படிகள் வழுக்கிவிடவே, தவறிப் போய்த் தண்ணீரில் விழுந்தார் முனிவர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரு கைகளையும் உயர்த்தி உதவிக்காக
வேண்டினார்.
அச்சமயம், அந்த வழியாகச் சென்ற க்ஷத்திரபந்துவுக்கு இந்த
முனிவரைக் காக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. அதுவரை எந்த நற்செயலும்
செய்திராத அந்த இம்சை இளவரசன், அன்று குளத்தில் குதித்தான். முனிவரைக்
காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
மிகவும் களைப்பாக இருப்பதாக முனிவர்
சொல்ல, அவர் உண்பதற்குப் பழங்களைப் பறித்து வந்து கொடுத்தான்
க்ஷத்திரபந்து. அவரது கால்களைப் பிடித்துவிட்டான். அவனது பணிவிடைகளைக்
கண்டு மிகவும் மனம்மகிழ்ந்த முனிவர், “யார் நீ?” என்று அவனைப் பார்த்துக்
கேட்டார். எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி தன் முழு வரலாற்றையும்
கூறினான்.
“க்ஷத்திரபந்து! கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரத்தை
உபதேசிக்கிறேன். அது உன் பாபங்கள் அனைத்தையும் போக்கி உன்னைத் தூய்மைப்
படுத்தும்!” என்று சொன்ன முனிவர், ‘கோவிந்தா’ என்ற திருமாலின் திருநாமத்தை
அவனுக்கு உபதேசித்தார்.
“நீ எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக்
கொண்டிரு! உனக்கு நல்லது நடக்கும்!” என்று சொன்னார். க்ஷத்திரபந்துவால்
நம்ப முடியவில்லை. “இவ்வளவு பாபங்கள் செய்த எனக்கு வெறும் கோவிந்தா என்று
சொல்வதால் எப்படி நன்மை உண்டாகும்?” என்று கேட்டான். அப்போது முனிவர்,
“திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் என்றும்
வீண்போவதில்லை. நாம் சிறிதளவு முயற்சியை அவனை நோக்கி முன்னெடுத்தாலே
போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான்! நீ கோவிந்த நாமத்தைச் சொல்!”
என்றார்.
க்ஷத்திரபந்துவும் மனம் திருந்தியவனாக எப்போதும் கோவிந்த
நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கினான். அதன் பயனாக அவனது பாபங்கள் யாவும் மெல்ல
மெல்ல தீயினில் தூசாயின. அடுத்த பிறவியில் பக்தர்கள் நிறைந்த ஒரு நல்ல
குடும்பத்தில் பிறந்து வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றான்.
இறைவனின்
திருவடிகளில் சரணாகதி செய்து அவனை அடைந்து அவனுக்குத் தொண்டு செய்வதே
அனைத்து வேதங்களின் சாரம் என்பதை அறிந்து கொண்டான். சரணாகதி செய்தான்.
அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியும் அடைந்தான்.
க்ஷத்திரபந்து
வைகுந்தத்தை அடைந்தபோது, அவனுக்கு முற்பிறவியில் உபதேசம் செய்த அந்த
முனிவர் அவனை வரவேற்றார். “நான் சொன்னது நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.
“ஆம்! திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண் போகாது
என்று தாங்கள் கூறினீர்கள். அதை அனுபவத்தில் உணர்ந்து விட்டேன். கோவிந்தா
கோவிந்தா என்று அவன் திருநாமங்களை உச்சரித்தேன். அது வீண்போகவில்லை. அந்த
நாம உச்சாரணம் சரணாகதியில் அடியேனைக் கொண்டு சேர்த்து விட்டது.
அந்த
சரணாகதியின் பயனாக எம்பெருமான் அடியேனுக்கு முக்தியும் அளித்து விட்டான்!”
என்றான் க்ஷத்திரபந்து.
‘அமோக:’ என்றால் வீண்போகாதது என்று பொருள்.
திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண்போகாமல் பலன்
தருவதால், திருமால் ‘அமோக:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின்
111-வது திருநாமம்.
“அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீண்போகாமல் பலனளிக்கும்படி திருமால் திருவருள் புரிவார்.
“அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீண்போகாமல் பலனளிக்கும்படி திருமால் திருவருள் புரிவார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 01.09.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக